August 29, 2012

நீ எனும் தவம், காதல் எனும் வரம்
காதல் எனும் தவம், நீ எனும் வரம்
இங்கே வரத்திற்காக தவங்கள் மட்டுமல்ல
தவத்திற்காக வரங்களும் கூடத்தான்
- இது காதல் பிறந்த நிமிடம்
உன் இதழ்கள் மட்டுமல்ல,
உன் பெயர் கூட
என் இதழ்களுக்குத் தேன்தான்
- இது காதல் பிறந்த நிமிடம்
உன் பெயர் சொல்கிறேன்
மொட்டுகள் மலர்கின்றன,
மறுமுறை உன் பெயர் சொல்கின்றேன்
இலைகளும் மலர்கின்றன
- இது காதல் பிறந்த நிமிடம்

August 26, 2012

காதல் கவிஞன் நான்,
என் தாய்மொழி நீ
- எனக்கும் நீயேதானடி அழகு
வனமெங்கும் வண்ணத்துப்பூச்சிகள்
வானமெங்கும் வானவில்கள்
குங்குமத்தில் குளித்த மல்லிகையாய் நீ,
- எனக்கும் நீயேதானடி அழகு
உன்னைப் பற்றி நினைக்கும்
ஒவ்வொரு நிமிடங்களும்
புதிதாய் மலரும் மலர்தான்
- எனக்கும் நீயேதானடி அழகு

August 22, 2012

உன்னை நகல் எடுத்துதான்
தேவதைகளை இன்னமும்
படைத்துக் கொண்டிருக்கிறான் பிரம்மன்
- அழகை அழகாக்கியவள் நீ
உனக்கு மட்டும் எப்படி
கன்னத்தில் வெட்கங்கள் சிவக்கின்றன?
- அழகை அழகாக்கியவள் நீ
அழகு எனும் மொழிக்காக
படைக்கப்பட்ட ஒரே அகராதி நீதான்
- அழகை அழகாக்கியவள் நீ
மலர்களின் இதழ்கள் கொண்டு
செதுக்கப்பட்ட சிலை நீ,
தேன் திருட ஏங்கும் வேடனாய் நான்
- அழகை அழகாக்கியவள் நீ
அழகு எனும் சமுத்திரம் நீ
துடுப்பிழந்த படகோட்டியாய் நான்,
- அழகை அழகாக்கியவள் நீ

August 20, 2012

ஒரு முறையாவது திரும்பிப் பார்த்துவிடு,
என் பத்து விரல் நகங்களும்
ஏற்கனவே கொலை செய்யப்பட்டு விட்டன
இன்னொரு முறை
உதட்டைச் சுழிக்காதே
இடி விழுகின்றன
என் இரவு நிமிடங்களில்
வெட்கமெனும் எழுத்துக்கள்
கொண்ட ஒரு அழகிய மொழி நீ,
காதலெனும் சங்கம் வைத்து
மொழி வளர்க்கும் மன்னன் நான்
- நான் எனும் மருதாணி, நீ எனும் சிவப்பு
வெளிச்சம் அணைந்தவுடன்
வெட்கம் ஒளிர ஆரம்பிக்கிறது,
வெட்கம் அணைந்தவுடன்
நீ ஒளிர ஆரம்பிக்கிறாய்
- நான் எனும் மருதாணி, நீ எனும் சிவப்பு
உனது இதழ் மேகங்களுக்காக
வறண்டு போயிருக்கின்றன
என் நிமிட நிலங்கள்
- நான் எனும் மருதாணி, நீ எனும் சிவப்பு
எனது போன பிறவிக் கவிதைகள்
உனக்கு நிழலாய்ப் போயின,
இந்த பிறவியின் கவிதைகளுக்கோ
உன் நிஜம் மீது ஆசை
- நான் எனும் மருதாணி, நீ எனும் சிவப்பு

August 13, 2012

உன் மருதாணி வெட்கங்கள் மீது எனக்கும்
உன் மருதாணி விரல்கள் மீது என் விரல்களுக்கும்
ஒரு இனிமையான அவா
- நீ எனும் மழை, காதல் எனும் மயில் நடனம் 
நமக்கான காதல் மொழிக்கு
ஏனடி உருவமும் வடிவமும்?
- நீ எனும் மழை, காதல் எனும் மயில் நடனம் 
என் மனதிற்கும் முளைத்திருக்கிறது
வண்ண வண்ணமாய் இறக்கைகள்
- நீ எனும் மழை, காதல் எனும் மயில் நடனம் 
என் கடிகார நிமிட முள் பாடுகிறது
உனக்கான என் காத்திருக்கும் தருணங்களை
- நீ எனும் மழை, காதல் எனும் மயில் நடனம் 

August 12, 2012

சந்திப்புகள் புதிது,
பரிசுகள் மிகப் புதிது
என் முத்தங்களும், உன் வெட்கங்களும்
- இது இன்னொரு மலர் மலரும் நேரம்

August 07, 2012

நீ என்னும் பேராசை மீதுதான்
என் எல்லா ஆசைகளுமே,
- இலவசமாய் இன்னுமொரு முத்தம்
போதி மரமாய் உன் உதடுகள்
ஞானம் பெறும் புத்தனாய் நான்,
- இலவசமாய் இன்னுமொரு முத்தம்
நம் இரவு எனும் காவியத்திற்கு
முன்னுரை எழுதட்டும் உன் உதடுகள்
- இலவசமாய் இன்னுமொரு முத்தம்
தெய்வம் நீ தரும் ஒற்றை வரத்திற்கு
நூற்றியெட்டு மல்லிகைகள் காணிக்கை
- இலவசமாய் இன்னுமொரு முத்தம்
உன் உதடு எனும் இனிப்பைத் திருடும்
ஏழை எறும்புகள் என் உதடுகள்
- இலவசமாய் இன்னுமொரு முத்தம்

August 01, 2012

எண்: 22, முதலாவது தெரு, வசந்தம் காலனி ....


என்னை பற்றி: 

பூக்காரி எனும் வரம் பெற்ற ஒரு மங்கை நான்...
என் மலர்கள் மோட்சம் பெற்ற ஒரு சொர்க்கத்தைப் பற்றி, சில பக்கங்கள் இங்கே...

ஆறு மாதங்களுக்கு முன்:

மாலை தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது
கூடையில் இன்னும் மீதமிருக்கின்றன
மல்லிகைச் சரங்கள்
கண்கள் தேடுகின்றன மலர்கள் சூடும் மங்கைகளை

கால்கள் கடக்கின்றன இந்த வீட்டை,
இந்த மாதமாவது யாராவது குடி வருவார்களா?
என் வீட்டு மல்லிகை மொக்குகளுக்கு
இன்னொரு புது முகவரி கிடைக்கும்

பக்திமானாக ஒருவன் வருவானா?
தினமும் கட்டாயம் மலர்கள் வாங்குவான்.
அழகாய் ஒரு கன்னி வருவாளா?
அவளும் கூட தினமும் மலர்கள் வாங்குவாள்

ஐந்து மாதங்களுக்கு முன்:

அதே வீட்டைக் கடக்கிறேன்.
யாரோ புதிதாய் வந்திருக்கிறார்கள்,
'பூக்காரி' எனும் ஒரு தேன் குரல் வீட்டின் உள்ளேயிருந்து
கூடவே சங்கீதமாய் கொலுசின் பாடல்களும்

யாரிவள்? சொர்க்கத்திலிருந்து வந்திருக்கிறாளோ?
மானிடர்களைத்தானே பிரம்மன் படைக்கிறான்,
தேவதை இவளை யார் படைத்திருப்பார்?
தேவதையின் பின்னே வருகிறான், ஒரு ராஜகுமாரன்

புதுத் தாலியும், புதுப் புடவையும்
அவர்களை அடையாளம் காட்டுகின்றன
மூன்று முழம் போதாது என்கிறாள் அவள்,
பத்து முழமாய்க்  கேட்கிறான் அவன்.

நான்கு மாதங்களுக்கு முன்:

என் பூக்கள் இல்லாத மாலை நேரங்கள்
இப்போதெல்லாம் இந்த வீட்டில் இல்லை
மூன்று முழம் எனும் கணக்கு
இன்னும் குறைந்த பாடில்லை

இவள் வாங்கும் பூக்களைப் பார்த்து
என் கூடையின் மற்ற பூக்கள் பொறாமை கொள்கின்றன
எந்த நேரத்தில் இவள் மலருகிறாள்?
விடை தெரியாக் கேள்வியுடன் என் கூடை மலர்கள்

எனக்கும் கூட அதே கேள்விதான்
மலர்கள் சூடும் மலர் இவள் தான்
மல்லிகைக்கும் இவளுக்கும்
எப்படி வித்தியாசம் காண்பான் இவள் கணவன்?

மூன்று மாதங்களுக்கு முன்:

இன்றைக்கு ஏனோ இவன் மட்டும் வருகிறான் வாசலுக்கு
பத்து முழம் மல்லிகை கேட்கிறான்,
வெட்கமாய்க் காரணம் சொல்கிறான்
'முத்தம் எனும் வேலைக்கு' இதுதான் லஞ்சம்

வாசல் தாண்டும் என்னை
தடுத்து நிறுத்துகிறது அவனின் குரல்,
மீண்டும் அதே பத்து முழம் மல்லிகை
மீண்டும் அதே முத்தக் காரணம்

அடுத்த நிமிடமே, மீண்டும் வருகிறான்
மொத்த பூக்களுக்கும் விலை பேசுகிறான்
பூக்களோடு நானும் சேர்ந்து வெட்கப் படுகிறேன்
பூவுக்கு இங்கே பூக்கள் லஞ்சமாய்

இரண்டு மாதங்களுக்கு முன்:

சில நாட்களில் அவள் மட்டும் தனியாய்,
சில நாட்களில் அவன் மட்டும் தனியாய்,
துணைக்குக் காத்திருக்கிறார்கள்.
என் மலர்களோ நீங்கள் 'துணை சேரக்' காத்திருக்கின்றன

இருவர் இணைந்திருக்கும் போதும் சரி
தனித்திருக்கும் போதும் சரி
என் மலர்கள்தான் உங்களின் காதலைப்பேச,
முழம் முழமாய், இங்கே காதல் மாலைகள்

இவன் வீட்டு பெயர் சொன்னால்தான்
என் வீட்டுச் செடிகள் பூக்கின்றன,
இவன் வீட்டைத் தாண்டும்போதுதான்
மலர்கின்றன என் கூடை மொக்குகள்

ஒரு மாதத்திற்கு முன்:

ஒரு நாள் மூன்று முழம்,
மறுநாள் ஒரு முழம்,
அதற்கடுத்த நாள் மீண்டும் மூன்று முழம்
தினம் தினம் ஒரு காதல் கதை

வெள்ளையாய் மலர்ந்து
அவள் வெட்கத்தில் சிவந்து போகின்றன
என் கூடை மலர்கள்.
முழத்தில் ஆரம்பித்து, உதிரிகளில் முடிகின்றன உங்கள் இரவுகள்

பூவோடு சேர்ந்த நாரும்
இங்கே வெட்கப்படுகிறது,
தினமும் மலரும் மலர் இவள்
இவளுக்காக மலரும் மலர்கள், என் மலர்கள்

இந்த மாதத்தில் ஒரு நாள்:

அவள் கூந்தலில் யாருக்கு இடம்?
அவனுக்கும், என் மலர்களுக்கும்
தினம் தினம் இரவுகளில் நடக்கிறது ஒரு யுத்தம்
அவனே தினமும் வெல்கிறான்

இரவுகளில் அவளிடமும்
விடிந்தபின் என் மலர்களிடமும்
வெட்கக் கதைகளைக் கேட்கிறான் அவன்.
இவன் கொஞ்சம் பொல்லாதவன் தான்

மலர்களை வாசம் படிக்கும் பெயரில்
அவளை வசமாக்குகிறான்,
அவளை வாசம் பிடிக்கும் பெயரில்
என் மலர்களை வசமாக்குகிறான் அவன்

இன்று மாலை:

நேரம் கடந்துவிட்டது... என் மலர்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும்...
கால்கள் ஒரு காதல் பயணத்தை ஆரம்பிக்கின்றன 'எண்: 22, முதலாவது தெரு, வசந்தம் காலனி'-யை நோக்கி ....