December 29, 2011

நனைந்த மழையில் இருந்து மீண்டுகொள்ள
என் இதழ்கள் தேநீர் கோப்பையையும்
என் கண்கள் உன் இதழ்களையும்
இதத்திற்க்குத் தேடுகின்றன
வீட்டிற்கு நேரத்திற்கு போவதற்காக
நிற்கச் சொல்லி நீயும்,
குடைக்குள் சேர்ந்தே இருப்பதற்காக
பெய்யச் சொல்லி நானும்
மழைக்கு சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்
விழும் ஆயிரம் மழைத்துளிகளில்
உன் கன்னங்களைக் குறிவைத்தே விழும்
அந்த சில பொல்லாத மழைத்துளிகளை மட்டும்
எப்படியாவது கைது செய்தே ஆகவேண்டும்
தேவதை நீ எனக்கும் சம்மதம் சொல்லிவிட்டாய்,
தேவர்களின் கண்ணீரை யார் நிறுத்துவது?
மழைக்கும் நம் மீது காதல் வந்துவிட்டது
உன் முன் நெற்றியில் இருந்து வடியும்
மழைத்துளிகளுக்கு மட்டும்
எங்கிருந்து வந்தது இத்தனை அழகு?
மழைக்கும் நம் மீது காதல் வந்துவிட்டது
என் காதல் அம்மன் உனக்கு
இன்று வான் நடத்துகிறது நீராபிஷேகம்,
மழைக்கும் நம் மீது காதல் வந்துவிட்டது
உன் மேல் விழுந்தவுடன்
அமிர்தமாகிப் போனது மழைத்துளி,
மழைக்கும் நம் மீது காதல் வந்துவிட்டது

December 28, 2011

நம் இதழ்கள் வார்த்தைகளுக்கும்
என் இதயம் துடிப்பதற்கும் தடுமாறிப் போகின்றன,
இது நம் அழகான முதல் சந்திப்பு
நான் செதுக்கிய காதல் சிலைக்கு
இன்று கண்கள் திறப்பு விழா.
இது நம் அழகான முதல் சந்திப்பு
நமக்குத் தெரியாமலும்
விரல்களுக்குத் தெரிந்தும்
நடந்து முடிந்தது அவைகளின் ஒரு அவசரச் சந்திப்பு,
இது நம் அழகான முதல் சந்திப்பு
சீக்கிரம் வந்து சேரடி,
நாம் சந்திக்கும் அழகைக் காண்பதற்காக
சுற்றாமல் நின்று கொண்டிருக்கிறது இந்த பூமிப் பந்து.
இது நம் அழகான முதல் சந்திப்பு
நீயா இல்லை நானா?
முதல் வார்த்தையை உதிர்ப்பதில் போராட்டம்
இது நம் அழகான முதல் சந்திப்பு
நொடிக்கு மூன்று முறை அலுவலக சிற்றுண்டி வாசலுக்கும்,
நொடிக்கு முப்பது முறை என் கைக் கடிகாரத்திற்கும்
அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன என் கண்கள்.
இது நம் அழகான முதல் சந்திப்பு
என் ஒற்றைக் காதல் சாபங்களுக்கெல்லாம்
இன்றுதான் விமோச்சன நாள்
இது நம் அழகான முதல் சந்திப்பு
பத்தடித் தொலைவில் வரும் உனைப் பார்த்ததும்
நூறு குதிரைகளின் வேகத்திற்கு மாறுகிறது என் இதயம்.
இது நம் அழகான முதல் சந்திப்பு

December 27, 2011

இடுகாட்டு வெட்டியானுக்கு,
பூந்தோட்டத்தில் கிடைத்திருக்கிறது ஒரு குடில்,
ஆமாம், எனக்கும் காதல் பிறந்திருக்கிறது
நெருப்பில் வேகும் என் இரும்புத் துகள்களுக்கு ,
நெருப்பில் உருப்பெறும் தங்கமாய் மாற ஆசை.
ஆமாம், எனக்கும் காதல் பிறந்திருக்கிறது
பயமுறுத்தும் ஆயுதங்கள் வைத்திருக்கும் காவல் தெய்வம் நான்,
இப்போதெல்லாம் குழந்தைகள் உறங்குகிறார்கள் என் மடியில்,
ஆமாம், எனக்கும் காதல் பிறந்திருக்கிறது
ஆளில்லா என் தீவில்
இப்போது கோவில் திருவிழாக்கள்,
ஆமாம், எனக்கும் காதல் பிறந்திருக்கிறது
விறகு வெட்டி நான்,
இப்போது புல்லாங்குழல் இசைக்கு அடிமை.
ஆமாம், எனக்கும் காதல் பிறந்திருக்கிறது
உனக்கு ஒரு முத்தம் என எழுதுகையில்
என் பேனாவிற்கும் வருகிறது ஒரு வித வெட்கம்,
ஆமாம், எனக்கும் காதல் பிறந்திருக்கிறது
உன் கொலுசுகளின் மெட்டுகளுக்கு
என் பாடல் வரிகள் தயாராகிவிட்டன
ஆமாம், எனக்கும் காதல் பிறந்திருக்கிறது
மழைக்காலத்திற்கு இரை தேடும் எறும்பு எனக்கு,
கிடைத்திருக்கும் ஒரு வெல்லக் கட்டி நீதானடி,
ஆமாம், எனக்கும் காதல் பிறந்திருக்கிறது

December 26, 2011

என் வான் மேகங்கள் எல்லாம்,
நீருக்குப் பதிலாய் தேனைத்தான் பொழிகின்றன.
ஆமாம்,எனக்கும் காதல் பிறந்திருக்கிறது
பொய்யாய் எழுதிய என் காதல் வரிகள்
எல்லாம் மெய்யாய் மாறிவிட்டன,
எங்கும் அழகு, எதிலும் அழகு.
ஆமாம், எனக்கும் காதல் பிறந்திருக்கிறது
காதல் கூட ஒரு புது மனைவி போலத்தான்.
நெருங்கி வந்தால் விலகியும்
தள்ளிப் போனால் கொஞ்சி அழைத்தும்
என்னிடம் விளையாட்டு காட்டுகிறது
அருகில் இருந்த போது கண்டு கொள்ளாத
என் காதல் நெருப்பும் உன் காதல் பஞ்சும்,
நீ தள்ளிப் போனபின் பற்றிக் கொள்ளத் தவிக்கின்றன.
எப்போது வருகிறாய் எரிக்கவும் அணைக்கவும்?

December 25, 2011

கண்தொலைவில் நீ இருந்த போது
மௌனம் காத்த என்னை,
தள்ளிப் போன பிறகு புலம்ப வைத்திருக்கிறது
இந்த பாழாய்ப்போன காதல்
நீ அருகில் இருந்தவரையில்
மொட்டாய் இருந்த காதல்,
நீ தள்ளிப் போனதும் மலர்ந்து விட்டதடி,
எப்போது வருகிறாய் சூடிக் கொள்ள?
என் மேகங்களுக்கு காதல் பிறந்துவிட்டது,
உன் வானவில் நிறங்களோடு கலந்து
வர்ணமாய்ப் பொழிந்து கொண்டிருக்கின்றன
உன் முதல் முத்தம் எனும் வர்ணத்தில்தான்
இன்னும் வரைந்து கொண்டிருக்கிறேன்
என் இத்தனை ஓவியங்களையும்
உன் காதல் மழை நின்று போய்
ஆண்டுகளாகியும்,
என் மனக் கூரையிலிருந்து இன்னும்
நீர்ச் சொட்டிக்கொண்டிருக்கத்தான் செய்கிறது

December 22, 2011

பேருந்தில் உன்னோடு இருக்கும்
சில நிமிடங்களுக்காக,
நாள் முழுதும் சேகரிக்கிறேன்
உனக்கான காதலை
புது மாப்பிளையின் தலை தீபாவளி ஆகிறது
நீ வரும் பேருந்து,
அடை மழை பெய்யும் தீபாவளி ஆகிறது
நீ இல்லாத பேருந்து
பேருந்து எங்கும் பரவிக் கிடக்கிறது,
உன் மல்லிகை வாசம்.
என் மனதெங்கும் பரவிக்கிடக்கிறது
உன் காதல் வாசம்
நம் அலுவலகத்தின் மற்ற பேருந்துகள்
நம் பேருந்திற்கு வைத்திருக்கும் பெயர்,
'தேனிலவுப் பேருந்து'

December 21, 2011

நம் அலுவலகத்தின் மற்ற பேருந்துகளுக்கும்
சாப விமோசனம் வேண்டுமாம்,
உன் காலடியைக் கொஞ்சம் பதியேன்
பேருந்தின் ஜன்னல் காற்று திருடும்
உன் கூந்தல் மல்லிகைப் பூக்களை,
அதனிடமிருந்து களவாடும் களவாணி நான்
நீ பேருந்திலிருந்து இறங்கிச் சென்ற பின்னும்,
உன் பொன் இருக்கையிலிருந்து
இறங்க மறுக்கிறது என் மனசு
நம் அலுவலகப் பேருந்து
நீ வரும் நாட்களில் ஒரு காதல் கடத்தி,
நீ வராத நாட்களில் அது வெறும் நேரக் கடத்தி

December 14, 2011

முன்னால் காதலிக்கு இந்நாளில் ஓர் கடிதம்:
---------------------------------------------------------------------------------
முதல் வரியிலேயே ஒரு தடுமாற்றம்...
எப்படி இருக்கிறாய் என்பதா இல்லை, எப்படி இருக்கிறீர்கள் என்பதா?

அடுத்த வரியிலும் ஒரு தடுமாற்றம்
என் நீயும் உன் நானும் எப்படியிருக்கிறோம் என்பது போய், நீ எப்படி இருக்கிறாய்?

முன்பெல்லாம் வார்த்தைகள் கிடைக்க தடுமாறினேன், இப்போது கிடைத்த வார்த்தைகளுடன் தடுமாறுகிறேன்....

உன் முத்தங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் கூட வெறுத்த நான், இப்போது நொடிகளுக்குள் இருக்கும் இடைவெளியிலும் கூட உன்னை நினைத்து அழுகிறேன்

என் கைகளில் ஒட்டிக்கொண்ட உன் கைரேகை கூட இன்னும் மறையவில்லை, ஏனோ காலம் மட்டும் நம் காதல் ரேகையை அழித்து விட்டது

என்னை விட யார் உன்னை வெட்கப்பட வைக்க முடியும்?, நிறைவேறா நம் காதலை விட என்னை யார் கொலை செய்து விட முடியும்?

கனவில் பெற்ற குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தார்கள், இப்போதோ நம் காதல் குழந்தை அநாதையாகிப் போய்விட்டது

முத்தங்களால் இனித்துப் போன என் தொலைபேசி, இப்போது கண்ணீரால் உவர்க்க ஆரம்பித்து விட்டது

பேருந்து நிலையத்தில் உனக்காகக் காத்திருந்த நாட்கள் போய், நான் ஏதோ வாழட்டும் என மாத நாட்கள் காத்திருக்கின்றன

நீ மட்டும்தான் என் உலகம் என இருந்த எனக்கு, இப்போது எதுவுமே சொந்தம் இல்லை

உன்னைப் பற்றியான இனிப்பான கவிதைகள் எல்லாம், இப்போது விஷமாய் என்னைக் கொல்கின்றன

நீயும் நானும் பார்த்துத் தீர்த்த காதல் திரைப் படங்கள் எல்லாம், இப்போது இருந்த சுவடே தெரியவில்லை

முத்தங்கள் நனைந்த என் தலையணை, இப்போது தனியாய் பரணில் ஒரு மூலையில்

ஆசையாசையாய் இருந்தது ஒரே ஒரு கனவுக் குழந்தை, கனவோடு சேர்த்து கருவும் கலைந்து போனது இப்போது

நம் காதல் ஆலையில் முத்தங்கள் பிழிந்த நாம், இப்போது கால எந்திரத்தில் நம்மை பிழிந்து கொண்டிருக்கிறோம்

நீ என்னும் பெயரில் நான் எழுதிய வென்ற காவியங்கள் ஆயிரம், இறுதியில் உன் மண அழைப்பிதழில் என் பெயர் இடம் பெறாமல் தோற்றுப் போனேன்

நம் அன்புகள் உருவாக்கிய காதல் அரண்மனை, ஒரு வீம்புத் தீயிக்கு இரையாகிப் போனது நாம் செய்த பாவமா?

நொடிகளுக்கு நடுவிலும் பேசிக்கொண்ட நாம், இப்போது பேசி வருடக் கணக்காகி விட்டது

இரண்டாம் கணவனாய் உனக்கு ஒருவன், முதலும் கடைசிக் காதலியுமாய் நீ மட்டும்தானடி

எத்தனை குழந்தைகள் நீ பெற்றுக் கொண்டாலும், உனக்கு எப்போதுமே முதல் குழந்தை நான்தான்

நீயும் நானும் பிரிந்து விட்டோம், இல்லை பிரிக்கப் பட்டு விட்டோம். இனி காதலை யார்தான் வாழ வைப்பது? என்னோடு சேர்ந்து இப்போது காதலும் கூட அனாதைதான்

என் இதயம் வலிகளை கொட்டித் தீர்க்க நினைத்தாலும், என் பேனா எழுத மறுக்கிறது வலியால்...

இனிவரும் வருடங்களில் ஏதாவது ஒரு நிமிடத்தில் நீயும் நானும் பார்த்தும் பாராமலும் கடந்து போகும் என்கின்ற நம்பிக்கையில்,

தீராத முத்தங்களுடன் முடித்து வந்த நான், தீராத வலியுடன் என முடிக்கிறேன்...

December 12, 2011

அதிகாலைத் துதிகளை இசைப்பதனால்தான்
முகூர்த்தங்களே இல்லாத மார்கழி,
என் சாபத்தில் இருந்து தப்பிக்கொள்கிறது
மாங்கல்ய மந்திரங்களும்
நாதஸ்வர மெட்டுக்களும்
நம் இல்லறப் பாடலுக்கான
உன் குரலுக்குதான் தவம் இருக்கின்றன
இன்னும் எத்தனை அமாவாசை இரவுகள்
காத்திருக்க வேண்டும்,
உன் பௌர்ணமி நிலவு வருவதற்கு?

December 06, 2011

மௌனம் எனும் கோட்டைக்குள்
சிறை வைக்கப்பட்டிருக்கிறது உன் காதல்,
மீட்க வழி தெரியாத ஒரு நிராயுதபாணி நான்
நரைத்த பின்னும்கூட
உன் நிழலை காதலிக்கும்
ஆசையையும் பழக்கத்தையும்
மறக்கச் செய்யவில்லை உன் காதல்
கவிதைகள் எழுதும் எனக்கு
நம் தேன்நிலவு நாட்கள்தான்,
கவிதை வாசிக்கும் நேரம்
நீ சம்மதம் சொல்லும் வரை
உன் மௌனம் என்பது எனக்கு விரோதிதான்
எப்போது மாறின
நம் காதல் காலத்தின் பேசும் வெட்கங்கள்,
உன் தேன்நிலவின் பேசா வெட்கங்களாய்?
மாதத்தில் ஒரு நாள் மட்டும் பூக்கும்
பௌர்ணமி நிலவுக்கு
மாதத்தின் முப்பது நாட்களும் பூக்கும்
நம் தேன்நிலவு மேல்
ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது
திருமணத்திற்குப் பிறகு வரும்
தேன்நிலவு நாட்கள்,
நம் காதல் காலத்தின்
தேன்நிலவு நிமிடங்களிடம்
தோற்றுத்தான் போகின்றன

December 05, 2011

புது மனைவி நீ காலையில்
கொடுத்த முத்தம் காய்ந்துபோய் விட்டது,
இரவுக்கு முன் இன்னும் சில முத்தங்களுக்கு
ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா?
மணமாலைகளும், வாழை மரங்களும்
வாடிப்போக ஆரம்பித்து விட்டன,
ஆனால் இப்போதுதான் உன் வெட்கம்
துளிர் விட ஆரம்பித்திருக்கிறது
முந்தின இரவின் மீத வெட்கங்களை
புது மனைவி நீ கொல்லைப் புறத்தில் கொட்டிப்போகிறாய்,
நான் வளர்க்கும் மல்லிகைச் செடிகள் எல்லாம்
உன் வெட்கத்தால் சிவப்பாய்ப் பூக்கின்றன
கட்டிய புது மஞ்சள் கயிற்றைப் போலவே
நீயும், எனக்கான உன் முதல் வெட்கங்களும்
இன்னமும் புதிதாய்த்தானடி இருக்கின்றன
நீ என்னும் செடியில்
வெட்க மலர்கள் பூத்தனவா?
இல்லை வெட்கம் எனும் செடியில்
நீ பூத்தாயா?