என் நீயும், உன் நானும் ...
October 24, 2011
இசை நூலில் என் கவிதைப் பூக்களைத்
தொடுத்து வைத்திருக்கிறேன்,
எப்போது வருகிறாய் சூடிக்கொள்ள?
தினமும் கேட்டு மகிழடி
என் காதல் பண்பலை வானொலியில்
உனக்கான என் காதல் ராகங்களை
என் பெயரின் நான்கு எழுத்துக்களுக்கும்
மோட்சம் கிடைத்துவிட்டது,
உன் பெயரின் இரண்டெழுத்துக்களோடு சேர்ந்தவுடன்
வரம் தருகிறேன் என்று சாபங்களிடுகிறாய்
சாபமிடுகிறேன் என்று வரங்கள் தருகிறாய்,
ஆக மொத்தத்தில் என் சாபங்களை அழிக்க வந்த
காதல் வரம்தான் நீயடி
என் கடிகாரத்தின் நொடி முள்ளுக்கு
காதல் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது,
இனி வரும் நிமிடங்கள், மணிகள்
எல்லாமே வானவில்லின் கலவைதான்
October 23, 2011
நீ வாசிக்கிறாய் என்பதாலே
என் மூங்கில் மரக்கிளைகள் எல்லாமே
புல்லாங்குழலாக மாற தவமிருக்கின்றன
நீ அனுப்பும் மடலின் கடைசிப் பக்கத்தில்
இனிமேல் உன் இதழைப் பதித்து அனுப்ப வேண்டாம்.
தேன் இருப்பதாய் எண்ணி
உன் மடலைச் சுற்றி ஏமாந்து போகின்றன இந்த தேனீக்கள்
உன் முத்தக் கவிதையில்
சில இலக்கணப் பிழைகள் இருக்கின்றன
எப்போது வருகிறாய் முத்த இலக்கணம் கற்றுக்கொள்ள?
உன் மௌனங்களை உடைக்க
என்னிடம் இருக்கும் இலட்சம் வார்த்தைகளும்
உன்னை நேரில் பார்க்கும்போது
மௌனமாகிப்போகும் நிலைக்குப் பெயர்தான் விதி
மண மாலையும் மஞ்சள் தாலியும்
இன்னும் எத்தனை நாளைக்கு
தனித்தனியே இருப்பதாம்?
உன் கழுத்தின் பதிலுக்காக, என் கரங்கள்
என் காதல் தங்கத்தை
இன்னும் எத்தனை நாள்
உன் நெருப்பில் வாட்டுவதாய்த் திட்டம்?
October 19, 2011
உன் விரல்களின் மின்சாரத்தை வைத்து
என் தேசத்தின் விளக்குகளை அணைக்கும்
ஒரு அதிசிய அறிவியல் நீ
என் கன்னங்களிடம் உன் மூச்சுக்காற்று
கேட்கும் கேள்விகளுக்கு,
ஏனோ என் இதழ்கள்தான்
பதில் சொல்ல வேண்டியிருக்கிறது
October 17, 2011
கால்விரல்களில் நான் வரைகிறேன்
என் அரை வெட்கங்களை,
சொற்களில் நீ வரைகிறாய்
என் முழு வெட்கங்களை
தகப்பன் வீடு செல்கிறேன்
சில நூறு முத்தங்கள் கடனாய்க் கிடைக்குமா?
திரும்பி வந்தவுடன்
பல ஆயிரங்களாய் திருப்பித் தருகிறேன்
நாணம் என்னைப் பிடுங்கித்தின்ற போதும்
பெண்மை என்னைத் தள்ளிச்சென்ற போதும்
உன் இதமான அணைப்பு
என்னை உன்னிடம் சேர்ந்தே இருக்கச் சொல்கிறது
என் மௌனங்களை புரிந்து கொள்ள
உனக்கு ஒரு யுகம் என்றால்,
உன் கண்கள் பேசும் மொழியை புரிந்துகொள்ள
எனக்கு பல யுகங்கள் வேண்டுமடா
வேண்டுமென்றே உன் தேநீரில்
இனிப்பைக் குறைத்திருக்கிறேன்,
எவ்வளவு இனிப்பு இன்னும் வேண்டும்?
என் உதடுகளை தயார் படுத்திக்கொள்கிறேன்
இடி, மின்னல், பேய்க் கனவுகள்
இவைகள் எல்லாம் நீண்டநாட்கள் வாழட்டும்,
காரணமே இல்லாமல் உனைக்கட்டிக்கொள்ள
இவைகளின் உதவி தேவைப்படுகிறது
நானே வைத்துக்கொண்டால்
அரைகுறையாய்ச் சிவக்கிறது மருதாணி,
கட்டியவன் நீ வைத்துவிட்டால்
முழுதும் சிவக்கிறோம் மருதாணியும் நானும்
என் வெட்கத்தை நீ அழகு என்கிறாய்,
அப்படியானால் என்னை வெட்கப்பட வைக்கும்
நீ நிச்சயமாய் ஒரு பேரழகுதான்
October 16, 2011
என் கருப்பு இரவுகளுக்கு
வர்ணங்கள் பூச
எப்போது வரும் உன் மஞ்சள் கயிறு?
உன் முத்தச்சாமி வரங்கள் தருமாயின்
என் காதல் செடியில்
365 நாட்களும் வெட்க மலர்கள் பூக்கும்
என் கைரகைகள் எப்போது
உன் கைரேகைகளோடு சேர்ந்து
காதல் ரேகைகளாகும்?
முத்தங்கள் வாங்கும்போது குங்குமம் மீதும்,
குங்குமம் வாங்கும்போது முத்தங்கள் மீதும்
என் நெற்றிக்கு வந்துவிடுகிறது காதல் ஏக்கங்கள்
பல பூக்களைத் தொடுத்து
ஒற்றை மாலையை நான் கோர்க்கிறேன்,
மணாளன் நீயோ உன் ஒற்றைத் தீண்டலில்
என்னில் பல வெட்கங்களை உதிர்க்கிறாய்
October 09, 2011
தொட்டால்சிணுங்கிச் செடி நான்,
ஆனால் என் மலர்கள் மட்டும்
நீ தொட்டவுடன் மலர்ந்து விடுகின்றன
வாங்கிய முத்தங்களுக்கு வட்டியாய்
பல நேரங்களில் என் புடவைத் தலைப்பை
உன் கரங்கள் ஜப்தி செய்து விடுகின்றன
தினம் ஒரு ராகம் படைக்கும்
கலைஞன் நீ,
உன் மீட்டலில் அமைதியாகும் வீணை நான்
அணைக்க வருகிறேன் என்கிற சாக்கில்
என் வனங்களில்
நெருப்பை விதைத்துப் போகிறாய்
என் காதல் மேகங்களை
எப்படியடா கண்டுகொள்கின்றன
உன் தோகை நடனங்கள்?
October 06, 2011
ஏன் இன்னும் நீ அலுவலகத்திலிருந்து திரும்பவில்லை?
சமையலறை மேசை மீது கொட்டி வைத்திருக்கிறேன்
என் அழுகை விநாடிகளை..
ஐப்பசி மாத நிச்சயத்திருக்கும்
வைகாசி மாதப் பந்தலுக்கும்
நடுவே பரிதாபமாய் சிக்கிக்கொண்டன
என் ஏக்கத் தனிமை நிமிடங்கள்
எப்போது அலுவலகத்திலிருந்து திரும்புவாய்?
காலையில் கொடுத்துப் போன முத்தம்
காய்ந்து போய்க்கொண்டிருக்கிறது
நீ அலுவலகம் சென்றபின்
உன் சட்டைகளில் பூத்திருக்கும்
உன் வாசங்களைக் காதலிக்க ஆரம்பிக்கிறேன்
அடிக்கடி சமையலறைக்குள் வருகிறாயே,
சமையல் வாசம் பிடிக்கவா?
என் வாசம் பிடிக்கவா?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)