March 31, 2011

கடும் தடுப்புகளை உடைக்கும்
புயல் காற்று நான்,
உன் புடவைத் தலைப்பை
கடந்து போகயில் மட்டும்
தென்றலாய் மாறிப்போகிறேன்.
வாழ்க நீயும், உன் காதல் மாற்றங்களும்.

March 29, 2011

என் பகல் நேரத்தில்
சூரியன் வானில் தங்குவதில்லை,
என் இரவு நேரத்தில்
நிலவும் வானில் தங்குவதில்லை.
உனைக்காணப்போகும் என் மனதைப்போல்
அவைகளுக்கும் தலை-கால் புரியவில்லையோ !!!

March 24, 2011

தேர்வை விட
தேர்வு முடிவுக்குப் பயப்படும்
சராசரி மாணவனைப் போல்,
என் காதலை விட
உன் பதிலுக்கு அதிகம் பயப்படுகின்றேன்
பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு
யாரடி உன்னுடைய பெயரை வைத்தது?
குழந்தையை யார் பெயர் சொல்லி அழைத்தாலும்
நான்தான் முதலில் திரும்பிப் பார்க்கிறேன்

March 23, 2011

என் கரிசல் காட்டு பூமியை
உன் மெல்லிய பாதங்கள்
பூந்தோட்டமாய் மாற்றிப்போயின.
எப்போது வருகிறாய் பூச்சூட?
மலர்களோடு காத்திருக்கிறேன்.
நித்திரயுமில்லை,
நித்திரைக் கனவுகளில் நீ வருவதுமில்லை.
உன் சம்மதம் இல்லாதவரை
ஒவ்வொரு இரவுப்பொழுதும்
எனக்கு நரகப்பொழுது தான்

March 22, 2011

வெட்கத்திலும் கோபத்திலும்
சிவப்பு நிற தோகை விரிக்கும்
என் பெண் மயில் நீ,
நீ தோகை விரிக்கும் நாழிகைக்காகவே
தவம் கிடக்கின்றன என் காதல் மேகங்கள்
விநாடி, அடி இவையெல்லாம்
நேரத்தையும் தூரத்தையும் அளவிட
இயற்பியல் கண்டுபிடித்த அலகுகள்.
அழகை அளவிட பிரம்மன் கண்டுபிடித்த
அலகும் அழகும் நீயேதானடி என் தேன்நிலவே

March 20, 2011

இதயசிகிச்சை நிபுணருக்கும் தெரியவில்லை
என் இதயம் வேலை செய்யும்விதம்,
இதயத்தில் நீ குடி கொண்டிருப்பதால்
உன்னிடமே விசாரிக்கச் சொல்லிவிட்டார்
நான் தனிமையில் இருந்தபோது
என்னை நனைத்து வேடிக்கை பார்த்த மழையே,
எப்போது வருகிறாய் நீ மறுபடியும்?
இப்போது என்னோடு சேர்ந்து
நனைய வரப்போகிறாள் என் தேவதை

March 19, 2011

அலைகள் ஓய்ந்த நேரத்தில்
மீன்களைத் திருடும் மீனவன் நான்,
ஆனால் என் வானம் விழித்திருந்தபோதும் கூட
விண்மீன்களை எல்லாம் திருடிப்போன
காதல் கொள்ளைக்காரி நீ...

March 18, 2011

என் தூரிகை உச்சரிக்கும்போது ஓவியமாகவும்
என் உதடுகள் உச்சரிக்கும்போது பாடலாகவும்
என் இதயம் உச்சரிக்கும்போது துடிப்பாகவும்
இருக்கிறது அழகே, உன்னுடைய பெயர்

March 17, 2011

கடும் புயலிலும்
துடுப்பு வீசும் படகோட்டி நான்,
நீ என்னைக் கடக்கும் நிமிஷங்களில்
மாயமாய் நிலைகுலைந்து போகின்றேன்
என் மிருகக்காட்சி சாலையின்
அனைத்து விலங்களும்
என் கட்டளைக்கு அடிமைப்படுகின்றன,
ஆனால் எனைக் கடந்து போகும் வேளையில்
நீ சிந்தும் ஒற்றைப்பார்வையில்
என் உயிரும் கூட உனக்கு அடிமையாகிப் போகிறது
உன் வீட்டு தோட்டப்பூக்களிடம்
பிரிவுப் பாடல்கள் பாடியது போதும்.
இருக்கும் மொட்டுகளுக்கெல்லாம்
சீக்கிரம் பூக்கச் சொல்லிக்கொடு,
பூமாலைகள் தேவைப்படுகிறது நமக்கு

March 16, 2011

அணைத்தே வைத்துக்கொள்ள
நினைக்கும் உன் கரங்களுக்கும்
தள்ளிவிட நினைக்கும் உன் நாணத்திற்கும்
இடையில் நடக்கும் போராட்டத்தில்
வெற்றி என்னவோ எனக்குத்தான்,
இன்னும் சிறிது நேரம் உன் அணைப்பிலேயே இருக்கிறேன்
உன்னுடைய முத்தத்தை விட
உன் மூச்சுக்காற்றை
என் கன்னங்கள் வேண்டினாலும்,
என் உதடுகளுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை
பச்சை மரங்களை வெட்டி
பிழைப்பு நடத்திய மரவெட்டி நான்,
உன்னைக் காதலிக்க ஆரம்பித்தேன்,
இப்போது பூக்களின் இதழ்கள்
உதிரும் வலியைக்கூட உணர்கிறேன்

March 15, 2011

உன்னுடைய முத்தத்தை விட
உன் மூச்சுக்காற்றை
என் கன்னங்கள் வேண்டினாலும்,
என் உதடுகளுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை

March 14, 2011

திருமணத்திற்குப் பிறகு
ஏன் கவிதைகள் எழுதுவதில்லை
என வினவும் நண்பர்களுக்கு,
'உன்னைக் காதலிக்கவே நேரம் சரியாய் இருக்கிறது'
என்பதை எப்படிப் புரியவைப்பது?
இன்னொரு முத்தம் கொடேன்,
உன்னுடைய முத்தத்தை விட
உன் மூச்சுக்காற்றை
என் கன்னங்கள் வேண்டுகின்றன

March 13, 2011

ச..ரி..க..ம..ப..த..நீ..
சங்கீதம் ஏனோ வந்து போகவில்லை.
உன் பெயரிலுள்ள எழுத்துகளை
இடைவெளிவிட்டு வாசிக்க ஆரம்பித்தேன்
இப்போது இசையும், ராகமும் எனக்கு நா-நுனியில்
எந்த பூச்செடியும்
விதைத்த நாளில் வளர்ந்து பூத்ததாய்
சரித்திரம் இல்லை.
ஆனால் உன்னைப்பார்த்த கணத்தில்
எனக்குள் விழுந்த காதல் பூச்செடி
மறுகணமே வளர்ந்தும் பூத்தும் போனதென்ன மாயமோ!!!
நீ என் பெயர் சொல்லி அழைக்கும்போது
முதல்முறையில் தலைதிருப்ப
மனம் வருவதில்லை.
இன்னொரு முறை என் பெயர் சொல்லி அழையேன்,
என் பெயர் உன் குரலில் மிக அழகாய் இருக்கிறது.

March 11, 2011

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலே
உன் மௌனம் தாங்கும் நானும்,
இப்போது பொறுமைக்கு
உவமையாகிப் போனோம்
ஆயிரம் பாடல்களுக்கு
சரணங்கள் எழுதி விட்டேன்,
எப்போது தரப்போகிறாய்
என் பல்லவிகளை?

March 10, 2011

உன் பெயரிலுள்ள
இரண்டு எழுத்துக்கள் மட்டுமே
தமிழில் உயிரெழுத்துக்கள்,
மற்ற எல்லாமே உயிரற்ற எழுத்துக்கள்தான்
புயலுக்குப்பின் அமைதி வருவதுதானே
இயற்கையின் நியதி,
அமைதியாய் நீ எனைக்கடந்து போனபின்
என் மனதைத்தாக்கியிருக்கிறது உன் புயல்
உனக்காக நான் ஒரு
முத்த வங்கி ஆரம்பித்திருக்கிறேன்.
ஒன்றுக்கு பன்மடங்கு வட்டி அளிக்கிறேன்,
எப்போது வருகிறாய் கணக்குத் துவங்க?

March 09, 2011

என் மொழிக்கு
இன்னும் உயிர் வரவில்லை,
உயிர் எழுத்துக்களையெல்லாம்
உன் மௌனம் சிறைபிடித்து வைத்திருக்கிறது
பள்ளிக்குக் கிளம்பும் நம் மகனுக்கு மட்டும்
வீட்டின் உள்ளேயும் வெளியும்
உன்னிடம் கிடைக்கின்றன அனேக முத்தங்கள்.
என் கதை மட்டும் வீட்டின் உள்ளேயே
முடிந்துபோகிறது சில அவசர வினாடிகளில்.

March 08, 2011

இடது, வலது, மேல், கீழ் அறைகள் என
இதயத்தைப் பற்றி மருத்துவம் ஏதேதோ சொல்கிறது.
'இதயமாகவே நீதான் இருக்கிறாய் '
என்பது மட்டும்தான் என் புத்திக்குத் தெரியும்
மனைவி உன்னிடம்
தினம் தினம் தோற்றுப் போகத்தானே,
உன் சுயம்வரத்தில் நான் வெற்றிபெற்றேன்.
இந்த தோல்விகளுக்காக அந்த வெற்றி சமர்ப்பணம்.
என் சமுத்திரத்துளிகள் எல்லாமே
தேன் துளிகளாய் இனித்துப்போயின,
என் கடற்கரையில் நீ கால் நனைத்துப்போனபின்
பாலைவனங்களை எல்லாம்
மலர்ச்சோலைகளாய் மாற்ற
என்னிடம் அரசாங்கம் உதவி கேட்கிறது.
என்னுடன் கைகோர்த்து நடந்து வருகிறாயா?
அயல்நாடுகளை படையெடுத்து வெல்லும்
போர்க்குணத்தை தொலைக்க நினைக்கிறேன்.
மந்திரியரே:
'என் இளவரசியை அழையுங்கள்,
அவளின் பூ முகத்தை ஒரு முறை பார்த்தால்போதும்,
என் கோபங்கள் நொறுங்கிப்போகும்'
எனக்குள் பூத்திருக்கும் காதலும்,
கடந்துபோகின்ற முகூர்த்த நாட்களும்
மௌனமாய்க் காத்திருக்கின்றன,
உன் மௌனம் உடைந்துபோக
என் காதல் பஞ்சாங்கம்
இன்னும் ஏனோ உன்னால் கணிக்கப்படாமல்
வெறுமையாய் இருக்கிறது.
கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா
என் காலக்கடிகாரமே!!

March 05, 2011

நீ நீராடி விட்டுப்போன வழியில்
உன்னில் இருந்து உதிர்ந்த நீர்த்துளிகளில்,
என் பாலைவனங்களில் எல்லாம்
வந்துபோனது ஒரு பெரும் வெள்ளப்பெருக்கு
நீ எனக்கு பதில் மின்னஞ்சல்கள்
அனுப்ப ஆரம்பித்த நாளிலிருந்து,
என் மின்னஞ்சல் பெட்டிக்கு
பூவாசம் பிறந்திருக்கிறது.

March 03, 2011

நீயும் நானும் முதலாய்ச் சந்தித்த
நம் தோழியின் திருமண நாளில்,
இசைக்கப்பட்ட கெட்டிமேளச்சத்தத்தில்
என்னில் உருவான மணமுடிச்சு உன்னுடன்தான்.
மாலை மாற்றிக்கொள்ள எப்போது சம்மதம் சொல்வாய்?
மணமகள் தோழியாய் நீயும்,
மணமகன் தோழனாய் நானும்
நம் நண்பர்கள் திருமணங்களில் இருந்ததுபோதும்.
என் மணமேடையில் எப்போது நீ
மணமகளாய் அமரப்போகிறாய்?

March 02, 2011

நமது குழந்தை கூட
எனது கரம் பிடிக்காமல் நடக்கப்பழகிவிட்டான்,
மனைவி நீ ஏனோ இன்னும்
எனது கரம் பிடிக்காமல் நடக்கப்பழகவில்லை