March 12, 2012

என் இளவரசியும், உன் இளவரசனும்

நேரம்: நேற்று இரவு 10.30 மணி

நான்: எப்படி இருக்கிறாள் என் 'இளவரசி'?
நீ: நன்றாக இருக்கிறான் நம் 'இளவரசன்'

நான்: நட்சத்திரங்களை சிறையிடப் போகிறேன், மூக்குத்திக்காக
நீ: நிலவைச் சிறையிடப் போகிறேன், மகுடத்திற்க்காக

நான்: நாட்டியம் பயிற்று வைக்கப்போகிறேன், என் மகளை
நீ: இலக்கியம் பயிற்று வைக்கப்போகிறேன், என் மகனை

நான்: உன் அழகின் இன்னொரு உருவம், என் செல்வி
நீ: உன் வீரத்தின் இன்னொரு உருவம், என் செல்வன்

நான்: என்னைப் போல், அவளுக்காகப் பிறந்திருப்பான் ஒரு கவிஞன்
நீ: என்னைப் போல், அவனுக்காகப் பிறக்கப் போகிறாள் ஒரு தேவதை

நேரம்: இன்று இரவு 10.30 மணி

நான்: என்ன செய்கிறான் நம் இளவரசன்?
நீ: என் அரண்மனையிலிருந்து, நம் அரண்மனைக்கு வந்துவிட்டான்

நான்: என் தோளெனும், பல்லாக்கு அவனுக்காக இங்கே
நீ: உன் தோள் எனக்கு மட்டும், என் தோள் அவனுக்காகவும்

நான்: என்ன பெயர் வைப்பது அவனுக்கு?
நீ: உன் பெயரேதான், வேறு பெயரை உச்சரிக்க எனக்கு விருப்பமில்லை

நான்: உன் முத்தங்களை எல்லாம் நம் மகனே வாங்கிக் கொண்டான்
நீ: அவன் மூத்த மகன் மட்டுமல்ல, முத்த மகனும் கூட

நான்: உன் வருடங்களை, இவனின் வினாடிகள் மறக்கடிக்கின்றன
நீ: உன் காதலும், என் காதலும் இப்போது நம் காதலாய்

நேரம்: பின்னொரு நாள் இரவு 10.30 மணி

நான்: உன் இளவரசன் வந்து விட்டான், என் இளவரசி வர ஒரு வரம் கொடேன்
நீ: என் மௌன சம்மதத்தை, நம் இளவரசனின் அழுகை உடைக்கிறது.. இன்னொரு நாள் பார்ப்போம்...

No comments:

Post a Comment