April 22, 2012

என் நீயும், உன் நானும் # 1000

கிட்டத்தட்ட 50 மாதங்கள்....

தபூ.சங்கரின் கவிதைகளில் ஆரம்பித்த இந்த(க் காதல்) பயணம், இப்போது 1000 எனும் ஒரு இடத்தை மிக மன நிறைவாய் கடந்து செல்கிறது...

காதல் பெண்ணொருத்திக்கு
நான் கவிதை வாசிக்க கற்றுக் கொடுத்தேன்...
அவள் எனக்கு கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தாள்..
காதல் கவிதையானது...
பின் வந்த நாள்களில் கவிதைகளே காதலானது...

என் மின்னஞ்சல் பதிவுகளை பத்திரமாய் பாதுகாத்த என் தோழி ஒருத்தி, நிறைய எழுதச் சொல்லி 'என் நீயும் உன் நானும்' எனும் தொகுப்பிற்கு பிள்ளையார் சுழி போட்டாள் ...முகநூல் நண்பர்கள் இன்னும் நிறைய எழுத வைத்தார்கள்...

மிக்க மகிழ்ச்சியான இந்த தருணத்தை தோழர்கள் / தோழிகள் உடன் சேர்ந்து பங்கிட்டுக் கொள்கிறேன்...

இதோ என்னுடைய 1000 வது காதல் ஓவியம்....

நம் அழகுக் காதலின்
அழகு வினாடிகள் எனும் புள்ளிகளை இணைத்து
இங்கே வரையப்படுகிறது ஒரு பூக்கோலம்,
என் நீயும் உன் நானும், இனி நீ நம் நாமாய்
இதோ கேட்கிறது 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'

April 19, 2012

என் நீயும், உன் நானும் # 999
----------------------------------------------------------------------------------------------
அடுத்த ஜென்மத்திலும்
உனக்கே காதலனாய்ப் பிறக்கும்படி
அபத்தமாய் ஒரு வரம் கேட்க மாட்டேன்..
உனக்கு மகனாய்ப் பிறக்கும் வரம் வேண்டும்
உன் முதல் அமிர்த முத்தத்திற்காக
முன்னூறு மாதங்களை வீணடிக்க விரும்பவில்லை
----------------------------------------------------------------------------------------------

April 16, 2012

உன் உதடுகள் எனும்
மின்சாரம் தாக்கப்பட்டிருக்கிறேன்,
மீண்டும் உன் உதடுகள்தான் வேண்டும்
முதலுதவி மருத்துவம் செய்ய
உன்னுடைய எந்த முத்தம் தித்திப்பு?
என் கன்னங்களிடையே ஒரு பட்டிமன்றம்,
பரிதாமாய் என் உதடுகள்.
என் வானமெங்கும்
உன் வானவில்லின் பிம்பங்கள்,
இது உன் முத்தமெனும் மழை நேரம்
சுவரெங்கும் நம் இருபது விரல்கள்
வரைந்த ஓவியங்கள்,
நீ இல்லாததால், ஓவியங்களோடு சேர்ந்து
ஏங்குகின்றன என் பத்து விரல்களும்
நீ இல்லாத நம் வீட்டு முற்றத்தில்
விழும் மழைத் துளிகளில்,
கரைந்து கொண்டிருக்கின்றன
என் தனிமை நிமிஷங்களும், வெறுமை மனமும்
காரணமே இல்லாமல் கோபிக்கிறாய்,
காரணமே இல்லாமல் வெட்கப்படுகிறாய்.
காரணமே இல்லாமல்
அழகாக சிவந்தும் போகிறாய்

April 15, 2012

முன்னொரு பகல்:
ஒரு முத்தம் கொடேன்,
நான்கு புதுப் புடவைகள் பரிசளிக்கிறேன்
பின்னொரு இரவு:
நூறு முத்தம் கொடு
இந்தப் புடவையை திருப்பித் தருகிறேன்
உன் உயிர்க் கல்லும்
என் உயிர்க் கல்லும்
உரசிக் கண்டுபிடிக்கப்பட்ட
ஒரு நெருப்புதான் இந்தக் காதல்

April 12, 2012

உறக்கம் சிதறும் அந்த சிறு கணத்திலும்
படுக்கையில் உன்னைத் தேடும்
என் கரங்களுக்கு இன்னும் தெரியவில்லை,
நீ தகப்பன் வீட்டுக்குப் போயிருப்பது
நம் வீட்டு நாள்காட்டியின்
நேற்றைய நாளின் தாளைக் கிழிக்கும் போது
ஒரு வித வலியை உணர்கிறேன்,
நேற்று உன் முத்தங்கள் இல்லை
பொழுது விடிந்தும் முடியவில்லை,
நீ மடித்து வைத்துவிட்டுப் போன உன் புடவையிடம்
நான் பேசிக்கொண்டிருக்கும் கதைகள்
உன் உதடுகள் இல்லாமல் என் கன்னங்களும்
உன் கன்னங்கள் இல்லாமல் என் உதடுகளும்
ஏக்கமெனும் வறட்சியால் வாடுகின்றன.
எப்போது திரும்ப வருகிறாய் என் மழையே?

April 11, 2012

நீ இல்லாத நாட்களில்
இரவுக்கு ஆயுள் கூடிவிடுகிறது,
எனக்கு ஆயுள் குறைந்துவிடுகிறது

April 09, 2012

விடிந்ததும் எங்கே ஒளித்து வைக்கிறாய்
உன் மிச்ச வெட்கங்களை?
அருகில் கிடக்கும் மல்லிகை மலர்களில்
பகுதியைத்தான் காண முடிகிறது
உன் மூச்சுக் காற்று எனும் நெருப்பால்
பற்றி எரிகின்றன என் வனங்கள்,
என்னை அணைக்கவிட்டாலும் பரவாயில்லை,
என் நெருப்பை அணைத்துப் போயேன்
உன் புடவையில் முகம் துடைக்கும்
பழக்கத்தை நம் மகன் மறந்த போதிலும்,
உன் புடவையில் தலை துவட்டும்
பழக்கம் எனை விட்டுப்போக மறுக்கிறது
உன் முத்தம் எனும் முன் அட்டைக்கும்
என் முத்தம் எனும் பின் அட்டைக்கும்
இடைப்பட்ட வண்ணப் பக்கங்கள் 'நம் முத்தங்கள்'
எப்படி இருந்தது என் முதல் முத்தம்?
பதினான்கு ஆண்டுகள் ஆகியும்
வெட்கத்தைத் தவிர வேறு பதிலில்லை உன்னிடம்
ஓராண்டு காதல் வாழ்க்கை, பத்தாண்டு திருமண வாழ்க்கை
இவற்றில் எது வேண்டும் நமக்கு?
மனைவி உனக்கும், காதலன் எனக்கும் நடக்கும்
நம் பட்டி மன்றங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை
மனைவி நீ வாசிக்கும்
நம் பழைய காதல் கடிதங்கள்,
உன் குரலில் இன்னும் அழகாகின்றன.
அழகுக் கடிதங்கள், இப்போது பேரழகாய்
மணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் கூட
கனவில் நீ இன்னும் காதலியாகத்தான் வருகிறாய்.
கனவில் வரும் காதலி உன்னிடம் முத்தங்கள் வாங்குவது
இன்னும் கனவாய்த்தான் இருக்கிறது

April 05, 2012

உன் இதழ் முத்தங்களுக்கு லஞ்சமாய் சில மலர்கள்,
உன் கூந்தல் மலர்களுக்கு லஞ்சமாய் சில முத்தங்கள்
உன் காதலுக்கும் கூட லஞ்சமாய் என் காதல்
இந்த முத்தத்திற்கும், அடுத்த முத்தத்திற்கும்
இடையே இருக்கும் சிறிய இடைவெளியில்
முடிந்தும் மடிந்தும் போகட்டும்
நமக்குள்ளான அத்தனை பிரிவுகளும்
தேனீக்களாய், உன் மௌனங்கள்
மன வலி இல்லாமல்
காதலெனும் தேன் இல்லை
என் மௌனங்களாயினும் சரி
உன் மௌனங்களாயினும் சரி
உடைந்து போவதென்னவோ நான்தான்

April 04, 2012

இன்னும் சில நாட்களில் ....

தனியாய்ப் போ என் சபிக்கப்பட்ட
என் கவிதைகளுக்கு விமோசனங்கள்
இன்னும் சில நாட்களில்

பாலைவனத்தில் முளைத்திருந்த
என் பாதைகளுக்கு வசந்த காலம்
இன்னும் சில நாட்களில்

என் பூந்தோட்டத்தில் பிறந்த
என் மொட்டுகளுக்கு மலரும் காலம்
இன்னும் சில நாட்களில்

முப்பது தேய்பிறையில் வாடிய
என் நிலவுக்கு வளர்பிறைகள்
இன்னும் சில நாட்களில்

நாத்திக மத குரு எனக்கு
காதல் தெய்வத்திடம் தினம் ஒரு வரம்
இன்னும் சில நாட்களில்

எனது பரம்பரையில்
முதல் குயிலின், முதல் பாடல்
இன்னும் சில நாட்களில்

எனது முன்ஜென்ம தவங்களுக்கு
ஒட்டுமொத்தமாய் வரங்கள்,
இன்னும் சில நாட்களில்

என் ஏக்கங்களும், உன் மௌனங்களும்
சுக்குநூறாய் உடையப்போகின்றன,
இன்னும் சில நாட்களில்

உன் இதழெங்கும் முத்தங்கள்
என்னில் எங்கும் உன் இதழ் ரேகைகள்
இன்னும் சில நாட்களில்

உன் வெட்கங்களில்
என் ரசனைகள் வரையும் ஓவியங்கள்
இன்னும் சில நாட்களில்

இன்னும் சில நாட்களில் எனும் என் இரவு
இன்னும் சில கணங்களில் எனும் விடிவாய்
இன்னும் சில நாட்களில்

ஆகமொத்தத்தில் வரப்போகிறாள்
என் கவிதைகளுக்கெல்லாம் சொந்தக்காரி,
இன்னும் சில நாட்களில்
இந்த முறையும் வெறும் பித்த வாந்திதான்,
மாமியாருக்கு பயப்படும்
ஒரு மருமகள் என் காதல்
- இது காதல் எனும் ஒரு மன நடுக்கம்
அறுவடை நாளுக்கு முன் இரவில்
விவசாயை மிரட்டும் இடியைப் போல்
என்னை மிரட்டுகிறது உன் மௌனம்
- இது காதல் எனும் ஒரு மன நடுக்கம்
நீயாவது பரவாயில்லை
ஆற்றில்தான் இறங்கச் சொல்கிறாய்
இந்தக் காதல் மண் குதிரையோடு
கடலிலே இறங்கச் சொல்கிறது
- இது காதல் எனும் ஒரு மன நடுக்கம்

April 03, 2012

சூரியன் நான், நிலவாகிறேன்
உன் புடவைத் தலைப்பில் ஒளியும்போது,
நிலவு நீ, சூரியனாகிறாய்
என்னில் நீ ஒளியும்போது
உதித்தலில் சில அஸ்தமனங்கள்
அஸ்தமனங்களில் சில உதித்தல்கள்,
மன்னிக்கவும், உன் வெட்கத்தை பற்றி
எனக்கு எப்படியும் வர்ணிக்க வரவில்லை
வெட்கமெனும் மின்சாரத்தில்
எரியும் ஒரு விளக்கு நீ,
மின்சாரம் அணைந்தபிறகும் கூட
மிக அழகாய் எரிகிறாய்
உன் வெட்க மயில்கள் நடனமாட
ஆரம்பித்துவிட்டன,
இனி முத்த மழைதான்

April 02, 2012

என் காதலுக்கும்
உன் ஜாதகக் கட்டங்களுக்கும்
இடையே நடக்கும் போரில்
பலியாகிக் கொண்டிருக்கின்றன என் அணுக்கள்
இன்றைக்கு மட்டும் எப்படி
என் மல்லிகைச் செடி அழகாய்த் தெரிகிறது?
மல்லிகையோடு காதலும்
அங்கே பூத்திருக்கிறது
தேனில் ஊறிய நெருப்புத் துண்டாய்
இந்தக் காதல்,
நெருப்பில் வார்க்கப்பட்ட தேன் துண்டாய்
உன் மௌனம்