March 29, 2012

விதவைப் பூக்காரி அனுபவிக்கும்
வேதனைகளை என்னில் உணர்கிறேன்,
இன்னொரு தம்பதியைப் பார்க்கும்போது
இன்னும் ஏனடி மனம் திறக்க மறுக்கிறாய்?
வரத்தைக் கொடுத்துவிட்டு
தவங்கள் இருக்கவைக்கும்
ஒரு வினோத தேவதை இந்தக் காதல்

March 27, 2012

காதல் அமிர்தம் தயாரிக்கும் செய்முறை:
தேவையான பொருட்கள்:
நான் எனும் ஒரு உப்புக் கல், நீ எனும் ஒரு துளி நீர்
செய்முறை:
உன்னில் என்னைக் கலந்தால் போதும்
நீ, நான் எனும் பேதமின்றி
உன் வெட்கமெனும் புள்ளியில் ஆரம்பித்து
உன் வெட்கமெனும் புள்ளியிலேயே முடிந்து விடுகின்றன
நம் அமிர்த முத்தங்கள்
கனவுகளில் உன்னிடம் வாங்கும் முத்தங்கள்
கனவுகளுடனே போய்விடுவதால்
கனவு சுகங்கள் முத்த சோகங்களாகிவிடுகின்றன
தாய்மை என்பது
பெண்கள் வாங்கிய வரமெனில்,
வெட்கம் என்பது
நீ வாங்கிய வரமடி
நம் விடியலை இருட்டாக்கி விட்டு
இந்த பூமிப் பந்தை வெளிச்சமாக்க
இன்றும் கிளம்பிவிட்டது கிழக்கின் விடியல்

March 21, 2012

ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த ஓவியனும், ஓவியம் வரையலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளுக்கு ஜீவனளிக்க இயலும்.
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த சிற்பியும், சிலை வடிக்கலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளுக்கு உயிரளிக்க இயலும்.
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த கவிஞனும், கவிதை எழுதலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளை காவியமாக்க இயலும்.
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த இசையாளியும், மெட்டுக்கள் அமைக்கலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளை பாடலாக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த பிரம்மனும், உயிர்களைப் படைக்கலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளுக்கு காதலைக் கற்றுத்தர இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த வானமும், விண்மீன்களைச் சூடும்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளுக்கு நிலவுகளை பரிசளிக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த உதடும், முத்தமிடலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளுக்கு சுவை கூட்ட இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த மாதமும், மார்கழி ஆகலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளில் முப்பது முகூர்த்தங்கள் பிறக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த நீரும், மேகங்களாய் மாறலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளை பொழிய வைக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்


உனை மாதிரியாய் வைத்து
எந்த இதயமும், துடிக்கக் கற்கலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளில் ரத்தத்தை சுழல வைக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த மரமும், மூங்கிலாய் மாறலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளை புல்லாங்குழலாக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த மொழிக்கும், எழுத்துக்கள் கிடைக்கும்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளில் உயிரெழுத்துக்களை சேர்க்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

உனை மாதிரியாய் வைத்து
எந்த மங்கைக்கும், மணம் பிறக்கும்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளில் காதல் வாசம் சேர்க்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்

- இப்படியாக தலைக்கனம் கொண்ட என் காதல், கடைசியாக உன் மெளனத்திடம் தோற்றுப் போனது ஒரு சோகக் கதை...

March 20, 2012

தராசின் ஒரு முனையில் உன் முத்தத்தின் நீளம்
மறுமுனையில் உன் முத்தத்தின் சுவை.
எடை காட்டத் தெரியாத, முள்ளாய் நான்
உன் பல்லவிக்கும், என் சரணத்திற்க்கும்
இடையே இசைக்கும்
ஒரு மெல்லிய இசையே இந்த காதல்
நான் ஊற்றும் நீரில் வாழ்ந்தாலும்
நீ சொன்னால்தான் பூக்கின்றன
நம் வீட்டு பூச்செடிகள்

March 19, 2012

கெட்டி மேளம், கெட்டி மேளம் ...

பட்டுப் புடவையில் ஒரு தேவதை
வானவில்லாய் அவள் வெட்கங்கள்
உலகின் முதல் அதிர்ஷ்டக்காரனாய் நான்,
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?

நாணம் நிறைந்த கண்களோடு நீ,
உன் அழகைக் களவாடும் கண்களோடு நான்,
வாழ்த்துச் சொல்லும் கண்களோடு சொந்தங்கள்,
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?

கைக்கெட்டும் தூரத்தில் மாங்கல்யம்,
கண்ணெட்டும் தூரமெங்கும் சொந்தங்கள்
என் மனம் மட்டும் ஒரு ஆவலில்
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?

ஊருக்குச் சாட்சியாய் அக்னி,
நமக்குச் சாட்சியாய் நம் காதல்
இப்போது மலரப்போகிறது நம் மண மலர்.
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?

ஏதோ மொழியில் அர்ச்சகரின் மந்திரங்கள்.
நான் வேண்டும் மந்திரம் மட்டும்
அவருக்கு கேட்கவில்லையோ?
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?

உன் வெட்கங்களை என்னிடமும்
என் தவிப்புகளை உன்னிடமும்
உரசலில் பரிமாறிக் கொள்கின்றன நம் பட்டாடைகள்
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?

கண்கள் திறக்கப்படுகின்றன
நம் காதல் செதுக்கிய சிலைக்கு,
'தேவதை நீ' இப்போது 'என் தேவதை'
எனக்கும் கேட்கிறது 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'

சொந்தங்கள் ஒரு புறம், காதல் ஒரு புறம்
காதல் தேவதைகள் ஒரு புறம்
நம் மீது பொழிகிறது மலர் மழை.
எனக்கும் கேட்கிறது 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'

காதலும் நானும் மோட்சம் கண்டோம்,
மாங்கல்யமும் மெட்டியுமாய்
என் சிவந்த சொர்க்கம் நீ,
மீண்டும் சொல்வார்களா 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?

உன் சம்மதம், இந்த கெட்டிமேளச்சத்தம்
என் இரண்டு வரங்கள்
என் ஒற்றைத் தவத்திற்கு
வாழிய, என் தேவதையே

March 18, 2012

நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன் ...

முன்னொரு நாளின் மாலை நேரம்:

என கள்ளப்பார்வை என ஆரம்பித்து,
உன் காதல் பார்வை என முடியும்
நிறைய கண் ஜாடைகளுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

அன்புள்ள என ஆரம்பித்து,
பிரியமுடன் நான் என் முடிக்கும்
நிறைய மடல்களுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

அடியே என ஆரம்பித்து,
முத்த வரிகளோடு முடியும்
நிறைய தொலைபேசிச் சங்கீதங்களுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

விரல் நுனிகளில் ஆரம்பித்து
கைரேகைகளோடு முடியும்
நிறைய சந்திப்புகளுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

என் வளர்பிறை என ஆரம்பித்து,
உன் முழுமதி என முடியும்
நிறைய நிலவுகளுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

என் பாதை என ஆரம்பித்து,
நம் பாதை என முடியும்
நிறைய கால்தட ஓவியங்களுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

என் கெஞ்சல் என ஆரம்பித்து,
உன் நாணம் என முடியும்
நிறைய முத்தங்களுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

நீ விடுப்பு எடுக்கிறாய் என ஆரம்பித்து,
நீ திரும்ப வருகிறாய் என முடியும்
நிறைய பிரிவு வலிகளுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

உன் பெயர் என ஆரம்பித்து,
நம் மணநாள் என முடியும்
நிறைய காவியங்களுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

என் தாய் என ஆரம்பித்து,
எனக்கும் தாய் என முடியும்
நிறைய மழலைகளுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

பின்னொரு நாளின் மாலை நேரம்:

மாங்கல்யத்தில் ஆரம்பித்து
நரைப் பொழுதிலும் தொடரும்
உன் காதல் பிம்பங்களை
இன்னும் இன்னும் நிறைய காதலிக்க ஆசைப்படுகிறேன்

March 12, 2012

என் இளவரசியும், உன் இளவரசனும்

நேரம்: நேற்று இரவு 10.30 மணி

நான்: எப்படி இருக்கிறாள் என் 'இளவரசி'?
நீ: நன்றாக இருக்கிறான் நம் 'இளவரசன்'

நான்: நட்சத்திரங்களை சிறையிடப் போகிறேன், மூக்குத்திக்காக
நீ: நிலவைச் சிறையிடப் போகிறேன், மகுடத்திற்க்காக

நான்: நாட்டியம் பயிற்று வைக்கப்போகிறேன், என் மகளை
நீ: இலக்கியம் பயிற்று வைக்கப்போகிறேன், என் மகனை

நான்: உன் அழகின் இன்னொரு உருவம், என் செல்வி
நீ: உன் வீரத்தின் இன்னொரு உருவம், என் செல்வன்

நான்: என்னைப் போல், அவளுக்காகப் பிறந்திருப்பான் ஒரு கவிஞன்
நீ: என்னைப் போல், அவனுக்காகப் பிறக்கப் போகிறாள் ஒரு தேவதை

நேரம்: இன்று இரவு 10.30 மணி

நான்: என்ன செய்கிறான் நம் இளவரசன்?
நீ: என் அரண்மனையிலிருந்து, நம் அரண்மனைக்கு வந்துவிட்டான்

நான்: என் தோளெனும், பல்லாக்கு அவனுக்காக இங்கே
நீ: உன் தோள் எனக்கு மட்டும், என் தோள் அவனுக்காகவும்

நான்: என்ன பெயர் வைப்பது அவனுக்கு?
நீ: உன் பெயரேதான், வேறு பெயரை உச்சரிக்க எனக்கு விருப்பமில்லை

நான்: உன் முத்தங்களை எல்லாம் நம் மகனே வாங்கிக் கொண்டான்
நீ: அவன் மூத்த மகன் மட்டுமல்ல, முத்த மகனும் கூட

நான்: உன் வருடங்களை, இவனின் வினாடிகள் மறக்கடிக்கின்றன
நீ: உன் காதலும், என் காதலும் இப்போது நம் காதலாய்

நேரம்: பின்னொரு நாள் இரவு 10.30 மணி

நான்: உன் இளவரசன் வந்து விட்டான், என் இளவரசி வர ஒரு வரம் கொடேன்
நீ: என் மௌன சம்மதத்தை, நம் இளவரசனின் அழுகை உடைக்கிறது.. இன்னொரு நாள் பார்ப்போம்...

March 10, 2012

ஒற்றைக் குடையில்
மழை நம்மைச் சேர்த்து வைத்தாலும்,
நீ எனைக் கட்டிக் கொள்ளாமலே
பிரித்து வைத்திருக்கின்றன
இந்த மௌன இடிகள்
சாரல் பெய்யும் நேரத்தில்
மெலிதாய் நனைகிறேன் உன் புன்னகையில்
முழுதாய் நனைக்க
எப்போது பெய்யும் உன் முத்தங்கள்?

March 07, 2012

ஒரு வளர்பிறை, முழுமதியாகிறது

காதல் பல்லவிக்கும்
திருமணச் சரணத்திற்கும்
இடையே ஒரு மெல்லிசை,
இன்று நம் ஒரு நிச்சயதார்த்த நாள்

காதல் பகலுக்கும்
திருமண இரவிற்கும்
இடையே ஒரு இனிய மாலைப்பொழுது
இன்று நம் ஒரு நிச்சயதார்த்த நாள்

காதல் வானவில்லிற்க்கும்
திருமண ஓவியத்திற்கும்
இடையே ஒரு தூரிகை
இன்று நம் ஒரு நிச்சயதார்த்த நாள்

காதல் மொட்டிற்க்கும்
திருமண மலர்க்கும்
இடையே ஒரு மென்வெடிப்பு
இன்று நம் ஒரு நிச்சயதார்த்த நாள்

காதல் கெஞ்சலுக்கும்
திருமண முத்தத்திற்கும்
இடையே ஒரு வெட்கம்
இன்று நம் ஒரு நிச்சயதார்த்த நாள்

காதல் காத்திருத்தலுக்கும்
திருமண வருகைக்கும்
இடையே மரிக்கும் என் விரல் நகங்கள்
இன்று நம் ஒரு நிச்சயதார்த்த நாள்

காதல் வார்த்தைகளுக்கும்
திருமணக் கவிதைக்கும்
இடையே ஒரு 'நீ'
இன்று நம் ஒரு நிச்சயதார்த்த நாள்

காதல் உன் புடவைக்கும்
திருமண என் முகத்திற்கும்
இடையே கள்ளக்காற்று
இன்று நம் ஒரு நிச்சயதார்த்த நாள்

காதல் கவிதைக்கும்
திருமணப் பாடலுக்கும்
இடையே ஒரு மெட்டு
இன்று நம் ஒரு நிச்சயதார்த்த நாள்

காதல் தவத்திற்கும்
திருமண வரத்திற்கும்
இடையே ஒரு தரிசனம்
இன்று நம் ஒரு நிச்சயதார்த்த நாள்

காதல் காதலுக்கும்
திருமண திருமணத்திற்கும்
இடையே ஒரு நிச்சயதார்த்த நாள்
இன்று நம் ஒரு நிச்சயதார்த்த நாள்

வெட்கச் சிவப்பை நீயும்
மற்ற நிறங்களை நானும் பூசிக்கொள்ள
இது ஒரு இரவுநேர வானவில்

March 05, 2012

நம் காதல் மொட்டுக்கு, இனிய மலர்ந்த நாள் வாழ்த்துக்கள்

சென்ற வருடம் இதே நாள்:
என் ஒரு தலைக் கவிதைகளுக்கும்
உன் மௌனத்திற்கும்
நடந்து வந்த போர்கள் முடிவுக்கு வந்தன

சென்ற வருடம் இதே நாள்:
உன் இளஞ்சிவப்பு உதட்டு மலர்கள் மீது
என் ஏக்கங்கள்
வீசி வந்த புயல்கள் கரையைக் கடந்தன

சென்ற வருடம் இதே நாள்:
காற்றில் கரையும் உன் பேரழகைத் திருடும்
என் விழிகளின்
கள்ளப் பார்வைகள் சிறையிடப் பட்டன

சென்ற வருடம் இதே நாள்:
காதல் பின்னேயும், திருமணம் முன்னேயுமாய்
உன்னோடு வாழ்ந்த
என் கனவுகள் வண்ணங்களாயின

சென்ற வருடம் இதே நாள்:
என் காதல் ஓவியனால் வடிக்கப்பட்ட
உன் வெட்கச்
சிலைகளுக்கு கண்கள் திறக்கப்பட்டன

சென்ற வருடம் இதே நாள்:
உன் ஒற்றைச் சொல் சம்மதம் பெற
என் காதல்க் கவிஞர்கள் இயற்றிய
சரணங்களுக்கு பல்லவிகள் கிடைத்தன

சென்ற வருடம் இதே நாள்:
என் ஆடி மாத நாட்களில்
உன் காதல் பஞ்சாங்கம் கொண்டு
நம் காதல் தேன்நிலவுக்கு நாட்கள் குறிக்கப்பட்டன

சென்ற வருடம் இதே நாள்:
உன் கரங்களைச் சந்தித்தபின்
குறுக்கும் நெடுக்குமாய்த் திரிந்த
என் கைரேகைகள் வண்ணக் கோலங்களாயின

சென்ற வருடம் இதே நாள்:
காற்றாய் நானும், நானாய்க் காற்றும்
உன்னைத் தீண்டிய போது
உன்னில் ஒளிந்திருந்த நாணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

இதே வருடம் இதே நாள்:
இந்த வருடம் இன்னொரு சம்மதம் கொடேனடி,
மலர்ந்த மொட்டுக்கள் திருமண மாலையாகட்டும்
ஏக்கத்தோடு நானும், மஞ்சள் நூலோடு என் விரல்களும்

March 01, 2012

எனக்காக உன் வெட்கம்தான் இங்கு மெய்
உனக்கான உன் வெட்கம் எப்போதுமே பொய்
என் காதலின் நாத்திகமும் நீயே
என் காதலின் ஆத்திகமும் நீயே
மனைவி உன் அணைப்பில் சில பௌர்ணமிகள்
காதலி உன் தவிப்பில் சில அமாவாசைகள்
என் காதலின் வைகாசியும் நீயே
என் காதலின் ஆடியும் நீயே
உன் கொஞ்சல்கள் சிலநாள்
என் கெஞ்சல்கள் சிலநாள்
என் காதலின் வளர்பிறையும் நீயே
என் காதலின் தேய்பிறையும் நீயே
முத்தமும் வெட்கமும், இங்கே சூரியனும் நிலவுமாய்
ஒன்று உதிக்கும்போது,
இன்னொன்று ஏனோ மறைந்து போகின்றது
என் காதலின் கிழக்கும் நீயே
என் காதலின் மேற்கும் நீயே
முத்தங்களால் திறந்து
முத்தங்களாலே மூடப்படுகிறது
நம் சொர்க்கங்கள்
என் காதலின் முதலும் நீயே
என் காதலின் முடிவும் நீயே
இமைகளைத் திறந்து உயிர் தருகிறாய்,
உதட்டைச் சுழித்து உயிர் எடுக்கிறாய்
என் காதல் பிரம்மனும் நீயே
என் காதல் சிவனும் நீ