மின்சாரம் இல்லா இரவு நேரங்களில் இடிக்கும் இடி கூட சங்கீதம்தான் எனக்கு, பயத்தில் என்னை நீ இறுக்கிக்கொள்வதால்
January 30, 2011
எனக்காக நீ எழுதிய சிறந்த கவிதை - உன் வெட்கம் உனக்காக நான் எழுதிய சிறந்த கவிதை - என் காதல் கடிதங்கள் நமக்காக நாம் எழுதிய சிறந்த கவிதை - நம் திருமண அழைப்பிதல்
January 29, 2011
எங்கள் ஊர் மகளிர் கல்லூரிக்கு புதிதாய் வந்திருக்கும் ஆசிரியை நீ, முதல் நாளில் நீ வாங்கிய பட்டம் 'தேவதைகளின் தேவதை'
அருகிலே அணைந்து தூங்கும் நீ தூக்கத்தில் பேசும் புரியாத வார்த்தைகளின் நடுவே என் செல்லப் பெயரும் வருகையில், என் தூக்கம் கலைந்து போகின்றது
வீட்டு முற்றத்தில் மீண்டும் நம் மழை நாட்கள் வந்துவிட்டன, கப்பல்கள் விட நீயும் கவிழ்ந்துபோக நானும் தயார்
January 27, 2011
நீ இல்லாத நம் வீட்டு தேநீர் நேரங்கள், எனக்கு கசப்பாய் சுவைக்கின்றன
January 26, 2011
உன் நகங்களுக்கு வர்ணம் தீட்ட இயலாததால் நான் வர்ணமில்லாமல் இருக்கிறேன், தாய் வீட்டிலிருந்து எப்போதடி திரும்ப வருகிறாய்?
January 23, 2011
நம் திருமண வாழ்வைப் பாட ஏழு ஸ்வரங்கள் போதினாலும், இந்த நம் பிரிவைப் பாட எட்டாவது ஸ்வரம் கண்டிப்பாக வேண்டும்
January 20, 2011
'இன்னும் என் மகள் ஒரு வாரம் இருக்கட்டுமே' என்று சொல்லும் உன் அப்பாவின் ஆசையில், என் பிரிவு ஏக்கங்கள் ஏனோ மறைந்து போகின்றன
நம் வீட்டு தொலைக்காட்சியில் உனக்குப் பிடித்த பாடல் போய்க்கொண்டிருக்கிறது, சமையலறையில் இருந்து உடன்பாட்டு பாட நீ இங்கு ஊரில் இல்லாததால் மனம் ஏனோ பாடலில் ஒட்டவில்லை
January 19, 2011
நீ துவட்டி விடுகிறாய் என்பதற்காகவே மழையில் நனைந்து வீடு வரும் நான் , இப்போது நீ ஊரில் இல்லை என்பதால் மழையையும் கூட வெறுக்கிறேன்
January 18, 2011
தூக்கம் கலைந்த நடுநிசிகளிலும் என் கைகளின் எல்லைகளுக்குள் நீ இல்லாமல் இருக்கிறாய், தகப்பன் வீட்டிலிருந்து எப்போது திரும்புவாயடி?
January 14, 2011
பூப்பறிக்க ஊரில் நீ இல்லாததால் கொல்லைப்புறத்து மல்லிகைப் பூக்களும், சூடிவிட உன் கூந்தல் இல்லாததால் என் கைகளும் வாடியும் ஏங்கியும் போயிருக்கின்றன
நாள்காட்டியில் வரும் ஒவ்வொரு முகூர்த்தநாளும், கடந்துபோன நம் முகூர்த்தநாளை சந்தோஷமாய் நினைவுபடுத்துகின்றன
January 13, 2011
புகைவண்டி நிலையத்தில் உன்னை உன் பிறந்த வீட்டிற்கு வழியனுப்பிவிட்ட எனக்கு ஏனோ என்னுடைய வழி மறந்துபோனது
January 12, 2011
தோழி திருமணத்திற்காக சொந்த ஊருக்குப் போய்விட்டாய், நம் வீடு மட்டுமல்ல நானும் கூட உன் வாசத்தை இழந்துதான் போயிருக்கிறோம்
January 11, 2011
பிரதி மாதமும் இரண்டு நாட்கள் நீ உன் பிறந்த வீட்டுக்குப் போய் விடுகிறாய், இருபத்தெட்டு நாட்களாக வளர்ந்த நான் அந்த இரண்டு நாட்களில் முழுதும் தேய்ந்து போய் விடுகின்றேன்
January 05, 2011
எப்போதுமே உன்னுடன் சண்டையிடும் உன் அக்கா குழந்தைக்கு, இன்று மட்டும் தாரள முத்தங்கள். எதிர் வீட்டு வாசலில் நான் நிற்கிறேன் என்பதற்காக
January 04, 2011
என் மாதத்தின் முப்பது நாட்களையும் முகூர்த்த நாட்களாய் மாற்றியவள் நீ, ஆனால் நமக்கான ஒரு முகூர்த்த நாளுக்கு மட்டும் ஏனோ இன்னும் மௌனம் சாதிக்கிறாய்
இருக்கும் எல்லா வானொலி நிலையங்களையும் விட்டு விட்டு நேற்று நீ முணுமுணுத்த பாடலை திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கிறது உன் வீட்டு வானொலி
January 03, 2011
உன் கடைக்கண் பார்வை என்னும் மின்னலில் தொலைந்து போகும் வானம் நான், திரும்பி வந்தபிறகும் கூட அடுத்த மின்னலுக்காகக் காத்திருக்க ஆரம்பிக்கிறேன்
January 02, 2011
உன்னுடைய நீண்ட மௌனம் என்னை உன்னிடமிருந்து பிரித்துவைக்க முனைந்தாலும், எப்பொழுதாவது நீ பேசும் ஓரிரு வார்த்தைகள் என்னை உன்னிடம் அடிமையாக்கி விடுகின்றன
நாம் இருவர் மட்டும் இருக்கும் போது என் கேள்விகளைத் தவிர்க்கும் நீ, நண்பர்களுடன் இருக்கும்போது நமக்குள் ஒன்றுமே இல்லாததுபோல் எப்படி நடிக்கத் தெரிகிறது?