நீயும் நானும் ஒரே துருவமாய் இருந்தாலும் நம் உதடுகள் எப்போதுமே எதிரெதிர் துருவங்கள்தான். ஈர்ப்பு விசையிடம், பிரிப்பு விசை தோற்றுத்தான் போகிறது
May 26, 2011
நிறைய முத்தங்கள், கொஞ்சம் வெட்கம் - நம் தொலைபேசி நிமிடங்கள், ஓரிரண்டு முத்தங்கள், நிறைய வெட்கம் - நம் தனிமை நிமிஷங்கள்
May 24, 2011
மழையில் நனைந்த எனக்கு பழைய புடவைத் தலைப்பைத் தர மறுக்கும் நீ, நம் மகன் முகம் துடைக்கக் கேட்டால் பட்டுப் புடவைக்கும் மறுப்புச் சொல்வதில்லை
May 22, 2011
முழக்கணக்கில் லஞ்சம் வாங்கும் நீ இனாமாய் இன்னொரு முத்தம் தருவதில் நட்டமொன்றும் வந்துவிடப்போவதில்லை
May 18, 2011
சாப்பிட அடம்பிடிக்கும் நம் குழந்தைக்குக் கிடைக்கின்றன அநேகக் கொஞ்சல்களும், உன் இடுப்பில் இடமும். ஏதும் பேசாமல் அமைதியாய் இருக்கும் எனக்குக் கிடைக்கின்றன தனியாய் சில பருக்கைகளும், நீ சமைத்துவைத்த பாத்திரங்களும்
கடற்கரையில் நான் வரையும் காதல் கோலங்கள், நம் மகன் வரையும் உருவமில்லா ஓவியங்களிடம் தோற்றுத்தான் போகின்றன
May 17, 2011
நீ பார்க்காத வேளைகளில் கள்ளத்தனமாக நான் உன்னைப் பார்க்கிறேன், நீ இன்னும் ஒரு படி மேலே போய் என் கள்ளத்தனத்தை உன் கடைக்கண்களில் ரசித்து மகிழ்கிறாய்
நீ உடையை சரிசெய்யும் வேளைகளில் தெரியாமல் என் மீது விழும் உன் புடவைத் தலைப்பில் நான் கலைந்துபோகின்றேன்
எங்கே ஒளித்து வைத்திருந்தாய் இத்தனை முத்தங்களை, நம் புதுக்குழந்தைக்கு மட்டும் வாரி வழங்க யாரிடம் புலம்புவது என் ஏக்கத்தை!!!
அடியும் சரி, அணைப்பும் சரி நம் மகனுக்கு மட்டும்தான், இப்போதெல்லாம் அணைக்கப் போனால் அடிதான் மிஞ்சுகிறது
May 16, 2011
நீ வரத் தாமதமாகும் சில வினாடிகளிலேயே , என் நக நுனிகளுக்கும் என் பற்களுக்கும் இடையே முடிந்து போகின்றன சில உலகப்போர்கள்
இருநூற்று நாற்பத்தேழு எழுத்துக்களின் ராகங்களும் போதவில்லை, உன் இரண்டு எழுத்துப் பெயரைப் பாட
May 15, 2011
உதிரிகளாய் இருக்கின்றன உனக்காக என் பேனா பூத்த பூக்கள், எப்போது வரப்போகிறாய் தொடுக்கவும், சூடிக் கொள்ளவும்?
May 12, 2011
என் கோபங்களின் சிவப்பு உன் உதட்டுச் சிவப்பில் வர்ணமிழந்து போகிறது
May 10, 2011
வாரத்தின் ஏழு நாட்களுமே காதல்கிழமை ஆகிப்போனதால், மாத, வருடக் கணக்கு நமக்கேன்?
திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை இருந்த வாரநாட்கள் போய், இப்போது ஏழு நாட்களுமே காதல்கிழமை தான்
May 04, 2011
உன்னைக் காதலிக்க ஆரம்பித்தபின் விமானிப் பணியை தொடர முடிவதில்லை, வானும் பூமியும் தலைகீழனாதால் எங்கே தரை இறக்குவது என்பது எப்போதுமே ஒரு புதிர்தான்
மாலுமி நான் இயக்கும் கப்பல் நடுக்கடலில் நின்று போயிருக்கிறது, சுற்றிலும் தெரிந்த கடல் நீர் போய் உன் பூ முகம் தான் நான் பார்க்கும் திசையெல்லாம் தெரிகிறது
தனித் தனியாய் இருந்த நாம் கூட ஒன்றாய் இணைந்து போனோம், ஏன் இன்னும் புகைவண்டித் தண்டவாளங்கள் பிரிந்தே இருக்கின்றன?
May 03, 2011
நம் பேரை எழுதிப் பார்த்தால்தான் நான் வடிவமைக்கும் திருமண அழைப்பிதழ்கள் முழுப்பொலிவு பெறுகின்றன
முதல் முத்தம் - எப்போதுமே நினைவில் இருக்குமாம், நம்முடைய எந்த முதல் முத்தம் உனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது?