October 29, 2008

நம் வீட்டிலிருக்கும் இந்த கிளிதான்
ஜோசியனின் சீட்டை எடுத்து
நம்மை சேர்த்து வைத்தது.
நம்மைச் சேர்த்ததோடு
நம்மோடு சேர்ந்தும் விட்டது
நீ சிவப்பாய் வெட்கப்படுவதைப்பார்த்து
ஐந்து நிறங்களில் வெட்கப்படுகிறது
நீ வளர்க்கும் உன் வீட்டு பஞ்சவர்ணக்கிளி
நீதான் என் வாழ்க்கையின்
ஜோசியக்காரி,
நான்தான் நீ வளர்க்கும் கிளி.
எனக்கு ஒரு நல்ல சீட்டு
எடுத்துக்கொடேன்
உன் வீட்டுக் கூண்டுக்குள்
சந்தோசமாய் சிறகடிக்கும்
உன் வீட்டுக் கிளியைப்போல்
உன் நினைவுகளில் நான்
சிறகடித்துக்கொண்டிருக்கிறேன்
சொன்னதைத் திருப்பிசொல்லும்
பழக்கத்தை மறந்து
உன் பெயரை மட்டும்
திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது
நீ வளர்க்கும் கிளி

October 23, 2008

நீ போடும் ரங்கோலி கோலம்
நீ வண்ணமாய் வெட்கப்படும்
பொலுதைப்பொல் இருக்கிறது  
நீ வாசலில் வரையும்
கோலங்களை காலம் அழிக்கலாம்,
ஆனால், உன்னால் என் மனதில்
வரையப்படும் கோலங்களை
உன்னால் கூட அழிக்கமுடியாது
ஏன் கடினப்பட்டு
கோலம் போடுகிறாய்?
உன் கால்தடங்களை
அப்படியே இட்டுவிட்டு போயேன்
பண்டிகை நாளில்
நீ கோலம் போடுகிறாயா?
இல்லை நீ கோலம் போடுவதால்
பண்டிகை நாளா?
இருக்கும் நட்சத்திரங்களை எல்லாம்
நீ எடுத்து
உன் கோலத்திற்கு
புள்ளியாக வைத்துக்கொண்டதால்
நிலா இப்போது தனியாக இருக்கிறது

October 21, 2008

நம் உயிர் இணையும் ஒப்பந்தத்தில்
நீ எப்போது உன் கையொப்பம் இடப்போகிறாய்?
நீ கையொப்பம் இடாதவரை
என் உயிர் ஒரு செல்லாத ஒப்பந்தம்.
நீ என்ன முடிவு சொல்வாய்
என்பது என்னுடைய பழைய கேள்வி,
என்னுடைய புதிய கேள்வியோ
நீ எப்போது சம்மதம் சொல்லப்போகிறாய்
நீ சொல்லும்
ஒற்றை சொல்லுக்கு பதிலாகத்தான்
நான் என்னை
உன்னிடம் அடகு வைத்திருக்கிறேன்
நீ இதழ் திறந்து கூட சொல்ல வேண்டாம்
உன் இமை மூடி சொன்னால் போதும்
நீ சொல்லும் சம்மதம்
என்ற ஒரு வார்த்தையில்தான்
நான் என்கின்ற
வார்த்தை முழுப்பொருள் தரும்

October 20, 2008

உன் கரம் பற்றும் போதெல்லாம்
நான் பறக்க ஆரம்பித்து விடுகின்றேன்,
என்னை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளேன்
நான் உன் கரம் பிடிக்கும்போது
பெரும் சந்தோசத்தைவிட
நீ என் கரம் பிடுக்கும்போது
பெரும் சந்தோசமே
நான் அடையும் சந்தோசம்
உன் கரம் பிடிக்கும்போதெல்லாம்
அம்மாவின் கரம் பிடிக்கும்
குழந்தையாய் மாறிப்போகின்றேன்
முதல் முறை உன் கரம் பிடித்தபோதே
நான் தெரிந்துகொண்டேன்
நீதான் நான் காலம் முழுதும்
உயிர் பிடிக்கும் சொந்தம் என்று

October 15, 2008

எல்லா திருமணங்களும்
பஞ்ச பூதங்கள் சாட்சியாக நடக்கும்
நம் திருமணமோ
அவைகளுக்கு சாட்சியாகவே நடைபெற்றது
நான்கு வேதங்களிலும்
நான் தேர்ந்தவன் என்றாலும்
நீதான் என்னுடைய முதல் வேதம்
மூன்று பக்கம் கடலாய்ப்போனால்
அது தீபகற்பம்
என் எல்லா பக்கங்களிலும் நீயே ஆனதால்
நான் இப்போது நின்கற்பம்
சூரியன் நிலவு என இரண்டு
ஒளி மூலங்கள் பூமிக்கு இருப்பதைப்போல்
என் வாழ்க்கைக்கு
நீயும் உன் நானும் மூலமாய் இருக்கிறோம்
என் ஒற்றை உயிரில்
ஒற்றை கயிற்றைக்கட்டி
ஊஞ்சல் ஆடும்
என் செல்ல தேவதை நீதான்

October 14, 2008

உயிர்களைப் பற்றிப் படிக்கும்
படிப்புக்கு உயிரியல் என்று பெயர்
நம் உயிரைப் பற்றி
நாம் படிக்கும் படிப்புக்கு
'காதல்' என்று பெயர் 
மக்களாட்சி, சர்வதிகார ஆட்சி
என்றெல்லாம் சொல்கிறது குடிமையியல்
ஆனால் என்னை ஆள்வதோ
உன் அன்பென்ற ஆட்சி
நிலங்கள் ஐந்து வகைப்படும்
என்கிறது புவியியல்
ஆனால்
என்னை எத்தனை வகைப்படுத்தினாலும்
நான்
நீயேதான் ஆகிறேன்
என் வாழ்க்கை வரலாற்றின்
எல்லா பக்கங்களிலும் இருக்கும்
ஒரே எழுத்து நீயேதான்
என் மனதின்
எல்லா வேதியியல் மாற்றங்களுக்கும்
உன்னுடைய பன்மொழி பேசும்
கண்கள்தான் காரணம்

October 12, 2008

நீ ஊஞ்சலாடிப் போனபின்
நானும் ஊஞ்சலும்
நீ ஆடிய ஆட்டத்தை ஆடிப்பார்ப்போம்
நீ ஊஞ்சலில் ஏறினால்
உனக்கு மட்டுமல்ல
ஊஞ்சலுக்கும் வயசு
குறைந்து விடுகிறது
சுற்றும் பூமியே
சுற்றுவதை விட்டுவிட்டு
நீ ஊஞ்சல் ஆடுவதை
வேடிக்கை பார்க்கும்போது
நான் உறைந்து போனதில்
ஆச்சர்யம் ஒன்றும் இல்லை

October 09, 2008

இன்று வரை
உன் வீட்டுக்கண்ணாடிக்கு மட்டுமே
நீ துயில் எழும் அழகைக்
காணக்கொடுத்து வைத்திருக்கிறது,
எனக்கு எப்போது?
நான் தூங்கும்போது
எனக்கு கனவு வேண்டாம்,
நீ தூங்கும்போது
உனக்கு என் கனவில்லா இரவுகள்
கனவுகளாக வரட்டும்
விடுமுறை நாட்களில்
காலைநேரத்துக்கும் முற்பகலுக்கும்
உன்னை எழுப்பி விட
பல சண்டைகள் நடக்கும்
நீ அதிகாலையில்
முறித்துப்போடும் சோம்பலில்
என்னுடைய பல புதுக்கவிதைகள்
பிறந்துபோகின்றன
உன் வீட்டு சேவல் கூட
நீ எழுந்ததால்தான் கூவுகிறது,
உன் வீட்டு உலகத்தைக் கூட
நீதான் விடியவைக்கிறாய்

October 08, 2008

நீ பிறந்தநாளில் கணிக்கப்பட்ட
காதல் பஞ்சாங்கம் நான்,
எனக்கு நேரங்களைக் கணிக்கும்
ஜோசியர் நீதான்
இந்த முறை உன் பிறந்தநாளைத்
தாங்கும் பாக்கியம்
வியாழக்கிழமைக்குக் கிடைத்திருக்கிறது
உன் பிறந்த நாள் பரிசாய்
என்ன தரலாம்?
உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும்
என்னுடைய மனசைத்தவிர
என்னிடம் ஏதும் இல்ல
உனக்கு வாழ்த்து சொல்வதற்க்காக
வானத்தில் இருந்த எல்லா விண்மீனும்
நிலாவைப் போய்விட்டதால்
எந்த நிலவு உணமையான நிலவு என்று
எங்களால் கண்டு பிடிக்கமுடியவில்லை
உன்னை போன்று இன்னொரு பெண்ணை
இதுவரை படைக்க இயலாததால்
வழக்கம் போல
இந்த ஆண்டும் உன் பிறந்தநாளில்
பிரம்மனே சிறந்த கலைஞன் விருது வாங்கினான்

October 07, 2008

ஊருப்போன நீ
சீக்கிரம் வர வேண்டும் என
வாசலில் கண்களையும்
உன்னில் நினைவுகளும்
வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன்
கிணற்றடியில்
நீ போட்டுவிட்டுப் போன வாளி
உனக்காக இன்னும்
தாகத்தோடு வாடிப்போய் கிடக்கிறது
நம் வீட்டு சமையலறையும்
நானும்
உன் வாசம் இல்லாமல்
தனித்துப் போயிருக்கிறோம்
பூப்பறிக்க நீ இல்லாததால்
நம் வீட்டுப்பூச்செடி
இப்போது பூக்கமாட்டேன் என்கிறது
நீ ஊருக்குப் போய்விட்டாய்
நான் உலகமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

October 06, 2008

பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலே வாசம் உண்டா
என எனக்குத் தெரியாது,
ஆனால்
உன் வீட்டுப்பூக்களுக்கு
இயற்கையிலே
உன் கூந்தலின் வாசம் உண்டு
என்பது மட்டும் எனக்குத் தெரியும் 
உன் கூந்தலேற
உன் வீட்டுப்பூக்களுக்குள் நடக்கும்
பனிப்போரில்
தோற்றுப்போனது என்னவோ
என் கைகள்தான்
கால்க்கட்டுப் போடப்பார்க்கும்
என் அம்மாவிடம் சொல்ல வேண்டும்
இவள் என்னை
அவளின் கூந்தலில் கட்டி விட்டாள் என்று
செடியிலிருந்து பறித்த போது
வாடிய பூ
உன் கூந்தல் ஏறியதும்
மீண்டும் பூத்து விட்டது
உன் ஒற்றைச்  சடையில்
என் அத்தனை உயிர் நாடிகளையும்
கட்டிப்போட்டு விடுகிறாய்

October 05, 2008

என்னதான் மருதாணி சிவந்தாலும்
நீ வெட்கப்படும் அளவுக்கு
சிவக்குமா என்ன ?
மருதாணிச் செடியிலிருந்து நீ பறித்த
எல்லா இலைகளும் சாபவிமோசனம்
பெற்று உன்னைச் சேர்ந்துவிட்டன
நீ அரைத்து வைத்த மருதாணியில்
சிவந்து போனது உன் விரல்களும்
தொலைந்து போனது மற்ற நிறங்களும்
மருதாணிச் செடியைப் பார்த்து
மற்ற எல்லாச் செடிகளும்
ஏங்கிப் போய்க்கிடக்கின்றன
அவைகளையெல்லாம்
நீ பூசமாட்டாயா என்று

உன் உள்ளங்கை பட்டதும்
வெட்கத்தில் சிவந்துபோனது
நீ வைத்த மருதாணி

October 02, 2008

இந்த சமையல் செய்த
உன் விரல்களுக்கு
மோதிரம் போட நூறு பேர் வரலாம்
ஆனால்
இந்த சமையல் செய்த
உன் விரல்களுக்கு
நானே மோதிரமாக வரவேண்டும்
நீ வைக்கும் படையலைத்தான்
சாமி கூட சாப்பிடுமாம்,
உன் பக்குவம்
அங்கேயும் கூட போய்விட்டதா?
உன் அம்மாவின் கைப்பக்குவம்
உனக்கு வந்ததாக
எல்லாரும் சொல்கிறார்கள்
ஆனால்
உன் பக்குவம்
உன் அம்மாவுக்கும் இருந்திருக்கிறது
என்பதுதான் சரி
அறுசுவை உணவோடு
உன் அன்பும் சேர்ந்து வரும்
உன் சமையலுக்கு பெயர்தான்
எழுசுவை உணவு
நீ சமைக்கும் சமையலில்
சுவையை விட
நீ சமைக்கும்போது
முனுமுனுக்கும் பாடலின்
சுவைதான் தெரிகிறது