June 28, 2012

நீ எனும் பொன் இரவுதான்
நான் எனும் நிலவை முழுமதி ஆக்குகிறது.
முழுமதி நாளில், நீயும் நானும் முழுமதியாய்
- நீ எனும் இரவு, நான் எனும் நிலவு
ஒரு முத்தமெனும் மேற்கில் உதித்து
மறு முத்தமெனும் கிழக்கில் விடிகின்றன
நம் நிலவு இரவுகள்
- நீ எனும் இரவு, நான் எனும் நிலவு
வெட்கமெனும் அமிர்தம் சுரக்கும்
ஒரு பாற்கடல் நீ,
அமிர்தமே அமிர்தம் சுரக்கும் ஒரு வரமெனக்கு
- நீ எனும் இரவு, நான் எனும் நிலவு
நம் கொல்லைப் புற மல்லிகை
வீசும் தென்றலோடு சேர்ந்து,
நம் வாசத்தை இந்த இரவெங்கும் பரப்புகிறது
- நீ எனும் இரவு, நான் எனும் நிலவு

June 26, 2012

இடைவெளிகள் எல்லாம், வெறும் இடைவெளிகள் தான்


அருகில் இருக்கும் தகப்பன் வீட்டிற்கு
தொலைவாய்ப் போன மனைவிக்கு,
நம் இல்லம் எனும் சொர்க்கத்தில் இருந்து
நீ எனும் சொர்க்கத்தை பிரிந்திருக்கும் கணவனின் இன்னொருமொரு காதல் கடிதம்......


என் கவிதையின் சொற்களுக்கும்
சொற்களின் உள்ளே புதைந்து இருக்கும் காதலுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

உன்னைப் பின்தொடரும் என் பாதத்திற்கும்,
என்னை வழிநடத்தும் உன் பாதத்திற்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

சம்மதம் சொல்லும் உன் விழிகளுக்கும்
சம்மதம் சொல்லத்துடிக்கும் உன் இதழ்களுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

பாதை சேரும் கைரேகைகளுக்கும்
பாதை விலகும் நம் திசைகளுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

எனக்கான உன் நாணத்திற்கும்
உனக்கான என் முத்தத்திற்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

கணவன் என் கெஞ்சலுக்கும்
மனைவி உன் கொஞ்சலுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

என் மென் இரவுக்கும்
உன் பொன் விடியலுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

நம் மகனுக்கான உன் முத்தத்திற்கும்
உன் முத்ததிற்க்கான என் ஏக்கத்திற்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

உன் புடவையின் தலைப்பிற்கும்
மழையில் நனையும் என் நிமிடங்களுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

இடைவெளிகள் எல்லாம்
வெறும் இடைவெளிகள்தான்...
உனக்கான என் காதலும், எனக்கான உன் காதலும்
நமக்காய் இருக்கும் வரையில்

ஆயிரம் முத்தங்களுடன்,
உன் நானே...

June 24, 2012

இதழ்களை வைத்து ஓவியம் ஆனவள் நீ.
இதழ்கள் வைத்து ஓவியம் வரைபவன் நான்.
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்
உன் இரவு மௌனமெனும் பூட்டிற்கு
என்னிடம் ஆயிரம் சாவிகள்.
அவைகளில் ஒன்று இந்த முத்தம்.
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்
நீ எனும் வனத்தில்
நான் ஒரு 'இதழ்கள் கொத்திப் பறவை'
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்
நீ உதட்டுச் சாயம் பூசி அழகாகிறாய்,
நானோ உன் உதட்டைச் சாயமாக்கி  அழகாகிறேன்
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்
முதல் முத்தத்தில்
அணைந்துபோகும் உன் வெட்க விளக்குகள்,
மறுமுத்ததில் மீண்டும் ஒளிர்ந்து கொள்கின்றன
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்
விழிகள் நீ ஒளிக்கும் இரகிசியங்களை
இதழ்களில் திருடுபவன் நான்.
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்

June 22, 2012

என் முத்தங்கள் காற்றில் கரைவதால்
நான் வர்ணமிழக்கிறேன்,
உன் முத்தங்கள் காற்றில் கரைவதால்
இரவு வர்ணமாகிறது
- இந்த இரவும் எனைச் சுட்டெரிக்கிறது
கதிரவன் நான் தேய்ந்து போகின்றேன்,
என் வளர்பிறை நிலவு நீ
மௌன மேகத்தில் ஒளிந்துகொள்கையில்.
- இந்த இரவும் எனைச் சுட்டெரிக்கிறது
நான் திருடப் பார்க்கும் உன் அழகை
இரவுக்கு தானம் அளிக்கிறாய்,
தவங்கள் இருப்பது நான், வரங்கள் பெறுவது இரவு
- இந்த இரவும் எனைச் சுட்டெரிக்கிறது

June 20, 2012

சூடிக்கொள்ள மணாளன் நானிருந்தும்
உன் பெண்மை ஏனோ
ஆடையையும், வெட்கத்தையுமே தேடுகிறது
- நம் வானெங்கும், இரவு நேர வானவில்கள்
உன் ஒற்றை முத்தத் தீக்குச்சியில்
எரிந்து போகிறது என் இரவு வனம்
- நம் வானெங்கும், இரவு நேர வானவில்கள்
தவிக்கையில் நெருங்கி வருகிறாய்,
நெருங்கையில் தவிக்க விடுகிறாய்
ஏனிந்த கண்ணாமூச்சி ஆட்டம்?
- நம் வானெங்கும், இரவு நேர வானவில்கள்
ஒரு புறம் மேகத்தில் ஒளியும் நிலவு
மறுபுறம் வெட்கத்தில் ஒளியும் நீ,
புவியும் நானும் தனியாய்த் தவிக்கிறோம்.
- நம் வானெங்கும், இரவு நேர வானவில்கள்
முத்தங்கள் எனும் புள்ளிகளுக்கிடையே
மாட்டிக்கொண்டது நம் இரவு எனும் கோலம்
- நம் வானெங்கும், இரவு நேர வானவில்கள்
வார்த்தைகள் ஏதும் வராமலே
இறந்துபோகிறது,
உனைப் பிரிந்திருக்கும் இன்றைய இரவு

June 18, 2012

எட்டாம் மாதம், ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுது


காட்சி: ஒன்று
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் முற்றம்

பிறக்கப்போகும் குழந்தைக்கு
வைக்கப் போகும் பெயர்க்கான
சண்டை இன்னும் ஓய்ந்த பாடில்லை

இன்றைக்கு மருதாணி மீது அப்படியொரு ஆசை.
நீ வைத்துவிடும் நாளெல்லாம்
சிவப்பதில் எனக்கும் மருதாணிக்கும்
எப்போதுமே ஒரு போட்டிதான்

உன் அங்கமெங்கும் மருதாணி ஆன நாட்களுக்கு
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
உதைக்கும் மகனை சமாதனம் செய்யும் செய்கைகளால்
என் வயிறெங்கும் இப்போது மருதாணி ரேகைகள்


காட்சி: இரண்டு
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் கொல்லைப்புறம்

மணமாகி பத்து மாதங்கள் ஆகியும்
புதுமனைவி எனக்கான
முத்தங்கள் இன்னும் தீர்ந்து போகவில்லை

இன்றைக்கு மல்லிகை மீது அப்படியொரு ஆசை.
மல்லிகைப் பூக்கள் எனும் லஞ்சம்
கொடுத்து முத்தங்கள் எனும்
காரியம் முடிப்பவன் நீ

இன்னொரு உயிரோடு இருப்பதால், உன் செல்ல இம்சைகளுக்கு
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
ஆனாலும் கள்வன் நீ, மகனுக்குக் கொடுக்கிறேன் என்று
என்னிடமும் ஏகமாய் வசூலித்து விடுவாய்


காட்சி: மூன்று
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் சமையலறை

நீயோ, நானோ இல்லை நாமோ
ஒற்றைக் கோப்பையில் இரட்டை தேநீர்
எனும் பங்கீடு இன்னும் மாறவில்லை

இன்றைக்கு உன் சமையல் மீது அப்படியொரு ஆசை,
இரட்டை உயிரோடு சாப்பிட அடம்பிடிக்கும் நான் ஒரு புறம்
கோபமே கொல்லாத என் காதலன் நீ மறுபுறம்.
போன பிறப்பில் என் தாயோ?

இன்னொரு மலர், என் செடியில் பூத்திருப்பதால்
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
இல்லையெனில் சமையல் வாசம் பிடிக்க வருகிறேன் என்று
என் வாசத்தை பிடித்து சென்றிருப்பாய்


காட்சி: நான்கு
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் ஓய்வறை

உடுத்தி இருக்கையில் மட்டுமன்றி
மடித்து வைக்கும் போதும்
என் ஆடைகளின்
வாசம் பிடிக்கும் பழக்கம் இன்னும் போகவில்லை

இன்றைக்கு உன் முத்தம் மீது அப்படியொரு ஆசை,
வரப்போகும் மகனால் முத்தங்களின் எண்ணிக்கை
இப்போது இரண்டு மடங்காகி விட்டது
இரட்டை பிறவியாய் இருக்கக் கூடாதோ?

தட்டிக் கேட்க ஆள் வரப்போவதால், உன் மிரட்டல்களுக்கு
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
இல்லையெனில் உன் கண்கள் எனும் அடியாட்கள் வைத்து
என் உதடுகளை கடத்திப் போயிருப்பாய்

June 14, 2012

எப்போது கிடைக்கும் உன் முதல் முத்தம்?

இன்னும் எத்தனை கலைஞர்கள்
பிறக்க வேண்டும்?
புல்லாங்குழல் ஏங்குகிறது முதல் இசைக்காக

இன்னும் எத்தனை நாட்கள்
கழிய வேண்டும்?
மாதம் ஏங்குகிறது முதல் முகூர்த்த நாளுக்காக

இன்னும் எத்தனை வார்த்தைகள்
பிறக்க வேண்டும்?
கவிதை ஏங்குகிறது முதல் நூலுக்காக

இன்னும் எத்தனை மலர்கள்
மலர வேண்டும்?
நார் ஏங்குகிறது முதல் மாலைக்காக

இன்னும் எத்தனை வண்ணங்கள்
சேர வேண்டும்?
தூரிகை ஏங்குகிறது முதல் ஓவியத்திற்
க்காக

இன்னும் எத்தனை நிமிடங்கள்
கடக்க வேண்டும்?
நிமிட முள் ஏங்குகிறது முதல் மணிக்காக

இன்னும் எத்தனை புள்ளிகள்
இணைய வேண்டும்?
வாசல் ஏங்குகிறது முதல் கோலத்திற்க்காக

இன்னும் எத்தனை துளிகள்
இணைய வேண்டும்?
மேகம் ஏங்குகிறது முதல் மழைக்காக

இன்னும் எத்தனை யுகங்கள்
நான் தவமிருக்க வேண்டும்
உன் முதல் முத்தத்திற்க்காக?

June 12, 2012

இந்த நிமிடமே, என்னை மணந்து கொள்ளேன் !!!

எங்கிருந்து வந்தது என் பெண்மைக்குத் தைரியம்?
முதல் வார்த்தையாய் உன் பெயர்தான்.
நரம்புகள் வெடிக்கின்றன, அணுக்கள் உடைகின்றன

உனக்குக் கேட்டிருந்தாலும் பரவாயில்லை
இன்னொரு முறை சொல்கிறேன் உன் பெயரை,
ரத்தத்தில் இனிப்பு ஆறு ஊற்றெடுக்கிறது

என் பெயர் இவ்வளவு அழகா?
இன்னொரு முறை சொல்லேனடா
என் பெயரோடு, உன் பெயர் இணைகையில்
மீண்டும் ஒரு முறை மலர்ந்து போகிறேன்

வெட்கம், நாணமும் உடைந்த அணைகளாய்,
காட்டாற்றில் மாட்டிக் கொண்ட
மங்கை நான் என்ன செய்ய?

எத்தனை ஜென்மத்தில் எத்தனை தவங்கள் செய்தேனோ
'நான் உன்னைக் காதலிக்கிறேன்'
என்று நீ கூறக் கேட்க

இமைகள் மூடுகிறேன்
இதழ்கள் திறக்கிறேன் சம்மதத்திற்காக
உன் மார்பில் சாய மனம் ஏங்குகிறது

எந்த தெய்வம் தந்தது நீ எனும் வரத்தை?
எந்த நாள் ஆனது, நீ எனும் முகூர்த்த நாளாய்?
எந்த நான் ஆனேன், உனக்கு மனைவியாய்?

ஒற்றை முத்தம் கேட்கச் சொல்கின்றன
என் உடம்பின் ஆயிரமாயிரம் அணுக்கள்,
அவைகளின் ஆசைகளை என் வெட்கம் தோற்கடிக்கிறது

இந்தக் காதல் இப்படித்தான்,
குழந்தையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகிறது
தூரத்தில் நீ இருப்பதை நீ மறக்க
கண்களை மூடிக் கொள்கிறேன், அப்போதுதான் நீ அருகில் வருவாய்

பசலை நோயின் அறிகுறி ஆரம்பிக்கிறது
இந்த நிமிடமே என்னை மணந்து கொள்ளேன்
வேறு என்ன எனக்கு வேண்டும்?

June 11, 2012

முதல் தொண்ணூறு நிமிடங்கள்

நாவில் நடக்கிறது ஒரு நிலநடுக்கம்,
வார்த்தைகளுக்குள் ஒரு போராட்டம்
இதயத்தில் நடக்கிறது ஒரு ஓட்டப்பந்தயம்

நீயாவது தொடங்கேனடி,
என் பெயர் சொல்லி அழைக்கிறாய்,
தேனாய் இனிக்கிறது என் பெயர்
இன்னொரு முறை என் பெயர் சொல்லேனடி

பதிலுக்கு உன் பெயர் சொல்கிறேன்,
இன்னும் தேனாய் இனிக்கிறது
எவ்வளவு நேரம் நடக்கும் இந்த பெயர் மாற்றம்?

சொற்கள் விழுகின்றன, வாக்கியங்கள் நிரம்பவில்லை
வாக்கியங்கள் விழுகின்றன, சொற்கள் நிரம்பவில்லை
இரண்டும் விழுகின்றன, நாம் நிரம்பவில்லை

முப்பது நிமிடங்களில் முன்னூறு முறை இறந்துவிட்டேன்
ஒப்புக் கொள்கிறேன்,
காதல் எனும் நடுக்கம் பெற்றவர்களில் நானும் ஒருவன்

ஆண் மகனுக்கும் வெட்கம் வருதடி
எப்படியாவது சொல்லிவிட வேண்டும்
'நானும் உன்னைக் காதலிக்கிறேன்' என்று

அறுபதாவது நிமிடத்தில்
நாவிற்கு வந்துவிட்டது தைரியம்
உரக்கச் சொல்கிறேன் 'என் காதலை'

காதலைச் சொல்லிவிட்ட குதூகலம்,
நீயும் சொல்லிவிட்டால் போதுமடி
மோட்சம் பெற்றுவிடுவேன்

மோட்சமடைகிறேன் நான்.
வெட்கம், காதல் எனும்
இரு மொழிகளில் சம்மதம் சொல்கிறாய்

தவங்கள் எல்லாம் இப்போது வரங்கள்
கனவுகள் எல்லாம் இப்போது நிஜங்கள்
நான் எல்லாம் இப்போது நீ
நீ எல்லாம் இப்போது நான்

தொண்ணூறாவது நிமிடம்
காதல் மேகங்கள் பொழிய ஆரம்பித்து விட்டன,
இனியெல்லாம் காதல் மழையே

புதுக் காவியத்தை வரைய ஆரம்பிக்கிறேன்
இந்த தொண்ணூறு நிமிடங்கள் எனும்
வண்ணங்களைக் கொண்டு

June 10, 2012

கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை


கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறேன்,
விதைத்த கவிதை விதைகள்
எல்லாம் மலர்களாய் மலர்ந்து இருக்கின்றன
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

நிலவு உதிப்பதில் நான் விடிகின்றேன்
கதிரவன் உதிப்பதில் நான் இரவாகிறேன் ,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

மலர்கள் பறித்த பின்
செடி அழும் குரல் கேட்கிறது,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

ஆயிரம் ஒத்திகைக்குப் பின்
உன் மேடையில் என் முதல் காதல் கடிதத்தின் அரங்கேற்றம்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

உனக்கான முத்தங்களை சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன்,
எண்ணிக்கை வேண்டுமா?
விண்மீன்களை எண்ணிப் பார்த்துக் கொள்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

உன் புடவையின் வண்ணங்களுக்கு
ஏங்குகிறது என் வானின் வானவில்,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

சந்தித்த முதல் நாளிலேயே உனக்கும் எனக்கும் சண்டை,
என் முத்தமா, உன் வெட்கமா?
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

ஒரு முனையில் நீ, மறுமுனையில் நான்
இணைக்கும் பலமாய் நடுவே கெட்டிமேள நாள்,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

உன்னோடு இருக்கும் நொடிகளை நீளச் சொல்கிறேன்
நீ இல்லாத நாட்களை இறக்கச் சொல்கிறேன்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

நீ இதழ் திறந்து சம்மதம் சொல்.
நான் இதழ் மூடி சம்மதம் சொல்கிறேன்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

June 08, 2012

என்னதான் நான் பழக்கி வைத்தாலும்,
நீ அழைத்தவுடன் உன்னிடம் ஓடிவிடுகிறது
நான் படும் வெட்கம்
- கணவன், நீ ஒரு காதல் கயவன்

June 07, 2012

மூன்று வாசங்கள் வீசும்
ஒரு அதிசய மலர் உன் புடவை,
தனியே இருக்கையில் ஒன்று
நீ அணிகையில் ஒன்று
நமக்கு இடையில் போராடுகையில் இன்னொன்று
ஒற்றை வார்த்தையில்
பல வாக்கியங்கள் பேசுபவள் நீ,
இன்று ஏனோ மௌனமானாய்
இறந்துபோயிற்று என் மொழி
உன் இசை இல்லாமல்
பாடலாகும் வரங்களை இழக்கின்றன
என் கவிதை வரிகள்
- நீ இல்லாமல், நான் ஏது?

June 06, 2012

ஒரே எண்ணிக்கையில்
உன் முத்தங்கள் கிடைத்த பொழுதும்
கன்னங்களை விட,
உதடுகள் ஏனோ விரைவாய் வாடிப் போகின்றன
படுக்கையில் என் கரங்களின் எல்லைக்குள்ளும்
சமையலறையில் என் பார்வையின் எல்லைக்குள்ளும்
உன்னை வைக்கச் சொல்கிறது இந்த பெண் மனது
- உன் வாசம் வீசும், நம் சமையலறை
என் சமையல் பாடங்களை விட
கள்ளன் உன், சமையலறைப் பாடங்கள் மிக அதிகம்
- உன் வாசம் வீசும், நம் சமையலறை
ஒரு உதட்டில் தேநீர் வாசம்
மறு உதட்டில் உன் வாசம்
- உன் வாசம் வீசும், நம் சமையலறை

June 05, 2012

பின்னிரவு மழை மேகங்களுக்கு
நடனம் ஆடுகின்றன
நம் முன்னிரவு முத்த மயில்கள்
பின்னிரவுக் கோலங்களுக்கு
புள்ளிகள் வைக்கின்றன,
நம் முன்னிரவு முத்தங்கள்
பின்னிரவுக் காவியங்களுக்கு
முன்னுரை வரைகின்றன
நம் முன்னிரவு முத்தங்கள்

June 03, 2012

நாளெல்லாம் நிலவுக் கவிதைகள்,
நாள்காட்டியில் இன்று அமாவாசை
- ஆமாம், நானும் ஒரு காதல் கவிஞன்

June 01, 2012

நேற்றைய அத்தியாயத்தின் கடைசி வரியும்
இன்றைய அத்தியாயத்தின் முதல் வரியுமாய்,
 சிதறிக் கிடக்கின்றன மல்லிகை இதழ்கள்
- இன்னும் நீளட்டும் இந்த இரவு
பகலெல்லாம் நீயும் நானும்
வேறு வேறு வண்ணம்,
இரவெல்லாம் நீயும் நானும் வர்ணஜாலம்
- இன்னும் நீளட்டும் இந்த இரவு