February 28, 2011

வாரம் ஒருமுறை
உனக்கு புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்தாலும்
என் சட்டைகள் மீது
உனக்கு ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது

February 27, 2011

தொலைதூர சாலைப் பயணங்களில்
நண்பர்களுடன் சேர்ந்து இருந்தும்,
நீ அருகில் இல்லாததால்
தனித்தே நான் ஒதுங்கிப்போகின்றேன்

February 24, 2011

கிராமத்து மரங்களில்
நான் வரைந்து வைத்திருக்கும்
நம் இணைந்த பெயர்களைப் படிக்கும் நீ,
'உன் பெயரிலும் என் பெயரிலும்
வேறு யாரோ இருக்கிறார்கள் போல'
என்று எப்படியடி பேச முடிகிறது?
நீ தரும் காலைத் தேநீருக்கு
வழக்கம்போல நான் தரும் முத்தப்பரிசை
இன்று காலையில் மறந்து போனேனோ?
நீ கொடுத்தனுப்பிய மதிய உணவிற்கு ஏனோ
மிளகாய்ப்பொடி வர்ணம் பூசப்பட்டிருக்கிறது

February 23, 2011

கடைக்கண் பார்வை,
இதழோர கள்ளச் சிரிப்பு,
தெருமுனை தலைதிருப்புப் பார்வை
இவையெல்லாம் எனக்காகவே செய்யும் நீ
'சம்மதம்' கேட்டால் மட்டும் கதவடைத்துக் கொள்கிறாய்.
இது என்னடி நியாயம்?

February 21, 2011

உன்னைப்பற்றிக் கற்பனையாய் நான் வரைந்த
கருப்பு வெள்ளை வரிகள் எல்லாம்,
நீ சொன்ன 'சம்மதத்தில்'
வர்ண ஓவியங்களாய் மாறிப்போயின

February 20, 2011

நீ சம்மதம் சொல்லிவிட்டாய்
உன் வேலையும் முடிந்துவிட்டது.
உனக்கும் சேர்த்து நானே
காதலித்துக் கொள்கிறேன்

February 19, 2011

உனக்காக என் இதயம் இதுவரை
பிரசிவித்த அனைத்து வரிகளும்
மோட்சம் பெற்றுவிட்டன,
நீ சொன்ன ஒற்றைச் சம்மதத்தில்
'சம்மதம்' என்ற வார்த்தையில்
போர்களே நின்ற கதைகளைக் கேட்டிருக்கின்றேன்,
ஆனால் உன் 'சம்மதம்' என்ற வார்த்தையில்
எனக்குள் பல போர்கள் ஆரம்பித்திருக்கின்றன

February 18, 2011

நீர்த்துளிகளை
என் மீது வீசிக்கொண்டிருந்த
பொல்லாத வானம்,
நீ எனக்கு சம்மதம் கூறியதைக்கேட்ட பின்
மலர்களைக் கோர்த்து
மழையாய் பொழிந்து கொண்டிருக்கிறது

February 13, 2011

நம் காதல் நாட்களில்
உன் தொலைபேசி முத்தங்களும்,
நம் திருமண நாட்களில்
உன் எதிர்பாராத முத்தங்களும்,
எப்போதுமே என்னை இனிக்க வைக்கின்றன
வழக்கம் போல என் தேநீர்க் குவளையின்
முதல் இரண்டு துளிகளை நீ
சுவைக்கவில்லையா?
ஏனோ தேநீர் சுவையில்லாமல் இருக்கிறது
அடியே, என் பேரழகே
உன் அதிகாலை வெட்கங்களை
வீட்டினுள்ளேயே வைத்துக்கொள்.
பாரேன் வாசலில் கோலமாய்
நம் பேரை வரைந்து வைத்திருக்கிறாய்

February 11, 2011

என்னோடு நீ இருக்கும் நேரங்களில்
உன் வாசத்தில் மட்டுமல்ல,
உன் புடவை வாசத்திலும்
மயங்கிப்போகிறேனடி என் மெய்ப்பாதியே ....

February 10, 2011

நீ வெட்கப்பட்டு சாய்ந்தபோது
என் சட்டையில் ஒட்டிக்கொண்ட
உன் நெற்றிக்குங்குமம்,
என்னையும் கூட சிவக்கத்தான் வைத்திருக்கிறது
நடுஇரவில் உன்னைப் பயமுறுத்தி
என்னோடு இறுக்கி அணைக்கவைக்கும்
பேய்களும் பிசாசுகளும்
இருந்துவிட்டுத்தான் போகட்டுமே !!!

February 07, 2011

மழையின் கண்களுக்குத் தெரியாமலே
மழைக்காகத் தவமிருக்கும் வேர்கள் போலே,
உன் கண்களுக்குத் தெரியாமலிருக்கும் என் இதயம்
உன் வார்த்தைகளுக்ககாகவே தவமிருக்கிறது

February 05, 2011

மனைவி உனக்கு மருதாணி வைத்து
உன் கைகள் சிவப்பது ஒருபுறம் இருக்கட்டும்,
காயாத உன் மருதாணிக் கைகளில் அணைப்பில்
என் ஆடைகள் பச்சை நிறங்களாய் மாறிக்கொண்டிருக்கின்றன

February 03, 2011

நீ வளர்க்கும் நம் வீட்டுக் கிளிக்கு,
காதல் மொழிகளை
கற்றுக்கொடுத்து இருக்கிறது
நம்முடைய இல்லறக் காதல்
பாதி நேரங்களில் தாயாகவும்
மீதி நேரங்களில் சேயாகவும்
வாழும் உன்னுடைய கதாபாத்திரத்திற்கு
நம் பெற்றோர் சூட்டிய பெயர் 'மனைவி'

February 01, 2011

மாதத்தின் இருபத்தேழு நாட்களில்
எனக்கு நீ தாயாகவும்,
மீதமுள்ள உன்னுடைய மூன்று நாட்களில்
உனக்கு நான் தாயாகவும் ஆகிப்போகிறோம்