November 27, 2008

வானொலியில் சங்கீதம்
வருவதுதானே நியதி?
உன் வீட்டு வானொலியைக் கேட்டால்
நீ பாடுவதைத்தான் சங்கீதம் என்கிறது 

November 25, 2008

புவியைத் தாங்கும்
நிலம் போல்
உன் நினைவுகளை
தாங்குகிறேன் நான்
எங்கும் பரவி
சுவாசத்தில் கலக்கும் காற்றைப்போல்
எங்கும் நிறைந்து
என்னில் கலந்துபோயிருக்கிறது
உன் இனிய நினைவுகள்
ஆகாயம் எங்கும்
நிறைந்து போன நீல நிறமாய்
என்னில் நீ எங்கும் பரவிக்கிடக்கிறாய்
அக்னி சாட்சியாக
நடக்கும் எல்லா நிகழ்வுகளைப் போல்
நம் காதல் சாட்சியாக
நமக்குள் எல்லாமே நடக்கிறது
நான்கு பக்கம்
நீரால் சூழப்பட்டிருக்கும் தீவைப் போல்
எல்லாப் பக்கமும்
உன் நினைவுகளால்
சூழப்பட்டிருக்கிறேன்

November 24, 2008

நீ மௌனமாய் இருக்கிறாய்
என்பது பிடிக்காமல் தான்
வானம் இவ்வளவு சத்தமாய்
இடி இடிக்கிறது
உன்னை புகைப்படம் எடுக்க
வானமும் போட்டிபோடுகிறதோ?
எங்கிருந்து வருகிறது
இவ்வளவு மின்னல்கள்?

November 23, 2008

நீ வைக்கும் மருதாணி
சிவப்பு நிறத்தில் சிவப்பதால்
மற்ற நிறங்களுக்கு சிவப்பு நிறத்தின்மேல்
லேசான கோபம் இருக்கத்தான் செய்கிறது
உன் பச்சை நிற உடையைப் பார்த்தும்
எனக்கு வந்து போனது பச்சை காமாலை,
பார்ப்பதெல்லாம் பச்சையாய்த் தெரிகிறது
உன் சிவப்பு கன்னங்களில்
இருந்து எடுத்த நிறம்தான்
வெட்கம் என்னும் ஓவியத்திருக்கு
வண்ணம் ஆகிறது
உன் கருமை நிற கூந்தலின்
இருளுக்குள் தான்
நாம் தேடும் வெளிச்சங்கள்
இருக்கின்றன
நீ என்ற
ஒற்றை நிறத்திலிருந்து வந்ததுதான்
நான் என்ற வானவில்
கல்லூரி கணினி ஆய்வகம் -
இயந்திரத்தின் மென்மொழியை
எளிதில் கையாளும் நான்,
உன் விழி பேசும் மொழியில்
தடுமாறித்தான் போகின்றேன்

November 19, 2008

பரண் மேல் இருக்கும்
உன் வீட்டு பழைய வானொலியும்
நானும்தான்
உன் பாடலை
முதன் முதலில் காதலித்தவர்கள்
நீ செல்லமாய்
மண்டையில் தட்ட வேண்டும்
என்பதற்காகவே
அடிக்கடி இடையில்
தன் பேச்சை நிறுத்திக்கொள்கிறது
உன் வீட்டு வானொலி
நீ உடன் பாட ஆரம்பித்தவுடன்
வானொலி வெட்கப்பட ஆரம்பிக்கிறது
வானொலியில் சங்கீதம்
வருவதுதானே நியதி?
உன் வீட்டு வானொலியைக் கேட்டால்
நீ பாடுவதைத்தான் சங்கீதம் என்கிறது
இருக்கும்
எல்லா வானொலி நிலையங்களையும்
விட்டு விட்டு
நேற்று நீ பாடிய பாடலை
திரும்பப் பாடிக்கொண்டிருக்கிறது
உன் வீட்டு வானொலி

November 18, 2008

உன்னோடு வரும்
இந்த 30 நிமிட
பேருந்து பயணம்தான்
என் முன் ஆறு ஜென்ம
தவங்களின் வரம்
காதலின் சின்னம்
இதயம் என்று யார் சொன்னது?
உன்னையும் என்னையும்
சேர்த்து வைத்த இந்த பேருந்துதான்
இனிமேல் காதலின் சின்னம்
நீ தோள் சாய்ந்து தூங்கவாவது
இந்த பேருந்து பயணம்
நீண்டு போகாதா?
ஜன்னல் இருக்கையில்
அமர்ந்திருக்கும் நீ
உன் கூந்தலை காற்றில் பறக்கவிட்டு
என்னை பின் தொடர வைக்கிறாய்
பேருந்தும் காற்றும்
ஏதோ திசையில் இருக்க
என் நினைவுகள் மட்டும்
உன்னோடு பயணம் செய்யும் திசையில்

November 17, 2008

உன் ஒரு முக தரிசனத்திற்கு
காத்திருக்கும் என்னைப்பார்த்து
உன் பல முகங்களை
தினம் ரசிக்கும் கண்ணாடி
ஏளனம் செய்கிறது
நேற்று வைத்த பொட்டை
இன்று காலையில்
கண்ணாடியில் ஒட்டவைத்து
நாளை வந்து என்னை திருடிப்போகவைக்கிறாய்
உன் வீட்டு
கண்ணாடி முன் நின்று
உன் அழகை சரிபார்க்கிறாய்,
அதுவோ உன் அழகை
நகலெடுத்து அதுவும் அழகாகிப்போகிறது
எனக்கு வரதட்சணையாய்
உன் வீட்டுக் கண்ணாடிதான் வேண்டும்
நான் முதல் முறை
உன் வீட்டிற்கு வந்தபோது
அதுதான் எனக்கு உன்னைக்காட்டியது
நீ ஒவ்வொருமுறை
கடந்து போகும்போதும்
உன்னை பிம்பகளாக
உன் வீட்டு கண்ணாடி திருடிக்கொள்கிறது

November 13, 2008

நீ வெள்ளிக்கிழமை மட்டும்
சூடும் மல்லிகை பூக்களில்தான்
என்னுடைய
மற்ற வார நாட்கள் பூக்கின்றன
வெள்ளிகிழமைக்காக சனிக்கிழமை
தவம் இருக்கிறதோ இல்லையோ
உனக்காக
ஒவ்வொரு வெள்ளிகிழமையும் தவம் இருக்கிறது
உன் கூந்தல் ஈரத்துளிகளில்
நானும் இந்த வெள்ளிக்கிழமையும்
நனைந்து போகிறோம்
வாரம் முழுதும் பூக்கும் பூக்கள்
இந்த வெள்ளிக்கிழமைக்காகவும்
உனக்காகவும் தான் காத்திருக்கின்றன
இந்த வாரத்திற்க்கு
வெள்ளிக்கிழமை வந்துவிட்டது.
வெள்ளிக்கிழமைக்கோ
உன் தலைக்குளியல் வந்துவிட்டது

November 12, 2008

உன் இரு கரங்களையும்
இந்த உதிர் பூக்களையும் வைத்து
நீ மாலைகள் என்னும்
சிற்பங்களை செதுக்கிக்கொண்டிருக்கிறாய்
ஒரு முழம் பூவை
நீ கட்டி தலையில் சூடும் நேரத்தில்
என்னை நீ
ஓராயிரம் முறை கூட சூடிக்கொள்ளலாம்
நீ கட்ட ஆரம்பித்ததோ பூ மாலை
கட்டிமுடித்ததோ என்னவோ
ஒட்டு மொத்த என்னைத்தான்

November 11, 2008

நீ இதழ்களால் பேசும்
இந்த இரண்டு வார்த்தைகளும்
உன் இமைகள் பேசும்
ஆயிரம் வார்த்தைகளும் ஒன்றேதான்
உன் இந்த
ஓரிரண்டு வார்த்தைகளில்தான்
எனக்கான
உன் ஒட்டு மொத்த காதலும்
ஜீவித்து இருக்கிறது
தன் மழலை மொழியில்
தாயுடன் பேசும் குழந்தை போல
என்னுடன் நீ உன்
வெட்க வார்த்தைகளில் பேசுகிறாய்
என் ஆயிரம் சொற்களின்
தவமே நீ சினுங்கிப்பேசும்
இந்த ஒற்றைச் சொல்தானடி
என் ஒவ்வொரு கவிதைக்கும்
நீ பதிலாய் தருவது
நீ சினுங்கிப் பேசும்
உன் அகராதிச் சொற்களையே

November 10, 2008

நீ இல்லாத ஒரு நாளை
தாங்கமுடியாமல் போகும் என்னால்
இந்த ஜென்மத்திருக்கும்
அடுத்த ஜென்மத்திருக்கும்
வரும் இடைவெளியில் நிச்சயமாய்
உன்னை பிரிந்திருக்க முடியாது
கடந்த வாரம், நான்
ஒரு நிமிடம் தாமதமாய் வந்ததற்கு
நேற்று, நீ
ஊருக்கு போய் தண்டனை கொடுத்துவிட்டாய்
நீ தண்ணீர் ஊற்றாத
நேற்று ஒரு நாளில் மட்டும்
பூக்காமல் போன பூக்களின் எண்ணிக்கை
ஒரு கோடி இருக்கும்
சூரியன் உதிக்காமல்
இருந்த நாள் கூட இருக்கும்
சூரியன் இல்லாமல் போகும் நாள்
நீ ஊருக்கு போன நாள் தான்
இப்போதுதான் தெரிகிறது
ஒரு நாளின் முழு நீளம்
நீ இல்லாமல்

November 06, 2008

உன்னோடு இருக்கும்
அழகான நிமிடங்களில்
நீ செய்யும் வேலையே ரசிப்பது
நான் விரும்பும் நிமிடங்கள்
நீ சுத்தம் செய்து முடித்து
ஓய்வாய் அமரும்போதுதான்
என் தேவதையின்
இன்னொரு முகத்தை நான் பார்க்கிறேன்
நீ வீட்டை சுத்தம் செய்யும் நேரத்தில்
நான் செய்யும் வேலைகளால்
நான் அழுக்காகிப் போவோம்
நீ சுத்தம் செய்யும் வீட்டில்
நான் குப்பை போடாவிட்டால்
வீடு எப்படி அழகாய் இருக்கும்?
சொர்க்கத்திலிருந்து வந்த நீ
உன் அழகான வேலைகளால்
நம் வீட்டை
சொர்க்கமாய் மாற்றிவிட்டாய்

November 05, 2008

நீ நீரெடுக்க ஆற்றுக்குள்
இறங்கும் போதெல்லாம்
ஆறு உன் அழகைக் கொஞ்சம்
திருடிக்கொள்கிறது
நீ வந்து தண்ணீர்
ஊற்றினால் மட்டும்தான்
இந்த ஆற்றங்கரை பிள்ளையார்
மற்றவர்களுக்கு வரம் தருகிறார்
உன் காலில் ஒற்றிக்கொண்டு
உன் வீடு வரை வரும்
ஆற்று நீர்த்துளியை போல்
என் மனதும்
உன்னோடு ஒட்டிக்கொண்டு போகிறது
உன் கொலுசின் இசை கேட்டு
ஆறும் கூட தன் ஓசையை நிறுத்தி
மௌனமாகிப்போகிறது
ஆற்றங்கரைக்கு நீ வந்து
உன் குடத்தை பாதியாகவும்
என் மனதை முழுதாகவும்
நிரப்பி விட்டு போகிறாய்

November 04, 2008

நீ வெட்கப்பட்டு சொல்லும்
சம்மதத்திற்க்காக
என் காதல் வெட்கமில்லாமல்
உன் முன் மண்டியிட்டு கிடக்கிறது
போரில் நிராயுதபாணியாய் நிற்கும்
மன்னன் போல்
உன் சம்மதம் சொல்லும்
கண்கள் முன் நின்றுபோகிறேன்
உன் சம்மதம்
என்ற புள்ளியை மையமாகக்கொண்டு
வரையப்பட்ட வட்டம்தான் என் நினைவுகள்
என்னுடைய எல்லா நிமிடங்களையும்
உனக்கே உயில் எழுதித்தருகிறேன்
உன் ஒற்றை சொல் சம்மதத்தை
மட்டும் எனக்குக் கொடு
உனக்காக நான் இருக்கும்
தவங்களுக்கு நீ கொடுக்கும் வரம்
உன்னுடைய சம்மதமாக இருக்குமா?

November 03, 2008

பிரம்மனே,
உன் வெள்ளை உடை தேவதைகளை விட
என் கருப்பு உடை தேவதைதான் அழகு.
நீல நிற உடைக்குள்
ஒளிந்து வருவது வான் நிலா,
கருப்பு நிற உடைக்குள்
ஒளிந்து வருவது என் நிலா
என் வண்ணமயமான வாழ்க்கைக்கு
உன் இந்த கருப்பு நிற
சம்மதமே போதும்
மழையில் தோன்றும்
ஏழு நிற வானவில்லும் கூட
உன் கருப்பு நிற உடையின்
முன் நிறம் மங்கிப்போகும்
பூக்கள் கருப்பு நிறத்தில்
பூக்காது என்று யார் சொன்னது?
உன் உடையின் நிறம் பார்த்துமா
இந்த கேள்வி?