February 29, 2012

உன் பௌர்ணமிக்காக, என் வானங்கள்

நான் பிறந்த ஒரு நாள்:

என் அப்பாவிற்கு மகள் பிறந்திருக்கிறாள் என்பது போய்
உன் அம்மாவிற்கு மருமகள் பிறந்திருக்கிறாள்
எனும் செய்தியே ஊரில் விதைக்கப்பட்டது

எனக்கு பெயர் வைத்த ஒரு நாள்:

நேர நட்சத்திரப் பொருத்தங்களை விட்டு
உன் பெயருக்குப் பொருத்தமான
ஒரு பெயரே வைக்கப்பட்டது

நான் பள்ளி சென்ற ஒரு நாள்:

உன்னுடன் வரும் நாட்களில் குறைந்த தொலைவிலும்
நீ வராத நாட்களில் நீண்ட தொலைவிலும்
பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டது

நான் பருவமடைந்த ஒரு நாள்:

குடில் கட்டிய மாமன் உனக்கும்
காதல் மொட்டு மலர்ந்த எனக்கும்
சொந்தங்களால் ஒரு வேலி அமைக்கப்பட்டது

நான் வெட்கப்பட்ட ஒரு நாள்:

யாருமில்லா ஒற்றையடிப் பாதையில்
வழிமறித்து நீ தந்த முத்தத்தில்
வெட்கமும் எனைப் பார்த்து வெட்கப்பட்டது

நான் கண்ணீர் கசிந்த ஒரு நாள்:

மேற்படிப்பெனும் பட்டம் வாங்க
சில காலம் நீ பட்டணம் போவதால்
என் கண்ணீரின் உவர்ப்பும் சுவைக்கப்பட்டது

நான் காத்திருக்கும் இன்னொரு அழகான நாள்:

நீ வரும் நாள் செய்தி கிடைத்தவுடன்
நம் மணவறைக்காக கொல்லையில்
இன்னொரு வாழையும் நடப்பட்டது

February 28, 2012

மதம் பிடித்த யானை முன்
தவம் செய்யும் ஞானியாய் நான்,
உன் கடைக்கண்ணின் ஒற்றைப் பார்வையில்
என்னில் முளைக்கின்றன ஆயிரம் தவிப்புகள்
பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க
ஒற்றை வாளி நீருடன் நான்,
உன் கடைக்கண்ணின் ஒற்றைப் பார்வையில்
என்னில் முளைக்கின்றன ஆயிரம் தவிப்புகள்
என் மனமெனும் வெடிமருந்து கிடங்கில்
உன் காதல் அம்மனுக்கு தீ மிதி விழா,
உன் கடைக்கண்ணின் ஒற்றைப் பார்வையில்
என்னில் முளைக்கின்றன ஆயிரம் தவிப்புகள்

February 24, 2012

யாருக்கும் அடங்காப் புயல் நான்
என்னை அடக்கும் தென்றல் நீ,
எப்போதடி வந்தாய் எனக்குள்?
வானவில்லாய் நான் இருந்தும்,
தூரிகை உன்னிடம் நிற வரம் கேட்கிறேன்,
எப்போதடி வந்தாய் எனக்குள்?
இனிப்பை அறிவது நாவேனினும்
இனிப்பை அறியவைக்கிறது உன் பெயர்,
எப்போதடி வந்தாய் எனக்குள்?
உன் புடவையின் ஒரு தலைப்பை
காற்றின் பெயரைச் சொல்லி
திருடத்தூண்டுகிறது இந்தக் காதல்,
எப்போதடி வந்தாய் எனக்குள்?
அடுத்துவரும் விடுமுறை நாளைவிட
அடுத்துவரும் முகூர்த்த நாள் மீது ஒரு ஏக்கம்,
எப்போதடி வந்தாய் எனக்குள்?
நானும் இப்போது பயில்கிறேன்
வெட்கமெனும் பாடத்தை,
எப்போதடி வந்தாய் எனக்குள்?
இரவுப்பொழுதும், என் துயிலும்
இப்போது எதிரெதிர் திசையில்
எப்போதடி வந்தாய் எனக்குள்?

February 21, 2012

காற்றால் கடத்தப்படும்போதும்
உன் மீதே பொழியப் பார்க்கின்றன
என் காதல் மேகங்கள்

February 20, 2012

உன் விரதங்களும், என் பட்டினியும்..

நீ விரதங்கள் இருக்கவும், நான் பட்டினி கிடக்கவும்
உனக்கு மட்டும் எப்படிக் கிடைக்கிறது
ஒவ்வொரு மாதத்திலும், ஒரு நாள்?

நீர் சொட்டும் கூந்தலோடு நீயும்,
வறண்டு போன கன்னங்களோடு நானும்
உன் முத்தங்களும், இன்று விரதமா?

உன் தொலைபேசி வானொலியில்
இன்று 'என் விருப்பப் பாடல்கள்' இல்லை.
உன் கொஞ்சல்களும், இன்று விரதமா?

என் தீண்டல் எனும் நிலவுக்கு
உன் வானில் இன்று அமாவாசை.
உன் வெட்கங்களும், இன்று விரதமா?

உன் விரதமெனும் சிறையில்
எனக்கு, ஒரு நாள் ஆயுள் தண்டனை.
உன் காதலும், இன்று விரதமா?

உன்னில் தஞ்சம் புகத் துடிக்கும்
முகவரி இழந்த ஒரு அகதி நான்,
உன் தேசமும், இன்று விரதமா?

உன் மலர்களோடு சேராமல்
மனமிழந்து போயிருக்கிறது என் காதல் நார்கள்
உன் மலர்களும், இன்று விரதமா?

நம் வீட்டு சமையலறையிலிருந்து
இன்று நான் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறேன்
உன் வாசமும், இன்று விரதமா?

திருமணத்திற்குப் பிறகும்
இங்கே ஒரு 'ஒரு தலைக் காதல்'.
உன் விழிகளும், இன்று விரதமா?

உன் கரங்களின் எல்லைக்குள் நான் இருந்தும்
ஏனோ நான் அனாதையாய்.
உன் அணைப்புகளும், இன்று விரதமா?

இறைவனிடம் வரங்கள் வேண்டி நீ,
நீ கொடுத்த சாபங்களோடு நான்
இன்னுமா பொழுது விடியவில்லை?

February 16, 2012

இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

வழக்கம் போல அலுவலகத்திலிருந்து
இன்றும் நான் அரை மணி நேரம் தாமதம்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

கடைசியாக புகைத்த சுருட்டின் வாசம்
இன்னும் என் சுற்றமெங்கும்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

நீ தலை திருப்பும் ஒற்றை நொடிக்குள்
என் மூன்று விரல்களின் நகங்கள் கடிபடுகின்றன
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

உனக்கு பிடித்த பாடலின் ஒளிபரப்பின் நடுவே
எனக்கு பிடித்த ஒரு தொலைக்காட்சிக்கு ஒரு சிறு தாவல்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

போன முத்தத்தின் போது வெட்டச் சொன்ன மீசை முடிகள்
இந்த முத்தத்தின் போதும் இடைஞ்சலாய்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

மழை வரும் என நீ எச்சரித்தும்
குடையை நிராகரித்து, மழையில் நனைந்து விட்டேன்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

உன் விரத வெள்ளிகிழமைகளில்
உன் வாசம் பிடிக்காமல் இருக்க முடிவதில்லை
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

நம் மகனுக்கு மட்டும் நான்கு முத்தங்களா
இன்னும் போகவில்லை என் பொறாமைகள்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

அம்மன் சன்னதிகளிலும்
அம்மனுக்கு பதிலாய் உன் முகம்தான் எனக்கு தெய்வமாய்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

குளிராத இரவுகளிலும் நான் போர்த்திக் கொள்ள
உன் புடவைகள் மீதுதான் முதல் கண்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

சிறு குழந்தை போல இன்னும்,
ஆழ்ந்த தூக்கத்தில் உன் பெயரை உளறிக் கொண்டு
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

தொடா தொலைவில் நீ இருந்தும்,
என் கள்ளப் பார்வைகளை நீ கண்டு கொள்கிறாய்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

உன் மருதாணிக் கரங்கள் சிவக்கும் முன்னே,
என் ஆடைகளில் உன் மருதாணி ரேகைகள்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

மன்னிக்க நீயும், உன் காதலும் இருக்கையில்
நான் இப்படித்தான், இப்போதும் எப்போதும்

- இதை வாசித்தபின் என் செவி நுனி, உன் விரல் நுனிகள்
வழக்கம்போல இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்.
மனைவியுடன் இருக்கும் வைகறைகளை
நீளச் சொல்லும் கணவன்கள் போலே,
உன்னுடன் இருக்கும் மாலைகளை
நீளச் சொல்கிறேன் நான்

February 15, 2012

உன் நிழல் கூட விழாத என் ஜன்னல்களில்
இப்போது உன் முகமும், காதலும் விழுகின்றன
நீ சம்மதம் சொல்லிவிட்டாய்
நீ சம்மதம் சொன்னபின்
என் காதல் இன்னும் எடை கூடி விட்டது,
கரும்பு தின்ன, இப்போது இரட்டைக் கூலி
உன் மௌனம்
இவ்வளவு அழகா?
உன் சம்மதத்திற்குப் பிறகுதான் தெரிகிறது
உன் காதலெனும் பஞ்சுத் தோட்டத்திற்கு
நான் எனும் நெருப்பே வேலியாய் இருந்தும்
இன்னும் பற்றிக் கொள்ளமால்தான் இருக்கிறோம்
வீசும் காற்று எப்போதடி திசை மாறும்?

February 14, 2012

காதல் போர் மேகங்கள்
சூழ ஆரம்பித்திருக்கின்றன என் தேசத்தை,
தோற்பதற்கு நான் தயார்,
தோற்கடிக்க எப்போது வருகிறாய்?

February 09, 2012

நொடி முள்ளிடம் தோற்கும் நாம்,
சில கணங்களில்
மணி முள்ளையும் தோற்கடித்து விடுகிறோம்
உதிர்ந்த மல்லிகைப் பூக்கள்
இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றன,
உன் நேற்றைய வெட்கங்களை
உன்னைக் களவாடும் என் போராட்டங்கள்
வெற்றிப்பெற்ற போதிலும்,
உன் வெட்கத்தைக் களவாடுவதில்
நான் தோற்றுத்தான் போகின்றேன்
வெட்கமெனும் விதையில்
வளர்ந்த ஒரு செடி நீ,
உன் மலர்களின் மகரந்தகளை
திருடுகின்றன என் தீண்டல்கள்

February 06, 2012

இது தனிக் குடித்தனம் அல்ல, 'தனியே' ஒரு குடித்தனம்

உன் அலுவலகத்தில் பூகம்பம் வந்து போன ஒரு திங்கட்க்கிழமை:

அடியே என கொஞ்சக்கூட நேரமில்லை,
ஒற்றை நிமிடத்தில் இரண்டு உயிர்களைப் பற்றி
மூன்று வார்த்தைகளில் ஒரு விசாரணை

உன் பணியில் புயலடித்த ஒரு செவ்வாய்க்கிழமை:

நம் மகனின் கணித மதிப்பெண் கவலைகள் எனக்கு
உன் தொழிலின் இலாபக் கவலைகள் உனக்கு
மகனும் நீயும், எண்களிடம் தோற்றுப் போகின்றீர்கள்

உன் வானில் சூரியன் வராத ஒரு புதன்கிழமை:

நான் முத்தம் வாங்கி ஆறு மாதம் ஆகிவிட்டது,
நீயோ வங்கிப் பணத்தின் முதல் மாத வட்டிக்கு
கணக்குக் கேட்கிறாய்,

உன் கடிகார முட்கள் மெதுவாய் நகர்ந்த ஒரு வியாழக்கிழமை:

நம் மகன் வாங்கிய முதல் பரிசுகள் எல்லாம்
உன் நேரமின்மை எனும் கோழையிடம்
தோற்றுப்போகின்றன

உன் நாட்காட்டியில் தீபாவளி வரும் ஒரு வெள்ளிக்கிழமை:

இங்கே நான் அனாதையாகும் நாட்கள் வந்த போதும்
உனக்கு மட்டும் புதிது புதிதாய்க் கிடைக்கின்றன
வெள்ளிக்கிழமை சொந்தங்கள்

இரவில் பிறந்து இரவில் மடியும் உன் சனி , ஞாயிற்றுக்கிழமைகள்

உன் ஐந்து நாட்களின் வரவுகள்
இரண்டே நாட்களில் செலவாய்,
இலாபம் உனக்கும், நஷ்டம் எனக்கும்


காகிதப் பூக்களை பூஜித்துக் கொண்டு நீ,

மலர்கள் சூடிய விதவையாய் நான்

யார் யாரோ உனக்கு சொந்தங்கள் அங்கே,
நீ இருந்தும் நம் மகன் அனாதை இங்கே

சுகம் மட்டுமே துணையாய் உன் படுக்கையில்
தாலி மட்டும்தான் துணையாய் என் படுக்கையில்

இது ஒரு தனிக் குடித்தன சொர்க்கம் அல்ல,
தனியே குடித்தனம் இருக்கும் நரகம்

February 02, 2012

உன் வெட்கத்தின் மேடைப் பாடல்களுக்கு
என் காதல் எப்போதுமே
முன் வரிசை ரசிகன் தான்