December 31, 2012

நீ என் காதல், நான் உன் காதல்
நாம் காதலின் மூத்த பிள்ளை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
நீ என் இளவரசி, நான் உன் காதல் மன்னன்
நாம் ஒரு சுயம்வர நாள்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
நீ ஒரு மேகம், நான் ஒரு மாலை
நாம் ஒரு காதல் மழை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
நீ வண்ணம், நான் தூரிகை
நாம் ஒரு காதல் ஓவியம்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்

December 30, 2012

நீ வெட்கம், நான் முத்தம்
நாம் ஒரு கவிதை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்

December 28, 2012

நீ ஒரு எழுத்து, நான் ஒரு எழுத்து
நாம் ஒரு புதுக் கவிதை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
இரவு முழுதும் களவு போயும்,
காலைப் பொழுதுகளில் நான் களவாட
உன்னிடம் எதாவது மீதம் இருக்கத்தான் செய்கிறது
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
விடிந்தால் விடிந்து விட்டுப் போகட்டும்
அடியே, நேற்றைய இரவின்
கணக்குகள் இன்னும் தீர்க்கப்படவில்லை
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 27, 2012

இன்றைக்கு என்னடி
இன்னும் அழகாய் இருக்கிறாய்?
அழகழகாய் ஆரம்பமாகட்டும் இந்த அழகு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 25, 2012

நினைவுகளெங்கும், உன் கனவுகள்
கனவுகளெங்கும், உன் நினைவுகள்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
என் கவிதைகளும்,
நம் காதலும் கலந்த
ஒரு அழகுக் கவிதை நீ
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
மிகச்சிறந்த ஓவியத்தின் நகல், நீ எனும் கவிதை
மிகச்சிறந்த கவிதையின் நகல், நீ எனும் ஓவியம்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்

December 24, 2012

இருளில் ஒளிர்கின்றன உன் வெட்கங்கள்
உன் வெட்கத்தில் ஒளிர்கிறது இந்த இரவு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 23, 2012

குங்குமம் என் மீது ஒட்டிக்கொண்டதில்
அதிகமாய் சிவந்து போனதென்னவோ நீதானடி
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 22, 2012

கிழக்கும் சேர்ந்து
உன்னோடு சிவக்கட்டும்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 20, 2012

என் கவிதைகள் ஒன்று கூட
உன்னைப் போல இல்லை?
நகலெப்படி, உண்மையாகும்?
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
மொழி, வார்த்தை பிறகு கவிதை
அழகு, ஓவியம் பிறகு நீ
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
எல்லையில்லாக் காதல், என் கவிதைகள்
எல்லையில்லா அழகு, நீ
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
என் கவிதைகளை நீ வாசிக்க ஆரம்பிக்கிறாய்
உன்னை நான் வாசிக்க ஆரம்பிக்கிறேன்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்

December 18, 2012

மௌனங்கள் இசைக்கையில்
உன் கொலுசுகளுக்கு என்ன வேலை இங்கே?
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
நீ, நான், நாம் மட்டுமல்ல
தித்திப்பும் கூட இன்னும் கொஞ்சம் தித்திக்கட்டுமே
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 17, 2012

மௌன விரதம் தானே? தாரளமாக நீ இருக்கலாம்
ஆனால், இதழ்களை மட்டும் என்னிடம் கொடுத்துவிடு.
மௌன விரதமிருப்பவளுக்கு, இதழ்கள் எதற்கு?
உனைப் படைத்தான்
என்கிற ஒரு காரணத்திற்காகவே,
நாத்திகன் நான் பிரம்மனைத் தொழலாம்
- காதலின் பேரழகி நீ
தங்கம் உன் நெருக்கமெனும் நெருப்பில்
உருகும் பொற்க்கொல்லன் நான்
- நானும் என் மன நடுக்கமும்

December 16, 2012

தேய்பிறை வளர்பிறை எனும்
நிலவியல் இங்கே இல்லை.
எல்லா நாட்களுமே முழுமதி நாட்கள்தான்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
ஓவியத்தின் மீது ஓவியம் வரைபவன் - நான்
ஓவியம் கொண்டு ஓவியம் வரைபவள் - நீ
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 15, 2012

நேற்றைய நாளின் இறுதி நிமிடத்தின்
நினைவுகளில் ஆரம்பிக்கிறது
இன்றைய நாளின் முதல் நிமிடம்
- சனிக்கிழமை காலை 6.53 மணி

December 14, 2012

எப்போது நடக்கும் அரங்கேற்றம்
என் காதல் சொற்களுக்கு?
- நானும், என் மன நடுக்கமும்

December 13, 2012

நூறு நிமிட சிந்தனை
நூறு முறை ஒத்திகை
நூறு விநாடி பதட்டம்
உன்னிடம் பேசும் ஒரு வாக்கியத்திற்காக.
- நானும், என் மன நடுக்கமும்
கடிகாரத்தை மீட்க
நொடி முள்ளை தானம் கேட்கிறாய்
- இன்னும் எவ்வளவு நாளடி, இந்த மௌனம்?

December 11, 2012

விடியல் வந்து
உனை விடுவிக்கும் வரை
என்னிடமே சிறையிரு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
என்னில் எங்கும் உன் வாசனை
உன்னில் எங்கும் என் வாசனை
இரவு எங்கும் நம் வாசனை
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
இதழ் ரேகைகள் பரவட்டும்
கை ரேகைகள் தேயட்டும்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
வெட்கத்தை ஒளிக்க முனைகிறாய்
உன்னைத் திருடுகிறேன்,
உன்னை ஒளிக்க முனைகிறாய்
வெட்கத்தைத் திருடுகிறேன்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
உன் புடவையின் ஒரு தலைப்பில்
தொலைந்து போகட்டும்
என் அதிகாலையின் அழகு நிமிடங்கள்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 09, 2012

உன் அழகுகள் பெருகட்டும்
என் திருட்டுகளும் வளரட்டும்
யார் தடுப்பார்கள்
இந்தக் காதல் கொள்ளையனை?
- நீயும் நானும், இனிமேல் எதிரிகள்

December 08, 2012

உனக்கு மௌனிக்க மட்டுமே தெரியும்
எனக்குக் காதலிக்க மட்டுமே தெரியும்.
நீ அப்படியே இருந்து போ
நான் இப்படியே இருந்து போகின்றேன்
- நீயும் நானும், இனிமேல் எதிரிகள்
இதழ்களா, வெட்கமா
யாரிடமிருந்து இந்த சத்தம்?
- இன்னும் நீளட்டுமே இந்த முத்தம்

December 07, 2012

மீண்டும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ....


அதிகாலை 3.37 மணி

யாரோ என் செவிகளில், உன் பெயரை மிக மெலிதாய் உரைக்கிறார்கள்....
மெலிதாய் ஒரு மயிலிறகு வருடுகிறது என்னை...
வேகமாய் விழிகளைத் திறக்கிறேன்...

என் செவிகளில் உன் பெயரை உரைத்தவன் எங்கே போனான்?
இன்னொருமுறை உரைக்க மாட்டானா?
விழிகள் உன் பிம்பத்தையும், செவிகள் உன் பெயரையும் தேடுகின்றன

வன்மையான ஒரு ஏமாற்றம், மெலிதாய் பரவுகிறது என் மனதெங்கும்
மெலிதான ஒரு வலி, வன்மையாய் பரவுகிறது என் கனவெங்கும்
வன்மையான காதல், மென்மையான காதலி
மென்மையான காதலி, வன்மையான காதல்

அதிகாலை 3.39 மணி

எங்கிருந்தோ வருகிறது, உன் கொலுசு சத்தமேனும் சங்கீதம்
செவிகளிலும், உறக்கத்திலும் நடக்கிறது ஒரு கலவரம்
விழிகளில் ஒரு வெடிச்சத்தம்

ஏன் நின்று போனது உன் சங்கீதம்?
இன்னொரு முறை வாசிக்கப் படாதா?
என் சரணங்களும், பல்லவிகளும் உன் இசையைத் தேடுகின்றன

பல்லவியின் ஏக்கம், மௌனமாய் சரணமெங்கும்
சரணத்தின் ஏக்கம், மௌனமாய் பல்லவியெங்கும்
பாடலாய்க் காதல், இசையாய்க் காதலி
இசையாய்க் காதல், பாடலாய்க் காதலி

அதிகாலை 3.41 மணி

இந்த முறை உன் பெயரையும், சங்கீதத்தையும்  தவறவிடப்போவதில்லை
கனவுகள் என் விழிகளின் வாசலில் காத்திருக்க ஆரம்பித்தன
உறக்கம் தொலைந்தது, ஏக்கம் பிறந்தது

மௌனம் வீசும் ஒரு நள்ளிரவாய் மனம்
மலரும் மொட்டாய் உன் நினைவு
முழுமதி உனக்கு தவமிருக்கும் வானமாய் நான்

இடது விழியில் ஒரு வலி , அச்சம் எனக்காய்
வலது விழியில் ஒரு வலி, துணை உனக்காய்
அச்ச மேகங்கள், காதல் துளிகள்
காதல் மேகங்கள், அச்சத் துளிகள்

அதிகாலை 3.43 மணி முதல் அடுத்த அதிகாலை 3.35 மணி வரை

நீ,
நீ,
நீயேதான்

அடுத்த அதிகாலை 3.37 மணி

அடுத்த கண்ணாமூச்சி ஆட்டம் ....

December 05, 2012

கவிதை எனும் இரவு,
இரவு எனும் கவிதை,
மொத்தத்திலும் முத்தத்திலும் கவிஞன் நானே
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
பாடவேளை ஒன்று -  நான் மட்டும்
பாடவேளை இரண்டு - நீ
பாடவேளை மூன்று - நான்
பாடவேளை  நான்கு - நீ, நான்
பாடவேளை  ஐந்து - நீ, நான், நாம்
பாடவேளை ஆறு - அதே 'நீ, நான், நாம்'
பாடவேளை ஏழு - அதே 'நீ, நான், நாம்'
- காதல் வகுப்பு - 'இ' பிரிவு
என் தேசம் தொலைந்து போகட்டும்
அதுதான், என் முகவரி நீ இருக்கிறாயே !!
- காதல் வகுப்பு - 'இ' பிரிவு
வண்ணத்துப் பூச்சிகளை சேர்த்துக் கொண்டேன்
என் காதல் கூட்டணியில்,
இனி வானவில் வரைவது ஒன்றும் பெரிதல்ல
- காதல் வகுப்பு - 'இ' பிரிவு

December 04, 2012

களவாடப் போன இடத்தில்
களவு போய் வந்திருக்கிறேன்
- காதல் வகுப்பு - 'இ' பிரிவு

December 03, 2012

நான் தேடிய முதல் நாள் ...

நாவில் சொற்கள் போராட்டம் செய்கின்றன...
என் பேனாவில் எழுத்துக்கள் வன்முறையில் ஈடுபடுகின்றன
இருந்த விரல் நகங்கள் எல்லாம் துண்டிடப்பட்டிருந்தன...
இதயத்தில் ஒரு போர்க்களம் ஆரம்பித்திருந்தது....

சில நிமிடங்களிலேயே என் வெற்று வானம், அடை மழைக்குத் தயாரானது
சில நிமிடங்களிலேயே என் வெற்றுக் கிரகம், காதல் ஈர்ப்பு விசைக்குத் தயாரானது
சில நிமிடங்களிலேயே என் வெற்று எழுத்துக்கள், இலக்கியம் படைக்கத் தயாரானது
சில நிமிடங்களிலேயே என் வெற்று இதயம், அவளுக்குக்காக துடிக்கத் தயாரானது

என்ன நடக்கிறது எனக்குள்?
என்ன நடக்கிறது இங்கே?
என்ன  நடக்கிறது என் செல்களில்?
என்ன நடக்கிறது என் வினாடிகளில்?

இன்னும் ஓரடி நெருங்கி வராதே....
எரிந்து போக என்னிடம் மீதம் ஏதுமில்லை
இன்னும் ஓரடி விலகிப் போகதே
இறந்து போக என்னிடம் மீதம் ஏதுமில்லை

யாராவது தைரியம் கொடுங்களேன்,
என் காதலை அவளிடம் சொல்ல
யாராவது சொற்கள் கொடுங்களேன்
என் காதலை அவளிடம் படைக்க

யாராவது வர்ணங்கள் கொடுங்களேன்
என் காதலை அவளிடம் வரைய
யாராவது எனைத் தேடிக் கொடுங்களேன்
என்னை அவளிடம் சேர்க்க...

ஆண்மகன் நான் தைரியம் தேடுகின்றேன்
அரசன் நான் காவலுக்கு ஆட்கள் தேடுகின்றேன்
பிரம்மன் நான் துணைக்கு படைப்புகள் தேடுகின்றேன்
இறைவன் நான் வரத்திற்கு பக்தன் தேடுகின்றேன்

இந்த மணி - இந்த மௌனம்
இந்த நேரம் - இந்த நடுக்கம்
இந்த விநாடி - இந்த குதூகலம்
இந்த நாள் - நான் தேடிய முதல் நாள்

December 01, 2012

முதல் திருட்டு...

சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன், யாரும் என்னைக் கவனிக்கவில்லை...
மெதுவாய் என் விழிகளில், ஒரு கள்ளத்தனம்  குடியேறுகிறது..மெதுவாய் உன்னை நோக்கி கண்களை மட்டும் திருப்புகிறேன்...
ஒரு விழி உன்னை நோக்கியும், மறு விழி என் சுற்றத்தையும் கணிக்கிறது... யாரும் என்னைக் கவனிப்பதாய்த் தெரியவில்லை...

அவசர அவசரமாய், உன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டேன்...
வினாடிக்கும் குறைவான நேரத்தில், உன் முகம் என்னில் பதிந்து போனது...
நீ இமைகளை மூடித் திறக்கும் நேரத்திற்குள் மிக மெல்லிய ஒரு பூகம்பம் என்னைத் தாக்கிப் போனது... முதல் திருட்டில் வெற்றி கண்டேன்... இன்னொரு திருட்டிற்க்குத் தைரியம் வந்து விட்டது...

விழிகளில் புதிதாய் கொஞ்சம் தைரியமும், திமிரும் பிறந்துவிட்டது... இருந்த போதும், உன் விழிகளை நேருக்கு நேராய் பார்க்கும் தைரியம் பிறக்க வில்லை...மீண்டும் ஒரு முறை என் சுற்றத்தைப் பார்த்துக் கொள்கிறேன்... என்னை யாரும் கவனிப்பதாய்த் தெரியவில்லை.. கூடிப் போன தைரியத்தோடு உன்னை நோக்கி தலை திருப்புகிறேன்...

முதன் முறையாக அரை தைரியத்தோடு, உன் முழு முகம் காண்கிறேன்...
வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு அணு உலை வெடித்த ஒரு அனுபவம்..
மிக மெதுவாய் உன் இதழ்களைச் சுழித்தாய், மிக அவசரமாய் வெடித்துப் போனேன்....
கண்கள் வழியே, இதயத்தில் நுழைந்து போனது ஒரு நெருப்புத் துண்டு... என் உடம்பின் ஒவ்வொரு செல்லும் மறுஜென்மம் எடுத்தன....
திருடனுக்கு தேள் கொட்டுவதென்ன, இங்கே நெருப்பே பற்றிக் கொண்டது... சில பல ஜென்மங்கள் வேண்டும், நான் பழைய நிலைக்குத் திரும்ப....

தேனீக்களுக்குப் பயந்தால் தேன் கிடைக்குமா? அடுத்த திருட்டுக்குத்  தயாரானேன்...
இந்த முறை நிறைய தைரியம், இன்னும் நிறைய ஆர்வம், இன்னும் நிறைய நிறைய எதிர்பார்ப்பு..இப்போது சுற்றத்தைப் பற்றிக் கவலையில்லை... என்ன வேண்டுமானாலும் நடக்கட்டுமே...
உன்னைத் தவிர யாரும் என் விழிகளின் எல்லைகளில் இல்லை... ஒரு புன்னகையோடு, மெதுவாய் உன் மேல் குவிகிறேன்...
இன்னுமொரு நிலநடுக்கத்திற்கு என் இதயமும், இன்னுமொரு போருக்கு என் செல்களும் தயாராகிவிட்டன...

ஒரு மந்திரப் புன்னகை உன் இதழில்.... பக்தன் எனக்கு வேறன்ன வேண்டும்?
இமைகளை திறக்கிறாய், இதழ்களை மூடுகிறாய்.. சுவாசிக்க மறக்கிறேன்...
இமைகளை மூடுகிறாய், இதழ்களைத் திறக்கிறாய்... சுவாசிக்கவும் மறக்கிறேன்...

மிக மெல்லிய ஒரு பயம் எனைச் சூழ்கிறது.. உன்னை வாசிக்கும் என்னை யாராவது வாசிக்கிறார்களா? ஒன்றும் தெரியாதது போல், இயல்பு நிலைக்குத் திரும்புகிறேன்...

என்ன நடந்தது இந்த மூன்று வினாடிகளுக்குள்?
திருவிழா முடிந்து போன ஒரு கிராமமாய், என் மனது...
ஒரு தீபாவளி முடிந்து போயிருந்தது...

அழகி நீ, மிகச் சாதாரணமாய்  ஒரு போரைத் துவக்குகிறாய்...
இன்னும் மிகச் சாதாரணமாய் ஒரு பூகம்பம் படைக்கிறாய் ...
இன்னும் மிக மிகச் சாதாரணமாய் என்னைத் திருடிப் போகிறாய்

திருடன் நான் இப்படியே இருந்து கொள்கிறேன்... அழகி நீயும் இப்படியே இருந்து போ...
என் திருட்டும், உன் அழகும் இப்படியே வளரட்டும்....

காத்திருக்கிறேன் உன் மொத்த அழகையும், சத்தமில்லாமல் திருடும் ஒரு நாளுக்காக...
நினைவு இருக்கட்டும்.... அந்த நாள் மிகத் தொலைவில் இல்லை....