கண்களின் இமைகளுக்கு நடுவே சந்தோசம் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஒரு காலை நேரம்... இமைகளை மூட எனக்கு ஆசையில்லை...
சற்று முன்பு மலர்ந்த ஒரு மல்லிகை போல் இருக்கிறாய் நீ....அணிந்திருந்த மலர் மாலையிலிருந்து, இன்னும் நீர் சொட்டிக் கொண்டிருக்கிறது...
தேன் தடவிய நிமிடங்களுக்கு நடுவே, உன் கழுத்தில் நான் தாலி கட்டி முடித்திருக்கிறேன்... என்னைச் சுற்றலிலும் என்ன என்னவோ நடந்து கொண்டிருந்தும், மனம் எதிலும் ஒட்டவில்லை.. இவ்வளவு அழகா நீ? விழிகளால் நம்ப முடியவில்லை...
கூட்டத்திலிருந்து யாரோ அழைக்கிறார்கள்... அக்னி வலம் வர வேண்டுமாம்.... நம் காதலுக்கு அக்னி சாட்சி வேண்டுமா என்ன? வரங்கள் வாங்குவதற்கு எதற்க்குச் சாட்சி? என்னிடம் இருந்து எதை வேண்டுமானாலும், என் என்னை வேண்டுமானாலும் கூட எடுத்துக் கொள்ளுங்கள்... இவள் இருக்கிறாள் எனக்காக.....
உன் புடவைக்கும், என் வேஷ்டிக்கும் விழுகிறது ஒரு முடிச்சு... இப்படியே இருக்கட்டும் இந்த முடிச்சு ... பின்வரும் நாளில் நம் மகளுக்கு, இதைக் காண்பிக்க வேண்டும்....என் ஒற்றை விரலை, உன் விரலோடு யாரோ கட்டுகிறார்கள்.... மற்ற விரல்களில் ஏக்கங்கள், மண்டப சத்தத்தில் மறைந்து போகின்றன....
என் காதலுக்கும், உன் மௌனத்திற்கும்
சில ஆண்டுகளாய் நடந்த போர் முடிவுக்கு வந்த நிமிடம்.
இமைகள் மூடி முதல் சம்மதம் சொன்னாய்...
பின் வந்த நாட்களில், வேறு சம்மதங்களுக்காக நீ இதழ்கள் மூடியது வேறு கதை
என் மனதில் இந்த நிமிடம் ஓடி முடித்த புள்ளியில், முதல் வலமும் முடிந்து போனது....இரண்டாம் வலம் ஆரம்பிக்கும் புள்ளியில், என் பெற்றோர்களைக் கவனிக்கிறேன்... ஒரு தேவதையைக் கடத்திப் போன பெருமிதம் தெரிகிறது அவர்களின் கண்களில்... உன் பெற்றோரையும் கவனிக்கிறேன்... அனேக ஏக்கங்கள் ஒரு கண்ணில், அனேக சந்தோசங்கள் மறு கண்ணில்... என் சிரிப்பு அவர்களுக்கு உணர்த்தி இருக்கும் 'நீ என் சொர்க்கத்தின் தேவதை ஆகப் போகிறாய் என்று'
இரண்டாம் சுற்றின் இந்த கால் நிமிடத்தில், என் நினைவில் வருகிறது, நம் மணமேடையின் ஒரு நிமிடம்
என் ஏக்கங்களுக்கும், உன் வெட்கங்களுக்கும்
சில நிமிடங்களாய் நடந்து வந்த தித்திப்பு உச்சகட்டமான நிமிடம்,
மலர்கள் பொழிய மாங்கல்யம் சூடிய கணம்
சொந்தங்கள் மறந்து, உன்னை மட்டுமே நான் வேடிக்கை பார்த்தது வேறு கதை
கனவு கண்டு முடிப்பதற்குள், இரண்டாம் சுற்று முடிந்து விட்டது... மணவறை இன்னும் கொஞ்சம் நீளமாய் இருக்கக் கூடாதா? இரண்டாம் சுற்றிற்க்கும், மூன்றாம் சுற்றிற்க்கும் இருக்கும் சிறு இடைவெளியில் நம் நண்பர்கள் கண்களில் படுகிறார்கள்... உன் வெட்கத்தை உன் தோழிகளும், என் அமைதியை என் தோழர்களும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்... நானும் கடைக் கண்ணில், உன்னை ரசித்துக் கொள்கிறேன்...
மூன்றாம் சுற்றின் இந்த கால் நிமிடத்தில், என் நினைவில் வருகிறது, நம் பின் நாளின் ஒரு நிமிடம்
என் தவத்திற்கும், உன் தாய்மைக்கும்
சில மாதங்களாய் துளிர்ந்திருந்த மொட்டு, இன்று மலரும் நேரம்,
வலிகளுக்கு நடுவே நம் மகளின் அழுகை கேட்ட நேரம்
சுற்றம் சொந்தங்கள் மறந்து, உன்னையும் நம் மகளையும் முத்தங்கள் கொண்டு அணைத்தது வேறு கதை
யாரோ வருகிறார்கள், நம் விரல்களைப் பிரிக்க... வேண்டாம், நான் இவளோடு இந்த உலகையும் வலம் வர வேண்டும்...
வேறு என்ன வேண்டுமடி எனக்கு? இந்த மூன்று கால் நிமிடங்கள் போதும், இன்னும் முப்பது ஜென்மங்களுக்கு....