பூஜ்ஜியமாவது ஆண்டு:
முத்தங்களுக்கும் அணைப்புகளுக்கும்
பஞ்சமில்லா காலம் அது
மழை காலங்களில் தேநீரை விட
முத்தங்கள் இதம் தந்தன
இரவு நேரங்களுக்கு
உன் வெட்க வர்ணங்கள் பூசப்பட்டன
முதலாம் ஆண்டு:
பேசக்கற்றுக் கொண்ட நம் மகனுக்குக்
கிடைத்தன கொள்ளை முத்தங்கள்
உன் புடவைத் தலைப்பில்
முழுதாய்க் குடிவந்தான் அவன்
உன் முக்கால்வாசி இரவுகள்
அவனுக்கு விற்கப்பட்டன
இரண்டாம் ஆண்டு:
உன் பாதிப் பயணங்கள்
அவனுக்காகவே ஆகின
உன் கைரேகைகள் அவன் கையெங்கும்
அவன் கால்ரேகைகள் புவியெங்கும்
பாதி சாதமும், மீதம் முத்தமாய்
வளர்ந்து போனான் அவன்
மூன்றாம் ஆண்டு:
உன் சோற்றுப் பருக்கைகள்
அவனுடன் ஓடித் தோற்றுப் போயின
உன் முகத்தில் சேற்று ஓவியங்கள்
வரையும் ஓவியன் ஆனான் அவன்
கொடிகளில் உன் புடவை வாசம் போய்
அவனின் மழலை வாசம் வீசியது
நான்காம் ஆண்டு:
அவனின் பள்ளிப் பாடங்கள்
உன் வீட்டுப் பாடங்கள் ஆகின
எழுத்துக்கள் வரையப்பட்டன,
ஓவியங்கள் எழுதப்பட்டன அவனால்
அவனின் பகல்ப் பொழுது கதைகள்
என் இரவுத் தாலாட்டுகள் ஆகின
ஐந்தாம் ஆண்டும் அதற்குப் பிறகும்:
ஒருபுறம் உன் முத்தங்கள் பறிபோயின
மறுபுறம் அவனுக்கு முத்தங்கள் ஊட்டப்பட்டன
ஒருபுறம் உன் அணைப்புகள் பறிபோயின
மறுபுறம் அவனுக்கு உன் அணைப்பே உலகானது
ஒருபுறம் உன் வெட்கங்கள் பறிபோயின
மறுபுறம் அவனுக்கு உன் தாய்மை சொத்தானது
எனக்கான உன்னிடம் நான் இழந்தது எல்லாம்
நமக்கான அவனுக்காகத்தானே
தோளுயர வளர்ந்தும் அவன்
நமக்கான அவனே,
நரை விழுந்தும் நீ
எனக்கான அவளே..