இன்னும் கொஞ்ச நேரம்
இவள் என் அணைப்பிலேயே இருக்கட்டுமே
கதிரவனே, கொஞ்சம் தாமதிக்கக் கூடாதா?
இன்னுமொரு இரண்டு நிமிடம் கட்டிக்கொள்கிறேன்
இவள் என்னைச் சுற்றிக்கொண்டிருக்கின்றாள்
இவளின் புடவையை
நான் சுற்றிக்கொண்டிருக்கின்றேன்.
கட்டிக்கொள்வதை கட்டிக்கொண்டேன்
எப்போதும் போல
அதே மூன்று கூந்தல் இழைகள்
என் முகம் மீது பரவிக்கிடக்கின்றன.
எங்கெங்கும் மல்லிகை வாசனை
இரவெல்லாம் நாம் பேசிய கதைக்கு
இந்த பௌர்ணமி நிலவே சாட்சி.
கதை இல்லா இரவுகளில்
பாவம் நிலவு தேய்ந்து போகத்தான் செய்கின்றது
என் கன்னங்கள் சிவந்து போயிருக்கின்றன
அவளின் குங்குமச் சிவப்பா?
இல்லை இதழ்ச் சிவப்பா?
அறையெங்கும் மீத வெட்கங்கள்
இவளுக்கு கனவுகள் வருவதில்லையா?
கனவுகளில் நான் வருவதில்லையா?
இப்போதெல்லாம் நடு இரவுகளில்
என் பெயரை முணுமுணுப்பதே இல்லை
மூச்சுக்காற்று மோதிக்கொள்ளும் இடைவெளிதான்,
எனினும் விழிகளில் தேடாமல்
விரல்களினால் தேடுகின்றாள்.
அரையடிக்குள் ஒரு கண்ணாமூச்சி
வெட்க ராகங்கள் படைப்பவள் இவள்
வெட்கியே ராகங்கள் படைப்பவளும் இவளே.
இவளை இசைக்கப் படைக்கப்பட்ட
ஒரு அற்புதக் கலைஞன் நான்
உன்னை ஏமாற்றுவது
அவ்வளவு சுலபம் இல்லை போலும்,
முழு நித்திரையிலும்
என் கள்ளம் கண்டுகொள்கிறாய்
இப்போது புதிதாய் தொடங்குவதா?
இல்லை, இரவின் மீதத்தை தொடரவா?
இது வழக்கம்போல மனதோடு மல்லுக்கட்டும் நேரம்
நேரம் காலை 6.22
😍🥰
ReplyDelete🥰😍🤩
ReplyDelete