December 31, 2012

நீ என் காதல், நான் உன் காதல்
நாம் காதலின் மூத்த பிள்ளை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
நீ என் இளவரசி, நான் உன் காதல் மன்னன்
நாம் ஒரு சுயம்வர நாள்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
நீ ஒரு மேகம், நான் ஒரு மாலை
நாம் ஒரு காதல் மழை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
நீ வண்ணம், நான் தூரிகை
நாம் ஒரு காதல் ஓவியம்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்

December 30, 2012

நீ வெட்கம், நான் முத்தம்
நாம் ஒரு கவிதை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்

December 28, 2012

நீ ஒரு எழுத்து, நான் ஒரு எழுத்து
நாம் ஒரு புதுக் கவிதை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
இரவு முழுதும் களவு போயும்,
காலைப் பொழுதுகளில் நான் களவாட
உன்னிடம் எதாவது மீதம் இருக்கத்தான் செய்கிறது
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
விடிந்தால் விடிந்து விட்டுப் போகட்டும்
அடியே, நேற்றைய இரவின்
கணக்குகள் இன்னும் தீர்க்கப்படவில்லை
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 27, 2012

இன்றைக்கு என்னடி
இன்னும் அழகாய் இருக்கிறாய்?
அழகழகாய் ஆரம்பமாகட்டும் இந்த அழகு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 25, 2012

நினைவுகளெங்கும், உன் கனவுகள்
கனவுகளெங்கும், உன் நினைவுகள்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
என் கவிதைகளும்,
நம் காதலும் கலந்த
ஒரு அழகுக் கவிதை நீ
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
மிகச்சிறந்த ஓவியத்தின் நகல், நீ எனும் கவிதை
மிகச்சிறந்த கவிதையின் நகல், நீ எனும் ஓவியம்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்

December 24, 2012

இருளில் ஒளிர்கின்றன உன் வெட்கங்கள்
உன் வெட்கத்தில் ஒளிர்கிறது இந்த இரவு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 23, 2012

குங்குமம் என் மீது ஒட்டிக்கொண்டதில்
அதிகமாய் சிவந்து போனதென்னவோ நீதானடி
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 22, 2012

கிழக்கும் சேர்ந்து
உன்னோடு சிவக்கட்டும்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 20, 2012

என் கவிதைகள் ஒன்று கூட
உன்னைப் போல இல்லை?
நகலெப்படி, உண்மையாகும்?
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
மொழி, வார்த்தை பிறகு கவிதை
அழகு, ஓவியம் பிறகு நீ
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
எல்லையில்லாக் காதல், என் கவிதைகள்
எல்லையில்லா அழகு, நீ
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
என் கவிதைகளை நீ வாசிக்க ஆரம்பிக்கிறாய்
உன்னை நான் வாசிக்க ஆரம்பிக்கிறேன்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்

December 18, 2012

மௌனங்கள் இசைக்கையில்
உன் கொலுசுகளுக்கு என்ன வேலை இங்கே?
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
நீ, நான், நாம் மட்டுமல்ல
தித்திப்பும் கூட இன்னும் கொஞ்சம் தித்திக்கட்டுமே
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 17, 2012

மௌன விரதம் தானே? தாரளமாக நீ இருக்கலாம்
ஆனால், இதழ்களை மட்டும் என்னிடம் கொடுத்துவிடு.
மௌன விரதமிருப்பவளுக்கு, இதழ்கள் எதற்கு?
உனைப் படைத்தான்
என்கிற ஒரு காரணத்திற்காகவே,
நாத்திகன் நான் பிரம்மனைத் தொழலாம்
- காதலின் பேரழகி நீ
தங்கம் உன் நெருக்கமெனும் நெருப்பில்
உருகும் பொற்க்கொல்லன் நான்
- நானும் என் மன நடுக்கமும்

December 16, 2012

தேய்பிறை வளர்பிறை எனும்
நிலவியல் இங்கே இல்லை.
எல்லா நாட்களுமே முழுமதி நாட்கள்தான்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
ஓவியத்தின் மீது ஓவியம் வரைபவன் - நான்
ஓவியம் கொண்டு ஓவியம் வரைபவள் - நீ
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 15, 2012

நேற்றைய நாளின் இறுதி நிமிடத்தின்
நினைவுகளில் ஆரம்பிக்கிறது
இன்றைய நாளின் முதல் நிமிடம்
- சனிக்கிழமை காலை 6.53 மணி

December 14, 2012

எப்போது நடக்கும் அரங்கேற்றம்
என் காதல் சொற்களுக்கு?
- நானும், என் மன நடுக்கமும்

December 13, 2012

நூறு நிமிட சிந்தனை
நூறு முறை ஒத்திகை
நூறு விநாடி பதட்டம்
உன்னிடம் பேசும் ஒரு வாக்கியத்திற்காக.
- நானும், என் மன நடுக்கமும்
கடிகாரத்தை மீட்க
நொடி முள்ளை தானம் கேட்கிறாய்
- இன்னும் எவ்வளவு நாளடி, இந்த மௌனம்?

December 11, 2012

விடியல் வந்து
உனை விடுவிக்கும் வரை
என்னிடமே சிறையிரு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
என்னில் எங்கும் உன் வாசனை
உன்னில் எங்கும் என் வாசனை
இரவு எங்கும் நம் வாசனை
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
இதழ் ரேகைகள் பரவட்டும்
கை ரேகைகள் தேயட்டும்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
வெட்கத்தை ஒளிக்க முனைகிறாய்
உன்னைத் திருடுகிறேன்,
உன்னை ஒளிக்க முனைகிறாய்
வெட்கத்தைத் திருடுகிறேன்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
உன் புடவையின் ஒரு தலைப்பில்
தொலைந்து போகட்டும்
என் அதிகாலையின் அழகு நிமிடங்கள்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

December 09, 2012

உன் அழகுகள் பெருகட்டும்
என் திருட்டுகளும் வளரட்டும்
யார் தடுப்பார்கள்
இந்தக் காதல் கொள்ளையனை?
- நீயும் நானும், இனிமேல் எதிரிகள்

December 08, 2012

உனக்கு மௌனிக்க மட்டுமே தெரியும்
எனக்குக் காதலிக்க மட்டுமே தெரியும்.
நீ அப்படியே இருந்து போ
நான் இப்படியே இருந்து போகின்றேன்
- நீயும் நானும், இனிமேல் எதிரிகள்
இதழ்களா, வெட்கமா
யாரிடமிருந்து இந்த சத்தம்?
- இன்னும் நீளட்டுமே இந்த முத்தம்

December 07, 2012

மீண்டும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ....


அதிகாலை 3.37 மணி

யாரோ என் செவிகளில், உன் பெயரை மிக மெலிதாய் உரைக்கிறார்கள்....
மெலிதாய் ஒரு மயிலிறகு வருடுகிறது என்னை...
வேகமாய் விழிகளைத் திறக்கிறேன்...

என் செவிகளில் உன் பெயரை உரைத்தவன் எங்கே போனான்?
இன்னொருமுறை உரைக்க மாட்டானா?
விழிகள் உன் பிம்பத்தையும், செவிகள் உன் பெயரையும் தேடுகின்றன

வன்மையான ஒரு ஏமாற்றம், மெலிதாய் பரவுகிறது என் மனதெங்கும்
மெலிதான ஒரு வலி, வன்மையாய் பரவுகிறது என் கனவெங்கும்
வன்மையான காதல், மென்மையான காதலி
மென்மையான காதலி, வன்மையான காதல்

அதிகாலை 3.39 மணி

எங்கிருந்தோ வருகிறது, உன் கொலுசு சத்தமேனும் சங்கீதம்
செவிகளிலும், உறக்கத்திலும் நடக்கிறது ஒரு கலவரம்
விழிகளில் ஒரு வெடிச்சத்தம்

ஏன் நின்று போனது உன் சங்கீதம்?
இன்னொரு முறை வாசிக்கப் படாதா?
என் சரணங்களும், பல்லவிகளும் உன் இசையைத் தேடுகின்றன

பல்லவியின் ஏக்கம், மௌனமாய் சரணமெங்கும்
சரணத்தின் ஏக்கம், மௌனமாய் பல்லவியெங்கும்
பாடலாய்க் காதல், இசையாய்க் காதலி
இசையாய்க் காதல், பாடலாய்க் காதலி

அதிகாலை 3.41 மணி

இந்த முறை உன் பெயரையும், சங்கீதத்தையும்  தவறவிடப்போவதில்லை
கனவுகள் என் விழிகளின் வாசலில் காத்திருக்க ஆரம்பித்தன
உறக்கம் தொலைந்தது, ஏக்கம் பிறந்தது

மௌனம் வீசும் ஒரு நள்ளிரவாய் மனம்
மலரும் மொட்டாய் உன் நினைவு
முழுமதி உனக்கு தவமிருக்கும் வானமாய் நான்

இடது விழியில் ஒரு வலி , அச்சம் எனக்காய்
வலது விழியில் ஒரு வலி, துணை உனக்காய்
அச்ச மேகங்கள், காதல் துளிகள்
காதல் மேகங்கள், அச்சத் துளிகள்

அதிகாலை 3.43 மணி முதல் அடுத்த அதிகாலை 3.35 மணி வரை

நீ,
நீ,
நீயேதான்

அடுத்த அதிகாலை 3.37 மணி

அடுத்த கண்ணாமூச்சி ஆட்டம் ....

December 05, 2012

கவிதை எனும் இரவு,
இரவு எனும் கவிதை,
மொத்தத்திலும் முத்தத்திலும் கவிஞன் நானே
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
பாடவேளை ஒன்று -  நான் மட்டும்
பாடவேளை இரண்டு - நீ
பாடவேளை மூன்று - நான்
பாடவேளை  நான்கு - நீ, நான்
பாடவேளை  ஐந்து - நீ, நான், நாம்
பாடவேளை ஆறு - அதே 'நீ, நான், நாம்'
பாடவேளை ஏழு - அதே 'நீ, நான், நாம்'
- காதல் வகுப்பு - 'இ' பிரிவு
என் தேசம் தொலைந்து போகட்டும்
அதுதான், என் முகவரி நீ இருக்கிறாயே !!
- காதல் வகுப்பு - 'இ' பிரிவு
வண்ணத்துப் பூச்சிகளை சேர்த்துக் கொண்டேன்
என் காதல் கூட்டணியில்,
இனி வானவில் வரைவது ஒன்றும் பெரிதல்ல
- காதல் வகுப்பு - 'இ' பிரிவு

December 04, 2012

களவாடப் போன இடத்தில்
களவு போய் வந்திருக்கிறேன்
- காதல் வகுப்பு - 'இ' பிரிவு

December 03, 2012

நான் தேடிய முதல் நாள் ...

நாவில் சொற்கள் போராட்டம் செய்கின்றன...
என் பேனாவில் எழுத்துக்கள் வன்முறையில் ஈடுபடுகின்றன
இருந்த விரல் நகங்கள் எல்லாம் துண்டிடப்பட்டிருந்தன...
இதயத்தில் ஒரு போர்க்களம் ஆரம்பித்திருந்தது....

சில நிமிடங்களிலேயே என் வெற்று வானம், அடை மழைக்குத் தயாரானது
சில நிமிடங்களிலேயே என் வெற்றுக் கிரகம், காதல் ஈர்ப்பு விசைக்குத் தயாரானது
சில நிமிடங்களிலேயே என் வெற்று எழுத்துக்கள், இலக்கியம் படைக்கத் தயாரானது
சில நிமிடங்களிலேயே என் வெற்று இதயம், அவளுக்குக்காக துடிக்கத் தயாரானது

என்ன நடக்கிறது எனக்குள்?
என்ன நடக்கிறது இங்கே?
என்ன  நடக்கிறது என் செல்களில்?
என்ன நடக்கிறது என் வினாடிகளில்?

இன்னும் ஓரடி நெருங்கி வராதே....
எரிந்து போக என்னிடம் மீதம் ஏதுமில்லை
இன்னும் ஓரடி விலகிப் போகதே
இறந்து போக என்னிடம் மீதம் ஏதுமில்லை

யாராவது தைரியம் கொடுங்களேன்,
என் காதலை அவளிடம் சொல்ல
யாராவது சொற்கள் கொடுங்களேன்
என் காதலை அவளிடம் படைக்க

யாராவது வர்ணங்கள் கொடுங்களேன்
என் காதலை அவளிடம் வரைய
யாராவது எனைத் தேடிக் கொடுங்களேன்
என்னை அவளிடம் சேர்க்க...

ஆண்மகன் நான் தைரியம் தேடுகின்றேன்
அரசன் நான் காவலுக்கு ஆட்கள் தேடுகின்றேன்
பிரம்மன் நான் துணைக்கு படைப்புகள் தேடுகின்றேன்
இறைவன் நான் வரத்திற்கு பக்தன் தேடுகின்றேன்

இந்த மணி - இந்த மௌனம்
இந்த நேரம் - இந்த நடுக்கம்
இந்த விநாடி - இந்த குதூகலம்
இந்த நாள் - நான் தேடிய முதல் நாள்

December 01, 2012

முதல் திருட்டு...

சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன், யாரும் என்னைக் கவனிக்கவில்லை...
மெதுவாய் என் விழிகளில், ஒரு கள்ளத்தனம்  குடியேறுகிறது..மெதுவாய் உன்னை நோக்கி கண்களை மட்டும் திருப்புகிறேன்...
ஒரு விழி உன்னை நோக்கியும், மறு விழி என் சுற்றத்தையும் கணிக்கிறது... யாரும் என்னைக் கவனிப்பதாய்த் தெரியவில்லை...

அவசர அவசரமாய், உன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டேன்...
வினாடிக்கும் குறைவான நேரத்தில், உன் முகம் என்னில் பதிந்து போனது...
நீ இமைகளை மூடித் திறக்கும் நேரத்திற்குள் மிக மெல்லிய ஒரு பூகம்பம் என்னைத் தாக்கிப் போனது... முதல் திருட்டில் வெற்றி கண்டேன்... இன்னொரு திருட்டிற்க்குத் தைரியம் வந்து விட்டது...

விழிகளில் புதிதாய் கொஞ்சம் தைரியமும், திமிரும் பிறந்துவிட்டது... இருந்த போதும், உன் விழிகளை நேருக்கு நேராய் பார்க்கும் தைரியம் பிறக்க வில்லை...மீண்டும் ஒரு முறை என் சுற்றத்தைப் பார்த்துக் கொள்கிறேன்... என்னை யாரும் கவனிப்பதாய்த் தெரியவில்லை.. கூடிப் போன தைரியத்தோடு உன்னை நோக்கி தலை திருப்புகிறேன்...

முதன் முறையாக அரை தைரியத்தோடு, உன் முழு முகம் காண்கிறேன்...
வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு அணு உலை வெடித்த ஒரு அனுபவம்..
மிக மெதுவாய் உன் இதழ்களைச் சுழித்தாய், மிக அவசரமாய் வெடித்துப் போனேன்....
கண்கள் வழியே, இதயத்தில் நுழைந்து போனது ஒரு நெருப்புத் துண்டு... என் உடம்பின் ஒவ்வொரு செல்லும் மறுஜென்மம் எடுத்தன....
திருடனுக்கு தேள் கொட்டுவதென்ன, இங்கே நெருப்பே பற்றிக் கொண்டது... சில பல ஜென்மங்கள் வேண்டும், நான் பழைய நிலைக்குத் திரும்ப....

தேனீக்களுக்குப் பயந்தால் தேன் கிடைக்குமா? அடுத்த திருட்டுக்குத்  தயாரானேன்...
இந்த முறை நிறைய தைரியம், இன்னும் நிறைய ஆர்வம், இன்னும் நிறைய நிறைய எதிர்பார்ப்பு..இப்போது சுற்றத்தைப் பற்றிக் கவலையில்லை... என்ன வேண்டுமானாலும் நடக்கட்டுமே...
உன்னைத் தவிர யாரும் என் விழிகளின் எல்லைகளில் இல்லை... ஒரு புன்னகையோடு, மெதுவாய் உன் மேல் குவிகிறேன்...
இன்னுமொரு நிலநடுக்கத்திற்கு என் இதயமும், இன்னுமொரு போருக்கு என் செல்களும் தயாராகிவிட்டன...

ஒரு மந்திரப் புன்னகை உன் இதழில்.... பக்தன் எனக்கு வேறன்ன வேண்டும்?
இமைகளை திறக்கிறாய், இதழ்களை மூடுகிறாய்.. சுவாசிக்க மறக்கிறேன்...
இமைகளை மூடுகிறாய், இதழ்களைத் திறக்கிறாய்... சுவாசிக்கவும் மறக்கிறேன்...

மிக மெல்லிய ஒரு பயம் எனைச் சூழ்கிறது.. உன்னை வாசிக்கும் என்னை யாராவது வாசிக்கிறார்களா? ஒன்றும் தெரியாதது போல், இயல்பு நிலைக்குத் திரும்புகிறேன்...

என்ன நடந்தது இந்த மூன்று வினாடிகளுக்குள்?
திருவிழா முடிந்து போன ஒரு கிராமமாய், என் மனது...
ஒரு தீபாவளி முடிந்து போயிருந்தது...

அழகி நீ, மிகச் சாதாரணமாய்  ஒரு போரைத் துவக்குகிறாய்...
இன்னும் மிகச் சாதாரணமாய் ஒரு பூகம்பம் படைக்கிறாய் ...
இன்னும் மிக மிகச் சாதாரணமாய் என்னைத் திருடிப் போகிறாய்

திருடன் நான் இப்படியே இருந்து கொள்கிறேன்... அழகி நீயும் இப்படியே இருந்து போ...
என் திருட்டும், உன் அழகும் இப்படியே வளரட்டும்....

காத்திருக்கிறேன் உன் மொத்த அழகையும், சத்தமில்லாமல் திருடும் ஒரு நாளுக்காக...
நினைவு இருக்கட்டும்.... அந்த நாள் மிகத் தொலைவில் இல்லை....

November 28, 2012

நிராயுதபாணி எனக்கும்
விநாடிக் கத்திகளோடு இரவுக்கும்
தினம் தினம் நடக்கிறது ஒரு யுத்தம்
- காதல் வகுப்பு - 'ஆ' பிரிவு
இரவிடம் உன்னைப் பற்றி
புலம்புகிறேன்,
உன்னிடம் இரவைப் பற்றி
புலம்புகிறேன்
- காதல் வகுப்பு - 'ஆ' பிரிவு

November 27, 2012

என் முத்தத்தை அளக்கும் அலகு
உன் அழகு
உன் அழகை அளக்கும் அலகு
என் முத்தம்
இன்னும் கொஞ்சம் நீளட்டுமே
இந்த நெருக்கம்,
இன்னும் கொஞ்சம் சுருங்கட்டுமே
இந்த இடைவெளி
- வா எனும் போ, போ எனும் வா
தள்ளி விடுவதில் கைரேகைகளும்
இணைந்திருப்பதில் இதழ் ரேகைகளும்
அழிந்துதான் போகட்டுமே
- வா எனும் போ, போ எனும் வா

November 26, 2012

ஒரு நொடி இடைவேளை
விடுகிறேன் உனக்கு,
அதற்குள் என் கரங்களுக்குள்
மீண்டும் வந்து சேர்ந்துவிடு
- வா எனும் போ, போ எனும் வா

November 16, 2012

போட்டி போட்டுக் கொண்டு
போரிடுகிறோம்
தோற்றுப்போக,
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

November 15, 2012

கவிஞன் நான்,
கவிதை நீ,
மொழிக்கு இங்கே என்ன வேலை?
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
இடைவெளிகளில் முத்தங்களையும்
முத்தங்களில் இடைவெளிகளையும்
நிரப்பிக்கொள்வோம் நீயும் நானும்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
இரவு வேண்டுமானாலும்
விடிந்து போகட்டும்,
இந்த நொடி மட்டும் நீளட்டுமே
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
இல்லை என்னும் தொடக்கம்
ஆமாம் எனும் முடிவு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

November 11, 2012

கிழக்கையும் கதிரவனையும்
பிரித்தே வைப்போம்
நம்மையும் இரவையும்
சேர்த்தே வைப்போம்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
என் இரகசியங்களும்
உன் இரகசியங்களும்
இப்போது நம் இரகசியங்களாய்.
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

November 10, 2012

நொடி முள் உடைந்து போகட்டும்,
கதிரவன் மரித்துப் போகட்டும்,
நிலவும் நாமும் நீடிப்போம்
இன்னும் சில தினங்களுக்கு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
நமக்காக இரவு நீளட்டும்
இரவிற்காக நாம் நீள்வோம்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
விழிகளில் முதல் வார்த்தை
இதழ்களில் இரண்டாம் வார்த்தை
மௌனமாய் இன்னொரு கவிதை
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
உன் இதழ் எங்கும் புள்ளிகள்
என் இதழ் எங்கும் கோலங்கள்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

November 06, 2012

உன் இதழ்களை ஈரப்படுத்துகிறேன்
எனும் செய்கையில்
என் இதழ்களில் ஏனடி நெருப்பு வைக்கிறாய்?

November 05, 2012

ஒரு புறம் என் மருதாணி
மறுபுறம் உன் நான்.
சிவக்க வைக்க எப்போது வருகிறாய்?
- அவன் இல்லாத ஒரு இரவு

October 31, 2012

ஒரு மேகம், இரு துளிகள் ...

இன்னும் மழை நின்று போகவில்லை...
மேகம் வைத்திருந்த கடைசித்துளிகளை, பூமிக்கு தாரை வார்த்துக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம்...
வீட்டின் முற்றத்தில் மழையை ரசித்துக் கொண்டிருந்த என்னை, ஒரு மழைத்துளி மெதுவாய் புரட்டிப் போட்டது...

சில ஆண்டுகளுக்கு முன், இதேபோல் மழை கொட்டிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம்..
மனதெங்கும் ஒரு திருவிழா நடந்து கொண்டிருந்த நேரமும் கூட...
பல மாதங்கள் நான் வேண்டிய கடவுள், இன்று கண்களோடு மேகங்களையும் திறந்திருந்தார்...

ஒற்றைக் குடையில், முதன் முதலாய் நீயும் நானும்...
விழும் மழைத் துளிகளும், மிரட்டும் இடிகளும் உன்னை என்னோடு இன்னும் நெருக்கி வைத்திருந்தன..
ஊரே மழையை சபித்துக் கொண்டிருக்க, நான் மட்டும் வாழ்த்திக் கொண்டிருந்தேன்....
இன்னும் கொஞ்சம் நீளட்டும் இந்த மழை, இன்னும் கொஞ்சம் நெருங்கட்டும் என் தேவதை...

உன் உதட்டைக் குறிவைத்து, சில மேகங்கள் மோக அம்புகளை வீசிக் கொண்டிருந்தன...
விழுந்த துளிகள் எல்லாம் அமிர்தத் துளிகளாய் மோட்சம் அடைந்து போயின
விழும் துளிகள் உன் அழகைக் கரைக்க முயல, நானோ கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தேன்...
இன்னும் கொஞ்சம் பெரிதாகட்டும் இந்த மேகம், இன்னும் கொஞ்சம் சிறிதாகட்டும் இந்தக் குடை

எழு நிற வானவில் ஒரு பக்கம், சிவப்பு நிற வானவில் என் பக்கம்
நீ அழகு, மழை அழகு... மழையில் நீயும் அழகு.. உன்னில் மழையும் அழகு...
மின்னல்களும் என்னோடு சேர்ந்து கொள்ள, மனதெங்கும் கொண்டாட்டம்தான்
இன்னும் கொஞ்சம் நீளட்டும் இந்தப் பயணம், இன்னும் கொஞ்சம் தித்திக்கட்டும் இந்த நிமிடம்

நம் கைரேகைகள் என்ன பேசிக்கொள்கின்றன?
ஒட்டுக் கேட்க நினைக்கும் துளிக்கு, வழக்கம் போல இடம் இல்லை
உன் மேல் விழுந்து என் மேல் விழும் துளிகள், மின்சாரத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தன
இன்னும் கொஞ்சம் காதலாகட்டும் இந்தத் தருணம், இன்னும் கொஞ்சம் மலரட்டும் உன் வெட்க மொட்டுக்கள்

அடுத்த விழுந்த மழைத்துளி,
என்னை மெதுவாய் தட்டி எழுப்புகிறது...

இங்கேயும், அங்கேயும் ஒரே மேகம்
இங்கே ஒரு துளி, என் மீது விழுகிறது
அங்கே ஒரு துளி, உன் மீது விழுகிறது
ஞாபகப்படுத்தட்டும், நம் மீது விழுந்த மழைத்துளியை

விழட்டும் என் மீது இன்னொரு துளி
தொடங்கட்டும் நம்மில் திருவிழாக்கள் ....

October 30, 2012

உன் மேக இதழ்களிடம்
சமுத்திரம் என் வேண்டுகோள்
- இன்னொன்று கடனாய்க் கிடைக்குமா?
இதழ்கள் காயும் முன்னே,
உயிர் காய்ந்து போகின்றது
- இன்னொன்று கடனாய்க் கிடைக்குமா?
பிரம்மனின் திருஷ்டிப் புள்ளி
எனக்கு அதிர்ஷ்டப் புள்ளி
- உன் உதட்டோர மச்சம்
உன் இதழ் ஈர்ப்பு விசைக்கும்
ஒரு மையப்புள்ளி
- உன் உதட்டோர மச்சம்
இதயச் சுவற்றில்
ஓவியம் வரையும் மழலை நீ,
எல்லாக் கிறுக்கல்களுமே ஓவியங்கள்தான்
 - எனக்கான காதலின் பிரம்மன் நீ

October 25, 2012

மலரத் துடிக்கும் மொட்டாய் நான்,
வெளியே ஒரு நெருப்பு வேலி
- இது உனக்கான இன்னுமொரு காத்திருப்பு

October 24, 2012

என் நிஜம் நிழலாகும் முன்னே,
உன் நிழல் நிஜமாகட்டும்
- இது உனக்கான இன்னுமொரு காத்திருப்பு
காத்திருக்க வைப்பதென்னவோ நீதான்,
மொத்த தண்டனைகளும்
என் விரல் நகங்களுக்குத் தான்
- இது உனக்கான இன்னுமொரு காத்திருப்பு

October 22, 2012

தேய்பிறை நாளிலும்
என்னை முழுமதி ஆக்குபவன் நீ
- அவளின் 'இன்னுமொரு இரவு' எனும் காவியத்திலிருந்து
சிவந்து மடிந்திருந்தன
என் கூந்தல் மல்லிகைகள்,
மடிந்து சிவந்திருந்தன
என் அங்க வெட்கங்கள்
- அவளின் 'இன்னுமொரு இரவு' எனும் காவியத்திலிருந்து

October 16, 2012

முற்பாதியில் என் கேடயம்
பிற்பாதியில் உன் வாள்,
வழக்கம் போல இன்றும் பழி வாங்கிவிட்டது
என் புடவைத் தலைப்பு.
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
ஒரு முழம் மல்லிகையில்
என்னை முழுதுமாய் மலர வைப்பவன் நீ
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
என் வெட்கத்தைக் கேலி செய்கின்றன
என் வண்ண வளையல்கள்,
நொறுங்கிப் போகட்டும் உன் நெருக்கத்தில்

- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
தேன் திருட வருகிறாயா?
தேன் ஊட்ட வருகிறாயா?

என் இதழ்களில், உன் தித்திப்பு
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
என் கூந்தலில் ஆரம்பித்து
நம்மில் கரைந்து போகிறது
என் மல்லிகைகளின் வாசனை
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து

October 11, 2012

எப்போதடா வரம் பெற வருவாய்?
தவமிருக்கிறேன் நான்.
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
முதல் வினாடியிலேயே என் பெண்மை
உன்னிடம் கவிந்துபோகின்றது.
பிறகு எப்படி, உன்னுடனான யுத்தத்தில் வெல்வது?
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
விரல் நுனிகளில்
மின்சாரம் தயாரிப்பவன் நீ,
பரவும் மின்சாரத்தில்
எரியும் விளக்கு நான்
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
என் புடவைத் தலைப்பில் ஆரம்பித்து
என்னில் முடிந்து போகின்றன,
மணாளன் உன் காவியங்கள்
மெலிதாய் உன் விரல் தீண்டியதும்
முழுதுமாய் மலர்ந்து போகிறேன்,
நான் ஒரு புடவைச் சிணுங்கி
கொடியில் காயும்போது என் வாசத்தையும்,
நான் அணியும் போது உன் வாசத்தையும்
தேடச் சொல்கிறது, இந்தப் புடவை

October 09, 2012

இரவும், நிலவும்
தீர்ந்து போனால் போகட்டும்,
நம் முத்தங்கள்
இன்னும் தீர்ந்து போகவில்லையே !
முத்தங்களை ஒளித்து வைக்க
உன் இதழ்களில் இடமில்லையோ?
தாரள இடம் இருக்கிறது
என்னிடமும், என் இதழ்களிடமும்
முதல் முத்தம்
என் கன்னமெங்கும், உன் இதழ் வண்ணங்கள்
மறு முத்தம்
உன் கன்னமெங்கும், வெட்க வண்ணங்கள்
பிரம்மன் ஒரு இதழையும்
சிவன் மறு இதழையும் படைத்தார்களோ?
உன் ஒவ்வொரு முத்தத்திலும்
மரித்து மரித்துப் பிறக்கிறேன்
முத்த வரங்கள் தர
முத்தங்களையே காணிக்கை கேட்கும்
ஒரு வினோத தெய்வம் நீ
உன் இதழ் வண்ணங்களை
ஏனடி வீணடிக்கிறாய்?
என் இதழ் கூடத்திற்கு வா,
வானவில் வரையக் கற்றுத் தருகிறேன்

October 08, 2012

ஒரு முத்தம் பரிசு,
மறுமுத்தம் நிவாரணம்.
தானம் செய்பவள் நீ,
வறுமை பெற்றவன் நான்
ஒரு முத்தம் வாள்,
மறுமுத்தம் கேடயம்.
போரிடத் தெரிந்தவள் நீ,
தோற்கத் தெரிந்தவன் நான்

September 18, 2012

தகப்பனாகிய நான்...


காலை 7.00 மணி:

நேரம் தேடும் முன்னே
விழிகள் தேடுகின்றன நம் மகனை,
புதிதாய் மலர்ந்த மலராய் அவன்
மலரின் இதழாய் அவனின் புன்னகை

முத்தத்திற்கும், அவனுக்கும் கேட்காமலே
அவனுக்கு சில முத்தங்கள் இடுகின்றேன்
அவனின் மென் மேனியில்
மெதுவாய்க் கரைந்து போகின்றன என் முத்தங்கள்

அடுத்து உன் நெற்றியையும், கன்னங்களையும்
மெதுவாய் ஈரம் செய்கின்றேன்,
உன் இதழ்களின் மீது பார்வை போகிறது,
வேண்டாம் மனமே, காலையிலே கதை கெட்டுவிடும்

காலை 9.00 மணி:

சமையலறையில் இருவருக்குமாய்
ஒரு உணவை பிறப்பிக்கிறேன்,
தேநீரைச் சுவைக்கையிலே
ஞாபகம் வருகின்றன உன் தேன் இதழ்கள்

மெதுவாய் படுக்கையறை வருகிறேன்,
உன் அணைப்பிலே
ஒரு சொர்க்கம் கண்டு கொண்டிருக்கிறான்
நம் அரண்மனை இளவரசன்

கர்ணன் பேரன் என்னிடம், ஏது பஞ்சம்?
மீண்டும் முத்தங்கள்,
முதலில் அவனுக்கு, பின்பு உனக்கு
மீண்டும் அவனுக்கு, மீண்டும் உனக்கு ... நிறுத்த மனமில்லை

முற்பகல் 11.00 மணி:

காத்திருக்கிறேன் உன் தொலைபேசிக்காக
வழக்கம் போல, நானே முந்திக் கொள்கிறேன்
'என்ன செய்கிறான், நம் அவன்?'
அதே பதில் உன்னிடம் 'அம்மாவின் காதலனைப் பார்க்கணுமாம்'

அதே காதல் கேள்வி என்னிடம்
'என்ன பேசிக் கொண்டீர்கள் இரண்டு பேரும்?'
அதே காதல் பதில் உன்னிடம்
'நம்முடைய காதல் கதைதான்'

ஒரு புறம் உன் முத்தம்,
மறுபுறம் அவன் மழலை மொழி
எதை முதலில் கேட்பது?
இரண்டுமே முதலில் வேண்டும்

பிற்பகல் 1.00 மணி:

பொய்யான 'உணவு இடைவெளி' வந்தவுடன்
கால்களில் சக்கரம் ஒன்றைக் கட்டிக் கொள்கிறேன்
உன் முகம், அவன் முகம் போதும்
இன்னும் ஒரு யுகத்திற்கு

இன்றைக்கு இன்னும் அழகாய் இருக்கிறான்,
தேவதையின் மகன், பின்னே எப்படி இருப்பான்?
காற்றில் அப்படி என்ன ஓவியம் வரைகிறான்?
காற்றில் அப்படி என்ன நடனம் ஆடுகிறான்?

உன் இதழ்களைப் போலே
அவன் உள்ளங்கைகளும் மிக மென்மை,
என் கன்னங்கள் தருகின்றன
ஒரு காதல் சான்றிதல்

பிற்பகல் 3.00 மணி:

அடுத்த தொலைபேசி நேரம்,
நீ உறங்கப் போகும் முன்னே
மீண்டும் நம் மன்னன் புராணம்
என் முத்தங்களோடு ஆரம்பிக்கட்டும் உன் உறக்கம்

புதிதாய் ஆள் வந்தவுடன்
செலவு இருமடங்கு ஆகிவிட்டது
முத்தங்கள், அணைப்புகள், கனவுகள்
எல்லாமே இப்போது இரு மடங்காய்

படுக்கையில் நமக்கு இடையே
ஒரு சந்தோசமாய் அவன்,
நினைத்து நினைத்து ரசிக்கிறேன்
ரசித்து ரசித்து நினைக்கிறேன்

மாலை 5.00 மணி:

ஏன் எனக்கு இறக்கை இல்லை?
அலுவலக உலகம் முழுதாய் மறந்துபோனது
மனம் எங்கும்
மலர்கள் மலர ஆரம்பித்திருந்தன

கசங்கிய என் ஆடையில் நீயும்
கசங்கிய அவன் ஆடையில் நானும்
வாசம் தேட ஆரம்பித்தோம்
ஒரு தோளில் அவன், இன்னொன்றில் நீ

பகலெங்கும் அவனில்
நீ ஒளித்து வைத்த முத்தங்களை
நான் தேடும் பொழுது இது
என் தேடலை மிக ரசிக்கிறான் அவன்

மாலை 7.00 மணி:

என் மொழியை அவனும்
அவன் மொழிகளை நானும்
கற்றுக்கொள்ளும் நேரம் இது,
இடைவெளி நேரத்தில் உன் முத்தப் பாடம்

எதற்காக சிரிக்கிறான்?
எதற்காக அழுகிறான்?
எதற்காக ஒரு புது அவதாரம்?
பதில் சொல்லேனடி என் பெண் நிலவே

தகப்பன் இங்கே மகனாய்,
மகன் இங்கே தகப்பனாய்
அணுஅணுவாய் ரசிக்கிறேன் அவனை
அணுஅணுவாய் காதலிக்கிறேன் உன்னை

இரவு 9.00 மணி:

மகன் அவனுக்கும் உணவு நேரமிது
உனக்கும் அவனுக்கும்
நடக்கிறது ஒரு மெல்லிய போர்,
யார் பக்கம் நான்?

நம் காதல் கதைதான்
அவனுக்குத் தாலாட்டு,
அவனின் பகல் நேரக் குறும்புகள்தான்
எனக்குத் தாலாட்டு

அவன் உறங்கிவிட்டான்,
இனிவரும் நிமிடங்கள் உனக்கும் எனக்கும்தான்
காதல் கதைகள் பேசும் நேரமிது
மெதுவாய் சிரிக்கிறான், நம்மை ஒட்டுக் கேட்கிறானோ?

இரவு 11.00 மணி:

மனைவி நீ இப்போது மகளாகி விட்டாய்,
கணவன் நான் இப்போது மகனாகி விட்டேன்
நம் மகன்
இப்போது தகப்பனாகவும், தாயாகவும்

வார்த்தைகள் தீர்ந்து போய்விட்டன
இனி மௌனங்களால் பேசுவோமா?
மௌங்களும் தீர்ந்து போனால்?
தீர்ந்து போகட்டுமே!, இனிமேல் மொழி எதற்கு?

நிச்சயமாய் இவன் ஒட்டுக் கேட்கிறான்
நாம் மௌனமாகினோம், அவன் பேச ஆரம்பித்துவிட்டான்
ஒரு விழியில் நீ, மறு விழியில் அவன்
நம்மை மறந்தோம், அவன் வசமானோம்

பின்னிரவு 1.00 மணி:

அவனின் இசைக் கச்சேரி
இன்னும் முடியவில்லை,
புதுப் புது ராகங்கள் படைக்கும்
கலைஞன் இவன்

சொர்க்கமெங்கும் சொர்க்கங்கள்
நெஞ்செங்கும் குதூகலங்கள்
இல்லமெங்கும் காதல்கள்
வானமெங்கும் முழுமதிகள்

பின்வந்த ஏதோ ஒரு நிமிடத்தில்
தூக்கத்திடம் களவு போகிறேன் நான்,
செவிகளெங்கும் அவன் ராகங்கள்
விழிகளெங்கும் அவன் முகங்கள்

பின்னிரவு 3.00 மணி முதல் காலை 7.00 மணி வரை

கனவிலும் கூட
என் அணைப்பில் நீங்கள்தான்,
ஒரு முறை விழித்து
சரிபார்த்துக் கொள்கிறேன்

உறக்கத்திற்கு ஒரு இடைவெளி
இது அவனின் பசி நேரம்,
உனக்காகத் தவிப்பதா?
இல்லை உன் தவிப்பை ரசிப்பதா?

காதலி நீ என் முதல் வரம்
மனைவி நீ என் இரண்டாம் வரம்
மகன் இவன் என் மூன்றாம் வரம்
அடுத்த ஆயிரம் பிறவிகளுக்கும் இதுவே போதும்

September 13, 2012

மாலை நேர தேநீரும், ஒரு மழை நேர தேவதையும் ....

சில நிமிடங்களுக்கு முன்னால், ஒரு பூகம்பம் ஏற்படுத்திய மங்கைக்காக இந்த வரிகள் ....

அரைகுறையாய் விழுந்த மழைத்துளிகளில் கால்பங்கு நனைந்து விட்டேன்..
மிதமான சூட்டோடு ஒரு குவளை தேநீர் கையில்...

சன்னல் திரைகளை நீக்குகிறேன்....

சாலையில் மங்கை ஒருத்தி மழைத்துளிகளை, தன் மென் உதடுகளைக் கொண்டு மிக வன்மையாய்  சபித்துக் கொண்டே நடந்து போகிறாள்...
அவள் மேல் விழுந்த துளிகள் எல்லாம், அழகு ரசம் பூசப்பட்டு அமிர்தத்துளிகளாய் மாறிக்கொண்டிருந்தன...
வேக வேகமாய் நடந்ததால், ஒரு அவசர கதியில் அவளின் கால்தடக் கோலங்கள் வரையப்பட்டன...
இதுதான் சமயம் என்று தென்றலும், அவளின் ஆடையுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தது...

உலகம் மறந்து போனேன்... கவிஞன் பிறந்தான்... அவளின் ஒரு பார்வை கிடைத்து விடாதா, தவமிருந்தன விழிகள்...
பார்வை எல்லை சுருங்க ஆரம்பித்தவுடன், இதயம் தறிகெட்டு ஓட ஆரம்பித்தது... என் ஏக்கத்தை, ஏமாற்றம் கேலி செய்தது...

எப்படியோ அவளுக்கு என் அழுகை கேட்டு விட்டது போலும்...
என் எல்லையில் இருந்து மறையும் முன், பக்தன் எனக்கு ஒரு கடைக்கண் பார்வையை வீசி விட்டு போனால் அந்த தேவதை...

ஒற்றை நிமிடத்தில், ஒரு நூறு முறை இறந்து போயிருந்தேன்...
இறுதி வினாடியில் அவள் பார்த்த பார்வையில், திரும்பி வந்த உயிரோடு மீதம் இருந்த தேநீரைப் பருக ஆரம்பித்தேன்... 

September 12, 2012

ஒரு .....

ஒரு எதிர்பார்ப்பு
ஒரு ஏக்கம்
ஒரு குதூகலம்
ஒரு பரவசம்
ஒரு ஆனந்தம்
ஒரு பூகம்பம்
ஒரு திருவிழா
ஒரு சிலிர்ப்பு
ஒரு புன்னகை
ஒரு தடதடப்பு
ஒரு மௌனம்
ஒரு மின்னல்
ஒரு வெளிச்சம்
ஒரு மழைத்துளி
ஒரு ஆசை
ஒரு திருட்டு
ஒரு இறப்பு
ஒரு பிறப்பு
ஒரு ராகம்
ஒரு இடைவெளி
ஒரு நெருக்கம்
ஒரு வளர்பிறை
ஒரு ஓவியம்
ஒரு கவிதை
ஒரு .....

- இவையனைத்தும் எனக்குள்,
நீ கடந்துபோகும் ஒரு நொடியில் ...

September 03, 2012

என் மீதான உன் மௌனம்
என்னை இறக்க வைக்கிறது
உன் மீதான என் காதல்
என்னை வாழ வைக்கிறது
- மௌனமாய் எரிகிறேன் நான்
நொடி முள்ளை
என் காதல் முன் நகர்த்துகிறது,
மணி முள்ளை
உன் மௌனம் பின் நகர்த்துகிறது
- மௌனமாய் எரிகிறேன் நான்
மௌனம் கொண்டு
நீ ஏற்படுத்தும் இடைவெளியை,
என் காதல் கொண்டு நிரப்புகிறேன் நான்
- மௌனமாய் எரிகிறேன் நான்

August 29, 2012

நீ எனும் தவம், காதல் எனும் வரம்
காதல் எனும் தவம், நீ எனும் வரம்
இங்கே வரத்திற்காக தவங்கள் மட்டுமல்ல
தவத்திற்காக வரங்களும் கூடத்தான்
- இது காதல் பிறந்த நிமிடம்
உன் இதழ்கள் மட்டுமல்ல,
உன் பெயர் கூட
என் இதழ்களுக்குத் தேன்தான்
- இது காதல் பிறந்த நிமிடம்
உன் பெயர் சொல்கிறேன்
மொட்டுகள் மலர்கின்றன,
மறுமுறை உன் பெயர் சொல்கின்றேன்
இலைகளும் மலர்கின்றன
- இது காதல் பிறந்த நிமிடம்

August 26, 2012

காதல் கவிஞன் நான்,
என் தாய்மொழி நீ
- எனக்கும் நீயேதானடி அழகு
வனமெங்கும் வண்ணத்துப்பூச்சிகள்
வானமெங்கும் வானவில்கள்
குங்குமத்தில் குளித்த மல்லிகையாய் நீ,
- எனக்கும் நீயேதானடி அழகு
உன்னைப் பற்றி நினைக்கும்
ஒவ்வொரு நிமிடங்களும்
புதிதாய் மலரும் மலர்தான்
- எனக்கும் நீயேதானடி அழகு

August 22, 2012

உன்னை நகல் எடுத்துதான்
தேவதைகளை இன்னமும்
படைத்துக் கொண்டிருக்கிறான் பிரம்மன்
- அழகை அழகாக்கியவள் நீ
உனக்கு மட்டும் எப்படி
கன்னத்தில் வெட்கங்கள் சிவக்கின்றன?
- அழகை அழகாக்கியவள் நீ
அழகு எனும் மொழிக்காக
படைக்கப்பட்ட ஒரே அகராதி நீதான்
- அழகை அழகாக்கியவள் நீ
மலர்களின் இதழ்கள் கொண்டு
செதுக்கப்பட்ட சிலை நீ,
தேன் திருட ஏங்கும் வேடனாய் நான்
- அழகை அழகாக்கியவள் நீ
அழகு எனும் சமுத்திரம் நீ
துடுப்பிழந்த படகோட்டியாய் நான்,
- அழகை அழகாக்கியவள் நீ

August 20, 2012

ஒரு முறையாவது திரும்பிப் பார்த்துவிடு,
என் பத்து விரல் நகங்களும்
ஏற்கனவே கொலை செய்யப்பட்டு விட்டன
இன்னொரு முறை
உதட்டைச் சுழிக்காதே
இடி விழுகின்றன
என் இரவு நிமிடங்களில்
வெட்கமெனும் எழுத்துக்கள்
கொண்ட ஒரு அழகிய மொழி நீ,
காதலெனும் சங்கம் வைத்து
மொழி வளர்க்கும் மன்னன் நான்
- நான் எனும் மருதாணி, நீ எனும் சிவப்பு
வெளிச்சம் அணைந்தவுடன்
வெட்கம் ஒளிர ஆரம்பிக்கிறது,
வெட்கம் அணைந்தவுடன்
நீ ஒளிர ஆரம்பிக்கிறாய்
- நான் எனும் மருதாணி, நீ எனும் சிவப்பு
உனது இதழ் மேகங்களுக்காக
வறண்டு போயிருக்கின்றன
என் நிமிட நிலங்கள்
- நான் எனும் மருதாணி, நீ எனும் சிவப்பு
எனது போன பிறவிக் கவிதைகள்
உனக்கு நிழலாய்ப் போயின,
இந்த பிறவியின் கவிதைகளுக்கோ
உன் நிஜம் மீது ஆசை
- நான் எனும் மருதாணி, நீ எனும் சிவப்பு

August 13, 2012

உன் மருதாணி வெட்கங்கள் மீது எனக்கும்
உன் மருதாணி விரல்கள் மீது என் விரல்களுக்கும்
ஒரு இனிமையான அவா
- நீ எனும் மழை, காதல் எனும் மயில் நடனம் 
நமக்கான காதல் மொழிக்கு
ஏனடி உருவமும் வடிவமும்?
- நீ எனும் மழை, காதல் எனும் மயில் நடனம் 
என் மனதிற்கும் முளைத்திருக்கிறது
வண்ண வண்ணமாய் இறக்கைகள்
- நீ எனும் மழை, காதல் எனும் மயில் நடனம் 
என் கடிகார நிமிட முள் பாடுகிறது
உனக்கான என் காத்திருக்கும் தருணங்களை
- நீ எனும் மழை, காதல் எனும் மயில் நடனம் 

August 12, 2012

சந்திப்புகள் புதிது,
பரிசுகள் மிகப் புதிது
என் முத்தங்களும், உன் வெட்கங்களும்
- இது இன்னொரு மலர் மலரும் நேரம்

August 07, 2012

நீ என்னும் பேராசை மீதுதான்
என் எல்லா ஆசைகளுமே,
- இலவசமாய் இன்னுமொரு முத்தம்
போதி மரமாய் உன் உதடுகள்
ஞானம் பெறும் புத்தனாய் நான்,
- இலவசமாய் இன்னுமொரு முத்தம்
நம் இரவு எனும் காவியத்திற்கு
முன்னுரை எழுதட்டும் உன் உதடுகள்
- இலவசமாய் இன்னுமொரு முத்தம்
தெய்வம் நீ தரும் ஒற்றை வரத்திற்கு
நூற்றியெட்டு மல்லிகைகள் காணிக்கை
- இலவசமாய் இன்னுமொரு முத்தம்
உன் உதடு எனும் இனிப்பைத் திருடும்
ஏழை எறும்புகள் என் உதடுகள்
- இலவசமாய் இன்னுமொரு முத்தம்

August 01, 2012

எண்: 22, முதலாவது தெரு, வசந்தம் காலனி ....


என்னை பற்றி: 

பூக்காரி எனும் வரம் பெற்ற ஒரு மங்கை நான்...
என் மலர்கள் மோட்சம் பெற்ற ஒரு சொர்க்கத்தைப் பற்றி, சில பக்கங்கள் இங்கே...

ஆறு மாதங்களுக்கு முன்:

மாலை தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது
கூடையில் இன்னும் மீதமிருக்கின்றன
மல்லிகைச் சரங்கள்
கண்கள் தேடுகின்றன மலர்கள் சூடும் மங்கைகளை

கால்கள் கடக்கின்றன இந்த வீட்டை,
இந்த மாதமாவது யாராவது குடி வருவார்களா?
என் வீட்டு மல்லிகை மொக்குகளுக்கு
இன்னொரு புது முகவரி கிடைக்கும்

பக்திமானாக ஒருவன் வருவானா?
தினமும் கட்டாயம் மலர்கள் வாங்குவான்.
அழகாய் ஒரு கன்னி வருவாளா?
அவளும் கூட தினமும் மலர்கள் வாங்குவாள்

ஐந்து மாதங்களுக்கு முன்:

அதே வீட்டைக் கடக்கிறேன்.
யாரோ புதிதாய் வந்திருக்கிறார்கள்,
'பூக்காரி' எனும் ஒரு தேன் குரல் வீட்டின் உள்ளேயிருந்து
கூடவே சங்கீதமாய் கொலுசின் பாடல்களும்

யாரிவள்? சொர்க்கத்திலிருந்து வந்திருக்கிறாளோ?
மானிடர்களைத்தானே பிரம்மன் படைக்கிறான்,
தேவதை இவளை யார் படைத்திருப்பார்?
தேவதையின் பின்னே வருகிறான், ஒரு ராஜகுமாரன்

புதுத் தாலியும், புதுப் புடவையும்
அவர்களை அடையாளம் காட்டுகின்றன
மூன்று முழம் போதாது என்கிறாள் அவள்,
பத்து முழமாய்க்  கேட்கிறான் அவன்.

நான்கு மாதங்களுக்கு முன்:

என் பூக்கள் இல்லாத மாலை நேரங்கள்
இப்போதெல்லாம் இந்த வீட்டில் இல்லை
மூன்று முழம் எனும் கணக்கு
இன்னும் குறைந்த பாடில்லை

இவள் வாங்கும் பூக்களைப் பார்த்து
என் கூடையின் மற்ற பூக்கள் பொறாமை கொள்கின்றன
எந்த நேரத்தில் இவள் மலருகிறாள்?
விடை தெரியாக் கேள்வியுடன் என் கூடை மலர்கள்

எனக்கும் கூட அதே கேள்விதான்
மலர்கள் சூடும் மலர் இவள் தான்
மல்லிகைக்கும் இவளுக்கும்
எப்படி வித்தியாசம் காண்பான் இவள் கணவன்?

மூன்று மாதங்களுக்கு முன்:

இன்றைக்கு ஏனோ இவன் மட்டும் வருகிறான் வாசலுக்கு
பத்து முழம் மல்லிகை கேட்கிறான்,
வெட்கமாய்க் காரணம் சொல்கிறான்
'முத்தம் எனும் வேலைக்கு' இதுதான் லஞ்சம்

வாசல் தாண்டும் என்னை
தடுத்து நிறுத்துகிறது அவனின் குரல்,
மீண்டும் அதே பத்து முழம் மல்லிகை
மீண்டும் அதே முத்தக் காரணம்

அடுத்த நிமிடமே, மீண்டும் வருகிறான்
மொத்த பூக்களுக்கும் விலை பேசுகிறான்
பூக்களோடு நானும் சேர்ந்து வெட்கப் படுகிறேன்
பூவுக்கு இங்கே பூக்கள் லஞ்சமாய்

இரண்டு மாதங்களுக்கு முன்:

சில நாட்களில் அவள் மட்டும் தனியாய்,
சில நாட்களில் அவன் மட்டும் தனியாய்,
துணைக்குக் காத்திருக்கிறார்கள்.
என் மலர்களோ நீங்கள் 'துணை சேரக்' காத்திருக்கின்றன

இருவர் இணைந்திருக்கும் போதும் சரி
தனித்திருக்கும் போதும் சரி
என் மலர்கள்தான் உங்களின் காதலைப்பேச,
முழம் முழமாய், இங்கே காதல் மாலைகள்

இவன் வீட்டு பெயர் சொன்னால்தான்
என் வீட்டுச் செடிகள் பூக்கின்றன,
இவன் வீட்டைத் தாண்டும்போதுதான்
மலர்கின்றன என் கூடை மொக்குகள்

ஒரு மாதத்திற்கு முன்:

ஒரு நாள் மூன்று முழம்,
மறுநாள் ஒரு முழம்,
அதற்கடுத்த நாள் மீண்டும் மூன்று முழம்
தினம் தினம் ஒரு காதல் கதை

வெள்ளையாய் மலர்ந்து
அவள் வெட்கத்தில் சிவந்து போகின்றன
என் கூடை மலர்கள்.
முழத்தில் ஆரம்பித்து, உதிரிகளில் முடிகின்றன உங்கள் இரவுகள்

பூவோடு சேர்ந்த நாரும்
இங்கே வெட்கப்படுகிறது,
தினமும் மலரும் மலர் இவள்
இவளுக்காக மலரும் மலர்கள், என் மலர்கள்

இந்த மாதத்தில் ஒரு நாள்:

அவள் கூந்தலில் யாருக்கு இடம்?
அவனுக்கும், என் மலர்களுக்கும்
தினம் தினம் இரவுகளில் நடக்கிறது ஒரு யுத்தம்
அவனே தினமும் வெல்கிறான்

இரவுகளில் அவளிடமும்
விடிந்தபின் என் மலர்களிடமும்
வெட்கக் கதைகளைக் கேட்கிறான் அவன்.
இவன் கொஞ்சம் பொல்லாதவன் தான்

மலர்களை வாசம் படிக்கும் பெயரில்
அவளை வசமாக்குகிறான்,
அவளை வாசம் பிடிக்கும் பெயரில்
என் மலர்களை வசமாக்குகிறான் அவன்

இன்று மாலை:

நேரம் கடந்துவிட்டது... என் மலர்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும்...
கால்கள் ஒரு காதல் பயணத்தை ஆரம்பிக்கின்றன 'எண்: 22, முதலாவது தெரு, வசந்தம் காலனி'-யை நோக்கி ....

July 31, 2012

அடுத்த பூகம்பத்திற்கு, இன்னும் முப்பதே வினாடிகள்....


முப்பது வினாடிகளுக்கு முன்:

என் இதயத் தண்டவாளத்தை
உன் இரயில் இன்னொரு முறை கடந்து சென்றது
செல்களில் மெலிதாய்ப் பரவியது ஒரு நிலநடுக்கம்
மெதுவாய் எனைக் கடந்து போனாய் நீ

முப்பது வினாடிகள் கழித்து:

வெறும் மூன்றடித் தொலைவுதான்
உனக்கும் எனக்கும்,
உன் தோழி ஒருத்தியிடம்
ஏதோ பேச ஆரம்பிக்கிறாய்.

இனிவரும் பூகம்பளுக்கான
விதை விதைகின்றன உன் செய்கைகள்,
இன்றைக்கு என்ன
ஆகப்போகிறதோ என் மனது

இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:

மெலிதான உன் விரல் நகங்கள்
மிக மெலிதாய் உன்னிடம் வெட்டுப்படுகின்றன,
என் உயிர் எனும் மரத்தை
யாரோ கோடாரியால் வெட்டுகிறார்கள்

இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:

முகத்தில் ஊஞ்சலாடும் இரு முடிகள்
வேக வேகமாய், உன் காதோடு அணைக்கப்படுகின்றன
உன் காதல் ஊஞ்சலில்
ஆடும் குழந்தையாகிறேன் நான்

இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:

அடம் பிடிக்கும் குழந்தையாய் உன் துப்பட்டா,
சரியும் போதெல்லாம், சரி செய்கின்றன உன் விரல்கள்
உன் துப்பட்டாவின் சிறு சரிவில்
என்னில் பெரும் நிலச் சரிவுகள்

இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:

உன் இரு இமைகளுக்கு நடுவே
மீண்டும் முத்தங்கள் பரிமாறப்படுகின்றன,
உனக்கான என் இதழ்களில் தெரிகிறது
ஏக்கமும், வறட்சியும்

இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:

முப்பது வினாடிகளுக்கு ஒரு முறை
என்னுள் நடக்கிறது இந்த அழகு பூகம்பம்,
எந்த அளவு கோலில் அளப்பது
உன் அழகையும், என் பூகம்ப அலகையும்?

என் பத்து திசைகளிலும்
நீ என்னும் அழகுதான்,
ஆகமொத்தத்தில் நீதான் 'அழகின் அழகும், அலகும்'

July 25, 2012

உன் காதல்
நான் தேடும் சந்தோசம்,
என் காதல்
உன்னைத் தேடும் சந்தோசம்,
நம் காதல்
நம்மைச் சேர்க்கும் சந்தோசம்

ஒரு பிறப்பும், ஓராயிரம் மறுபிறப்பும் ...


நள்ளிரவு 12.00 மணி:

நம் மகனின் அவசர அசைவுகளை
உன் கரங்களின் வழியே உணர்கிறேன்,
தகப்பனைக் காணத் தவிக்கும் தவிப்பு
என் தவிப்பையும் மிஞ்சுகிறது

திடீரென உனக்குள்ளே ஒரு பிரளயம்,
புரிந்துவிட்டது, இது நம் மகன் உதிக்கப்போகும் நேரம்
இரு கைகளால் ஏந்துகிறேன் இரட்டை உயிர்களை
இறக்கை இல்லாமலே பறக்கிறேன் மருத்துவச்சியிடம்

நள்ளிரவு 1.00 மணி:

உன் இரு கரங்களின் இறுக்கத்தில்
தாய் உன் வலியை உணர்கிறேன்.
வலியால் துடிக்கும் உனைக் காண
ஆண்மகன் எனக்குத் தைரியமில்லை

உருவமில்லா பயமும், தவிப்பும்
என் கழுத்தின் மேலே நடனம் ஆடுகின்றன
அறைக் கதவுகள் மூடப்படுகின்றன
தனியே தவிக்க விடப்படுகிறேன்

பின்னிரவு 2.00 மணி:

நகங்களோடு விரல் சதைகளும்
என் பற்களால் கொலை செய்யப்பட்டன
மனதெங்கும் நடுக்கமேனும் ஒரு மின்சாரம்
பாய ஆரம்பித்திருந்தது

என் செல்களின் மீது
யாரோ நெருப்பு மூட்டி இருந்தார்கள்
வாசலின் மீது கண்களும்
வாசலின் வழியே கால்களும் ஓடிக்கொண்டிருந்தன

பின்னிரவு 3.00 மணி:

ஒரு மணிக்குள்
ஆயிரம் முறை இறந்து பிறந்துவிட்டேன்
கன்னங்களின் மீதிருந்த உன் முத்தத் தடங்களை
என் கண்ணீர் ஆறு அழித்திருந்தது

நாத்திகன் எனக்கு
யார் யாரோ தெய்வம் ஆனார்கள்
மதம் பிடித்த யானையை மிஞ்சியது
என் இதயத்தின் துடிப்பு

அதிகாலை 4.00 மணி:

இரத்தம் உறைந்து போய்விட்டது
நரம்புகள் அறுந்து போய்விட்டன
கொஞ்சம் கண்ணீரும்
நிறையக் காதலும்தான் மீதம்

உன்னால் மகனுக்கு வலியா?
இல்லை அவனால் உனக்கு வலியா?
இரண்டு வலியும் இங்கே ஒன்றாய்
என் உயிரில்

அதிகாலை 5.00 மணி:

வாசல் திறக்கிறது
வலியில் மீதமான கண்ணீருடன் நீ
இரத்தமும் சதையுமாய் நம் மகன்,
அழுகை எனும் ராகத்துடன்

யாருக்கு இப்போது என் முத்தங்கள்?
ஆளுக்கு ஆயிரமாய் வைத்துக்கொள்ளுங்கள்
அணைத்துக் கொள்கிறேன் உன்னையும் சேர்த்து
முத்தங்களும் கண்ணீரும், பேசட்டும் மீதக் கதைகளை

July 23, 2012

உன் கடைசி 'முதல் முத்தம்' ...

என் மொட்டுகளுக்களின்
கதவுகளை யாரோ தட்டுகிறார்கள்
மெதுமெதுவாய் மலர்கின்றன அவைகள்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் செல்களின்
துடிப்பை யாரோ வேகப்படுத்துகிறார்கள்
மெது மெதுவாய் வெடிக்கின்றன அவைகள்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் இரத்தத்தின்
நிறத்தை யாரோ மாற்றுகிறார்கள்
மெதுமெதுவாய் நடக்கிறது வர்ணஜாலம்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் சிலையின்
கண்களை யாரோ திறக்கிறார்கள்
மெதுமெதுவாய் உயிர்வருகிறது எனக்கு
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் மேகங்களின்
பாதையை யாரோ மாற்றுகிறார்கள்
மெதுமெதுவாய் பொழிகின்றன உன் மேலே
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் தேசங்களின்
எல்லைகளை யாரோ திருடுகிறார்கள்
மெதுமெதுவாய் இணைகின்றன ஒரே தேசமாய்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் விண்மீன்களை
நிலவாக யாரோ மோட்சிக்கிறார்கள்
மெதுமெதுவாய் புலர்கிறது ஒரு முழுமதி(கள்) நாள்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் வெட்கங்களை
கள்ளத்தனமாக யாரோ ரசிக்கிறார்கள்
மெதுமெதுவாய் சிவக்கின்றன உனக்காக
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் கவிதைகளை
இசையால் யாரோ உருமாற்றுகிறார்கள்
மெதுமெதுவாய் பிறக்கின்றன காதல் கீதங்கள்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் இதழ்களை
உனக்காக யாரோ ஏங்க விடுகிறார்கள்
மெதுமெதுவாய் நடக்கிறது ஒரு முத்த அணைப்பு
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

பின் வந்த ஏதோ ஒரு நாளில்தான் தெரிந்தது
அது இன்னொரு முதல் முத்தமல்ல
அதுவே உன் கடைசி 'முதல் முத்தம்'

காதல் உயிரோடும், காயங்கள் காலத்தோடும்
கரைந்து போயிருந்தும்
'முதல் முத்தங்கள்', இன்னும் 'முதல் முத்தங்கள்' தான்

July 18, 2012

நம் காதல் காவியத்தில்
ஒரு வெற்றுப் பக்கம்
- இது ஆடி மாதம்
மடிந்து போன
என் விரல் நகத் துணுக்கள் சொல்லும்,
மடிந்து போய்க்கொண்டிருக்கும்
என்னுடைய சோகத்தை
- இது ஆடி மாதம்

July 16, 2012

'ஆடி' எனும் இரண்டே எழுத்துக்கள்
நம் காதல் கவிதை மொழியின்
மற்ற எழுத்துக்களை மௌனமாக்கி விட்டது
- இது ஆடி மாதம்
நீ வரைந்த கோலத்தில்
இணைக்காமல் விட்டுவிட்ட
இரு புள்ளிகள் நீயும் நானும்
- இது ஆடி மாதம்
நீயே பறித்து நீயே வைத்துக் கொள்ள
எதற்கு மருதாணி இலைகள்?
நீயே பறித்து நீயே சூடிக் கொள்ள
எதற்கு மல்லிகள் இதழ்கள்?
வறட்சியில் நானும் அவைகளும்
- இது ஆடி மாதம்
உனக்கும் எனக்கும் இடைவெளி
32 நாட்கள்,
ஆனால் நமக்குள்ளான இடைவெளியோ
32 யுகங்கள்
- இது ஆடி மாதம்

July 15, 2012

மலராமல் வாடுகின்றன
கொல்லைப்புற மல்லிகை மொக்குகள்,
மலர்ந்து வாடுகின்றோம்
என் நீயும், உன் நானும்
- இது ஆடி மாதம்
தேன் நிலவிற்கும்
இங்கே ஒரு தேய்பிறை
- இது ஆடி மாதம்
மௌன ஏக்கங்களும்
ஏக்க மௌனங்களும் தான்
இப்போது நம்மிடையே
- இது ஆடி மாதம்
'நாம்' என்ற நாம் இப்போது
நானகவும், நீயாகவும்
- இது ஆடி மாதம்

July 12, 2012

நம் சமையலறைப் பக்கங்கள்....


திங்கட்கிழமை

உன்னை உதவிக்கு அழைத்ததுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
சமையல் வாசம் அறிய அழைத்த நான்
உன் வாசத்தில் மயங்கிப் போனேன்

கடுகுகள் சிவக்கும் முன்னே
என் கன்னங்கள் சிவந்து போயின
வேகவேகமாய்
நானும் சமையலறை வெப்பமும் அணைந்து போனோம்

செவ்வாய்க்கிழமை

உன்னை நம்பி மருதாணி பூசியதுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
என் கரங்களுக்கு பதிலாய் உன்னை அழைத்த நான்
உன் கரங்களின் எல்லைக்குள் சிறைபட்டுப் போனேன்

வாணலியில் வெப்பம் பரவும் முன்னே
உன் அங்கமெங்கும் மருதாணி பரவியது
வேகவேகமாய்
நானும் நீயும் சிவந்து போனோம்

புதன்கிழமை

உன்னை ஒரு ஓவியம் வரையச் சொன்னதுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
தூரிகையும் வண்ணங்களையும் இல்லாமல்
நீ வரையும் ஓவியமாய் நான் ஆனேன்

உவர்ப்பும் இனிப்பும் இங்கே
வர்ணங்கள் ஆகின
வேகவேகமாய்
நீயும் உன் தீண்டலும் ஓவியங்கள் ஆனோம்

வியாழக்கிழமை

களைப்பான உன்னை தேநீர் பருக அழைத்ததுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
கூடுதல் இனிப்புக்காக என் உதடுகளை
கரைத்த இனிப்பாய் நான் ஆனேன்

சர்க்கரை திருட வந்த எறும்புகள்
சிலைகள் ஆகின
வேகவேகமாய்
என் இதழ்களும் உன் இதழ்களும் இனிப்புகள் ஆனோம்

வெள்ளிக்கிழமை

உன்னை சமையலறையில் இருந்து ஒதுக்கி வைத்ததுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
உன்னைத் தனியாய் போகச் சொன்ன நான்
தனிமையில் வாடிப் போனேன்

என் கழுத்தின் பின்னே
உன் மூச்சுகளின் பிம்பங்கள் இல்லை
வேகவேகமாய்
நானும் என் மூச்சும் உடைந்து போனோம்

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை

என் ஐந்து நாட்களை
உன் இந்த இரண்டு நாட்கள்
எளிதாய் தோற்கடித்து விடுகின்றன

நீ இல்லாமல் நான் வரையும்
கோலங்களை விட,
நீயும் நானும் வைக்கும் புள்ளிகள் தான்
இங்கே நம் காதலின் சின்னங்கள்

கல்லிலும் கடவுள், தூணிலும் கடவுள்
எனும் பக்தனைப் போல்,
கணவன் உனக்கு
எங்கேயும் காதல் தானடா

July 11, 2012

உன் இதழ்கள், இங்கே தூரிகை
உன் வெட்கம், இங்கே வண்ணம்
என் கன்னத்தில், உன் ஓவியங்கள்
- என் கன்னங்களும், உன் முத்தங்களும்
இன்னொரு முத்தமொன்று வேண்டாம்
இன்னொரு 'முதல் முத்தம்' கொடேன்
- என் கன்னங்களும், உன் முத்தங்களும்
சேமிக்கக் கற்றுக் கொள்ள வருகிறாய்
செலவு செய்ய கற்றுத் தருகிறேன்.
செலவு செய்யக் கற்றுக் கொள்ள வருகிறாய்
சேமிக்கக் கற்றுத் தருகிறேன்
- என் கன்னங்களும், உன் முத்தங்களும்

July 10, 2012

நிலவு நீ, பாதையோரக் கிணறு நான்.
விழுந்த உன் அமைதி பிம்பத்தை
சிறைபிடிக்கத் துடிக்கிறது, என் அலை மனது
- உனக்கும் எனக்கும் ஏனோ ஒரு தொலைவு

July 09, 2012

உன் நகப்பூச்சிற்கும், உன் உதட்டுச் சாயத்திற்கும்
இடையே நடக்கிறது வண்ணத்தின் அழகுப் போட்டி,
பட்டத்தை வெல்கிறது உன் வெட்கச் சிவப்பு
மாதங்கள் எனும் பிரிவுகள் தொலைந்து
என் ஆண்டின் எல்லா நாட்களுமே
இனிமேல் கார்த்திகை தீப நாட்கள்தான்
- நீ எனும் ராகம், இரவு எனும் பாடல்
நம் முத்தங்களின் ஞாபகமாய்
நீ வைத்த நட்சத்திரப் புள்ளிகள்,
நீ இல்லாத இந்த இரவில்
என்னை ஞாபகத்தில் கொள்கின்றன
-  இது நீ இல்லாத இன்னொரு இரவு

July 08, 2012

வெளியே பெய்யும் மழைக்கும்
உள்ளே இருக்கும் வெப்பத்திற்கும்
இடையே வாயிற்படியில் வலியோடு நான்
-  இது நீ இல்லாத இன்னொரு இரவு

July 06, 2012

கொடியில் காயும்
உன் நனைந்த புடவையின் உரசலில்
பற்றி எரிகிறது என் தேகம்
- இது நீ இல்லாத இன்னொரு இரவு
நீதான் என் நோய்,
நீயேதான் என் மருத்துவமும்
- இது நீ இல்லாத இன்னொரு இரவு
கடைசிப் பேருந்தும் சென்று விட்டது,
விடியலா? நடையா?
வர்ணம் போன இரவில், குழப்பமாய் நான்
- இது நீ இல்லாத இன்னொரு இரவு

July 04, 2012

உன் தகப்பன் வீட்டில் ஒரு நாள்.....


காலை 7.௦௦ மணி - நம் படுக்கையறை

விழிகள் தேடும் முன்னே, என் விரல்கள் தேடுகின்றன உன்னை
மெதுவாய் உணர்கிறேன், இது உன் தகப்பன் வீடு..
கண்களையும், என் கைகளையும் எச்சரிக்கிறது என் மனசாட்சி
இன்றைக்கு எல்லை மீறக்கூடாது

காலை  9.00 மணி - வீட்டு முற்றம்


விவசாயத் தொழிலாளர்களுக்கு கட்டளையாய்
உன் அப்பாவின் கணீர்க் குரல்
எங்கோ இருந்து காற்றில் வரும் உன் அழைப்புக்கு
அடங்கிப் போகிறார் உன் அப்பா

முற்பகல் 11.00 மணி - வீட்டு சமையலறை


நீ இருப்பதால் இன்னும் நிறைய நன்வாசம் வீசுகிறது
உன் வீட்டு சமையலறை,
வழக்கம்போல நீ தான் முதலில் ருசிக்க வேண்டும்
தவமிருக்கிறார்கள் உன் அம்மாவும், சமையலறையும்

பகல் 1.00 மணி - உணவுண்ணும் அறை

வழக்கம் போல உனக்கு ஊட்டிவிட
உன் அப்பாவும் அம்மாவும் ஏங்குகிறார்கள்,
அருகே அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை என் பெயரில்
யாரோ அமைத்திருக்கிறார்கள் ஒரு செயற்கை வேலியை

பிற்பகல் 3.00 மணி - உன் வீட்டுத் தோட்டத்தின் கிணற்றடி

தோட்டத் தொழிலாளர்களின் கண்களின் தெரிகிறது
உன் பேரழகும், உன்னைப் பிரியும் ஏக்கமும்
உன் தடவலில் மலரும் மலர்ச் செடிகளில்
நீ பிரிவதின் வலியை உணர்கிறேன்

அந்திப் பொழுது  5.00 மணி - உன் வீட்டுக் கொல்லைப் புறம்

கூந்தல் முழுதும் நீ மலர் சூடியும்
வேலைக்காரியின் இன்னொரு மலருக்கும் தருகிறாய் ஒரு இடம்
இனிமேல் யார் வந்து இந்த மொக்குகளுக்கு
மலராகும் வரம் தருவார்?

மாலை  7.00 மணி - உன் அம்மாவிற்கு பிரசவம் பார்த்த ஒரு பாட்டியின் வீடு

உனக்கு முதன் முதலாய் முத்தம் அளித்தவள் இவள்,
இன்னொரு முத்தத்திற்கு இவளுக்கு பஞ்சமா என்ன?
அன்பாய்க் கட்டளை இடுகிறாள் அவள்
'உண்டானவுடன் இங்கே வந்துவிடு... உனக்கும் நான்தான் பிரசவம் பார்க்க வேண்டும்'

இரவு 9.00 மணி - உன் வீட்டு வாசல்

உன் மாமியாரைப் பற்றி அக்கறையாய்
விசாரிக்க உன் பள்ளித் தோழிகள் கூட்டம்
ஒட்டு மொத்தமாய் எல்லோரின் அடுத்த கேள்வி
'இரவுகளில் மாப்பிள்ளை எப்படி?', வெட்கமாய்ச் சிவக்கிறாய் நீ

இரவு 11.00 மணி - மீண்டும் அதே படுக்கையறை

நடந்த கதைகளை விவரிக்க ஆரம்பிக்கிறாய்
இன்னும் முத்த கணக்கை ஆரம்பிக்காமல்
அமைதியாய் இருக்கும் என்னிடம், நீ வினவுகிறாய்
'காலையில் இருந்து உங்களுக்கு என்னாயிற்று?'

அமைதியாய் என்னிடமிருந்து வார்த்தைகள் வருகின்றன
'உன்னை நான்தான் தேவதையாய் வாழ வைக்கப் போகிறேன்
எனும் என் தலைக்கனம் அழிந்து போய் விட்டது.
பிறந்த நாளில் இருந்தே நீ தேவதை தானடடி'

மார்பில் சாய்ந்துகொண்டே சொல்கிறாய்
'இதைவிட எனக்கு வேறு சொர்க்கம் வேண்டுமா என்ன?'

July 02, 2012

மூன்று 'கால் நிமிடங்கள்'.....


கண்களின் இமைகளுக்கு நடுவே சந்தோசம் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஒரு காலை நேரம்... இமைகளை மூட எனக்கு ஆசையில்லை...
சற்று முன்பு மலர்ந்த ஒரு மல்லிகை போல் இருக்கிறாய் நீ....அணிந்திருந்த மலர் மாலையிலிருந்து, இன்னும் நீர் சொட்டிக் கொண்டிருக்கிறது...

தேன் தடவிய நிமிடங்களுக்கு நடுவே, உன் கழுத்தில் நான் தாலி கட்டி முடித்திருக்கிறேன்... என்னைச் சுற்றலிலும் என்ன என்னவோ நடந்து கொண்டிருந்தும், மனம் எதிலும் ஒட்டவில்லை.. இவ்வளவு அழகா நீ? விழிகளால் நம்ப முடியவில்லை...

கூட்டத்திலிருந்து யாரோ அழைக்கிறார்கள்... அக்னி வலம் வர வேண்டுமாம்.... நம் காதலுக்கு அக்னி சாட்சி வேண்டுமா என்ன? வரங்கள் வாங்குவதற்கு எதற்க்குச் சாட்சி? என்னிடம் இருந்து எதை வேண்டுமானாலும், என் என்னை வேண்டுமானாலும் கூட எடுத்துக் கொள்ளுங்கள்... இவள் இருக்கிறாள் எனக்காக.....

உன் புடவைக்கும், என் வேஷ்டிக்கும் விழுகிறது ஒரு முடிச்சு... இப்படியே இருக்கட்டும் இந்த முடிச்சு ... பின்வரும் நாளில் நம் மகளுக்கு, இதைக் காண்பிக்க வேண்டும்....என் ஒற்றை விரலை, உன் விரலோடு யாரோ கட்டுகிறார்கள்.... மற்ற விரல்களில் ஏக்கங்கள், மண்டப சத்தத்தில் மறைந்து போகின்றன....

என் காதலுக்கும், உன் மௌனத்திற்கும் 
சில ஆண்டுகளாய் நடந்த போர் முடிவுக்கு வந்த நிமிடம்.
இமைகள் மூடி முதல் சம்மதம் சொன்னாய்... 
பின் வந்த நாட்களில், வேறு சம்மதங்களுக்காக நீ இதழ்கள் மூடியது வேறு கதை

என் மனதில் இந்த நிமிடம் ஓடி முடித்த புள்ளியில், முதல் வலமும் முடிந்து போனது....இரண்டாம் வலம் ஆரம்பிக்கும் புள்ளியில், என் பெற்றோர்களைக் கவனிக்கிறேன்... ஒரு தேவதையைக் கடத்திப் போன பெருமிதம் தெரிகிறது அவர்களின் கண்களில்... உன் பெற்றோரையும் கவனிக்கிறேன்... அனேக ஏக்கங்கள் ஒரு கண்ணில், அனேக சந்தோசங்கள் மறு கண்ணில்... என் சிரிப்பு அவர்களுக்கு உணர்த்தி இருக்கும் 'நீ என் சொர்க்கத்தின் தேவதை ஆகப் போகிறாய் என்று'

இரண்டாம் சுற்றின் இந்த கால் நிமிடத்தில், என் நினைவில் வருகிறது, நம் மணமேடையின் ஒரு நிமிடம்

என் ஏக்கங்களுக்கும், உன் வெட்கங்களுக்கும்
சில நிமிடங்களாய் நடந்து வந்த தித்திப்பு உச்சகட்டமான நிமிடம்,
மலர்கள் பொழிய மாங்கல்யம் சூடிய கணம்
சொந்தங்கள் மறந்து, உன்னை மட்டுமே நான் வேடிக்கை பார்த்தது வேறு கதை

கனவு கண்டு முடிப்பதற்குள், இரண்டாம் சுற்று முடிந்து விட்டது... மணவறை இன்னும் கொஞ்சம் நீளமாய் இருக்கக் கூடாதா? இரண்டாம் சுற்றிற்க்கும், மூன்றாம் சுற்றிற்க்கும் இருக்கும் சிறு இடைவெளியில் நம் நண்பர்கள் கண்களில் படுகிறார்கள்... உன் வெட்கத்தை உன் தோழிகளும், என் அமைதியை என் தோழர்களும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்... நானும் கடைக் கண்ணில், உன்னை ரசித்துக் கொள்கிறேன்...

மூன்றாம் சுற்றின் இந்த கால் நிமிடத்தில், என் நினைவில் வருகிறது, நம் பின் நாளின் ஒரு நிமிடம்

என் தவத்திற்கும், உன் தாய்மைக்கும்
சில மாதங்களாய் துளிர்ந்திருந்த மொட்டு, இன்று மலரும் நேரம்,
வலிகளுக்கு நடுவே நம் மகளின் அழுகை கேட்ட நேரம்
சுற்றம் சொந்தங்கள் மறந்து, உன்னையும் நம் மகளையும் முத்தங்கள் கொண்டு அணைத்தது வேறு கதை

யாரோ வருகிறார்கள், நம் விரல்களைப் பிரிக்க... வேண்டாம், நான் இவளோடு இந்த உலகையும் வலம் வர வேண்டும்... 
வேறு என்ன வேண்டுமடி எனக்கு? இந்த மூன்று கால் நிமிடங்கள் போதும், இன்னும் முப்பது ஜென்மங்களுக்கு....

July 01, 2012

முத்தத்தை நீளச் சொல்லி நான்
இரவை நீளச் சொல்லி நீ,
- நீ எனும் இரவு, நான் எனும் நிலவு

June 28, 2012

நீ எனும் பொன் இரவுதான்
நான் எனும் நிலவை முழுமதி ஆக்குகிறது.
முழுமதி நாளில், நீயும் நானும் முழுமதியாய்
- நீ எனும் இரவு, நான் எனும் நிலவு
ஒரு முத்தமெனும் மேற்கில் உதித்து
மறு முத்தமெனும் கிழக்கில் விடிகின்றன
நம் நிலவு இரவுகள்
- நீ எனும் இரவு, நான் எனும் நிலவு
வெட்கமெனும் அமிர்தம் சுரக்கும்
ஒரு பாற்கடல் நீ,
அமிர்தமே அமிர்தம் சுரக்கும் ஒரு வரமெனக்கு
- நீ எனும் இரவு, நான் எனும் நிலவு
நம் கொல்லைப் புற மல்லிகை
வீசும் தென்றலோடு சேர்ந்து,
நம் வாசத்தை இந்த இரவெங்கும் பரப்புகிறது
- நீ எனும் இரவு, நான் எனும் நிலவு

June 26, 2012

இடைவெளிகள் எல்லாம், வெறும் இடைவெளிகள் தான்


அருகில் இருக்கும் தகப்பன் வீட்டிற்கு
தொலைவாய்ப் போன மனைவிக்கு,
நம் இல்லம் எனும் சொர்க்கத்தில் இருந்து
நீ எனும் சொர்க்கத்தை பிரிந்திருக்கும் கணவனின் இன்னொருமொரு காதல் கடிதம்......


என் கவிதையின் சொற்களுக்கும்
சொற்களின் உள்ளே புதைந்து இருக்கும் காதலுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

உன்னைப் பின்தொடரும் என் பாதத்திற்கும்,
என்னை வழிநடத்தும் உன் பாதத்திற்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

சம்மதம் சொல்லும் உன் விழிகளுக்கும்
சம்மதம் சொல்லத்துடிக்கும் உன் இதழ்களுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

பாதை சேரும் கைரேகைகளுக்கும்
பாதை விலகும் நம் திசைகளுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

எனக்கான உன் நாணத்திற்கும்
உனக்கான என் முத்தத்திற்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

கணவன் என் கெஞ்சலுக்கும்
மனைவி உன் கொஞ்சலுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

என் மென் இரவுக்கும்
உன் பொன் விடியலுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

நம் மகனுக்கான உன் முத்தத்திற்கும்
உன் முத்ததிற்க்கான என் ஏக்கத்திற்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

உன் புடவையின் தலைப்பிற்கும்
மழையில் நனையும் என் நிமிடங்களுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

இடைவெளிகள் எல்லாம்
வெறும் இடைவெளிகள்தான்...
உனக்கான என் காதலும், எனக்கான உன் காதலும்
நமக்காய் இருக்கும் வரையில்

ஆயிரம் முத்தங்களுடன்,
உன் நானே...

June 24, 2012

இதழ்களை வைத்து ஓவியம் ஆனவள் நீ.
இதழ்கள் வைத்து ஓவியம் வரைபவன் நான்.
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்
உன் இரவு மௌனமெனும் பூட்டிற்கு
என்னிடம் ஆயிரம் சாவிகள்.
அவைகளில் ஒன்று இந்த முத்தம்.
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்
நீ எனும் வனத்தில்
நான் ஒரு 'இதழ்கள் கொத்திப் பறவை'
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்
நீ உதட்டுச் சாயம் பூசி அழகாகிறாய்,
நானோ உன் உதட்டைச் சாயமாக்கி  அழகாகிறேன்
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்
முதல் முத்தத்தில்
அணைந்துபோகும் உன் வெட்க விளக்குகள்,
மறுமுத்ததில் மீண்டும் ஒளிர்ந்து கொள்கின்றன
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்
விழிகள் நீ ஒளிக்கும் இரகிசியங்களை
இதழ்களில் திருடுபவன் நான்.
- அடியே, நான் இதழியலியல்
முதுகலைப் பட்டம் பெற்றவன்

June 22, 2012

என் முத்தங்கள் காற்றில் கரைவதால்
நான் வர்ணமிழக்கிறேன்,
உன் முத்தங்கள் காற்றில் கரைவதால்
இரவு வர்ணமாகிறது
- இந்த இரவும் எனைச் சுட்டெரிக்கிறது
கதிரவன் நான் தேய்ந்து போகின்றேன்,
என் வளர்பிறை நிலவு நீ
மௌன மேகத்தில் ஒளிந்துகொள்கையில்.
- இந்த இரவும் எனைச் சுட்டெரிக்கிறது
நான் திருடப் பார்க்கும் உன் அழகை
இரவுக்கு தானம் அளிக்கிறாய்,
தவங்கள் இருப்பது நான், வரங்கள் பெறுவது இரவு
- இந்த இரவும் எனைச் சுட்டெரிக்கிறது

June 20, 2012

சூடிக்கொள்ள மணாளன் நானிருந்தும்
உன் பெண்மை ஏனோ
ஆடையையும், வெட்கத்தையுமே தேடுகிறது
- நம் வானெங்கும், இரவு நேர வானவில்கள்
உன் ஒற்றை முத்தத் தீக்குச்சியில்
எரிந்து போகிறது என் இரவு வனம்
- நம் வானெங்கும், இரவு நேர வானவில்கள்
தவிக்கையில் நெருங்கி வருகிறாய்,
நெருங்கையில் தவிக்க விடுகிறாய்
ஏனிந்த கண்ணாமூச்சி ஆட்டம்?
- நம் வானெங்கும், இரவு நேர வானவில்கள்
ஒரு புறம் மேகத்தில் ஒளியும் நிலவு
மறுபுறம் வெட்கத்தில் ஒளியும் நீ,
புவியும் நானும் தனியாய்த் தவிக்கிறோம்.
- நம் வானெங்கும், இரவு நேர வானவில்கள்
முத்தங்கள் எனும் புள்ளிகளுக்கிடையே
மாட்டிக்கொண்டது நம் இரவு எனும் கோலம்
- நம் வானெங்கும், இரவு நேர வானவில்கள்
வார்த்தைகள் ஏதும் வராமலே
இறந்துபோகிறது,
உனைப் பிரிந்திருக்கும் இன்றைய இரவு

June 18, 2012

எட்டாம் மாதம், ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுது


காட்சி: ஒன்று
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் முற்றம்

பிறக்கப்போகும் குழந்தைக்கு
வைக்கப் போகும் பெயர்க்கான
சண்டை இன்னும் ஓய்ந்த பாடில்லை

இன்றைக்கு மருதாணி மீது அப்படியொரு ஆசை.
நீ வைத்துவிடும் நாளெல்லாம்
சிவப்பதில் எனக்கும் மருதாணிக்கும்
எப்போதுமே ஒரு போட்டிதான்

உன் அங்கமெங்கும் மருதாணி ஆன நாட்களுக்கு
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
உதைக்கும் மகனை சமாதனம் செய்யும் செய்கைகளால்
என் வயிறெங்கும் இப்போது மருதாணி ரேகைகள்


காட்சி: இரண்டு
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் கொல்லைப்புறம்

மணமாகி பத்து மாதங்கள் ஆகியும்
புதுமனைவி எனக்கான
முத்தங்கள் இன்னும் தீர்ந்து போகவில்லை

இன்றைக்கு மல்லிகை மீது அப்படியொரு ஆசை.
மல்லிகைப் பூக்கள் எனும் லஞ்சம்
கொடுத்து முத்தங்கள் எனும்
காரியம் முடிப்பவன் நீ

இன்னொரு உயிரோடு இருப்பதால், உன் செல்ல இம்சைகளுக்கு
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
ஆனாலும் கள்வன் நீ, மகனுக்குக் கொடுக்கிறேன் என்று
என்னிடமும் ஏகமாய் வசூலித்து விடுவாய்


காட்சி: மூன்று
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் சமையலறை

நீயோ, நானோ இல்லை நாமோ
ஒற்றைக் கோப்பையில் இரட்டை தேநீர்
எனும் பங்கீடு இன்னும் மாறவில்லை

இன்றைக்கு உன் சமையல் மீது அப்படியொரு ஆசை,
இரட்டை உயிரோடு சாப்பிட அடம்பிடிக்கும் நான் ஒரு புறம்
கோபமே கொல்லாத என் காதலன் நீ மறுபுறம்.
போன பிறப்பில் என் தாயோ?

இன்னொரு மலர், என் செடியில் பூத்திருப்பதால்
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
இல்லையெனில் சமையல் வாசம் பிடிக்க வருகிறேன் என்று
என் வாசத்தை பிடித்து சென்றிருப்பாய்


காட்சி: நான்கு
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் ஓய்வறை

உடுத்தி இருக்கையில் மட்டுமன்றி
மடித்து வைக்கும் போதும்
என் ஆடைகளின்
வாசம் பிடிக்கும் பழக்கம் இன்னும் போகவில்லை

இன்றைக்கு உன் முத்தம் மீது அப்படியொரு ஆசை,
வரப்போகும் மகனால் முத்தங்களின் எண்ணிக்கை
இப்போது இரண்டு மடங்காகி விட்டது
இரட்டை பிறவியாய் இருக்கக் கூடாதோ?

தட்டிக் கேட்க ஆள் வரப்போவதால், உன் மிரட்டல்களுக்கு
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
இல்லையெனில் உன் கண்கள் எனும் அடியாட்கள் வைத்து
என் உதடுகளை கடத்திப் போயிருப்பாய்

June 14, 2012

எப்போது கிடைக்கும் உன் முதல் முத்தம்?

இன்னும் எத்தனை கலைஞர்கள்
பிறக்க வேண்டும்?
புல்லாங்குழல் ஏங்குகிறது முதல் இசைக்காக

இன்னும் எத்தனை நாட்கள்
கழிய வேண்டும்?
மாதம் ஏங்குகிறது முதல் முகூர்த்த நாளுக்காக

இன்னும் எத்தனை வார்த்தைகள்
பிறக்க வேண்டும்?
கவிதை ஏங்குகிறது முதல் நூலுக்காக

இன்னும் எத்தனை மலர்கள்
மலர வேண்டும்?
நார் ஏங்குகிறது முதல் மாலைக்காக

இன்னும் எத்தனை வண்ணங்கள்
சேர வேண்டும்?
தூரிகை ஏங்குகிறது முதல் ஓவியத்திற்
க்காக

இன்னும் எத்தனை நிமிடங்கள்
கடக்க வேண்டும்?
நிமிட முள் ஏங்குகிறது முதல் மணிக்காக

இன்னும் எத்தனை புள்ளிகள்
இணைய வேண்டும்?
வாசல் ஏங்குகிறது முதல் கோலத்திற்க்காக

இன்னும் எத்தனை துளிகள்
இணைய வேண்டும்?
மேகம் ஏங்குகிறது முதல் மழைக்காக

இன்னும் எத்தனை யுகங்கள்
நான் தவமிருக்க வேண்டும்
உன் முதல் முத்தத்திற்க்காக?

June 12, 2012

இந்த நிமிடமே, என்னை மணந்து கொள்ளேன் !!!

எங்கிருந்து வந்தது என் பெண்மைக்குத் தைரியம்?
முதல் வார்த்தையாய் உன் பெயர்தான்.
நரம்புகள் வெடிக்கின்றன, அணுக்கள் உடைகின்றன

உனக்குக் கேட்டிருந்தாலும் பரவாயில்லை
இன்னொரு முறை சொல்கிறேன் உன் பெயரை,
ரத்தத்தில் இனிப்பு ஆறு ஊற்றெடுக்கிறது

என் பெயர் இவ்வளவு அழகா?
இன்னொரு முறை சொல்லேனடா
என் பெயரோடு, உன் பெயர் இணைகையில்
மீண்டும் ஒரு முறை மலர்ந்து போகிறேன்

வெட்கம், நாணமும் உடைந்த அணைகளாய்,
காட்டாற்றில் மாட்டிக் கொண்ட
மங்கை நான் என்ன செய்ய?

எத்தனை ஜென்மத்தில் எத்தனை தவங்கள் செய்தேனோ
'நான் உன்னைக் காதலிக்கிறேன்'
என்று நீ கூறக் கேட்க

இமைகள் மூடுகிறேன்
இதழ்கள் திறக்கிறேன் சம்மதத்திற்காக
உன் மார்பில் சாய மனம் ஏங்குகிறது

எந்த தெய்வம் தந்தது நீ எனும் வரத்தை?
எந்த நாள் ஆனது, நீ எனும் முகூர்த்த நாளாய்?
எந்த நான் ஆனேன், உனக்கு மனைவியாய்?

ஒற்றை முத்தம் கேட்கச் சொல்கின்றன
என் உடம்பின் ஆயிரமாயிரம் அணுக்கள்,
அவைகளின் ஆசைகளை என் வெட்கம் தோற்கடிக்கிறது

இந்தக் காதல் இப்படித்தான்,
குழந்தையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகிறது
தூரத்தில் நீ இருப்பதை நீ மறக்க
கண்களை மூடிக் கொள்கிறேன், அப்போதுதான் நீ அருகில் வருவாய்

பசலை நோயின் அறிகுறி ஆரம்பிக்கிறது
இந்த நிமிடமே என்னை மணந்து கொள்ளேன்
வேறு என்ன எனக்கு வேண்டும்?

June 11, 2012

முதல் தொண்ணூறு நிமிடங்கள்

நாவில் நடக்கிறது ஒரு நிலநடுக்கம்,
வார்த்தைகளுக்குள் ஒரு போராட்டம்
இதயத்தில் நடக்கிறது ஒரு ஓட்டப்பந்தயம்

நீயாவது தொடங்கேனடி,
என் பெயர் சொல்லி அழைக்கிறாய்,
தேனாய் இனிக்கிறது என் பெயர்
இன்னொரு முறை என் பெயர் சொல்லேனடி

பதிலுக்கு உன் பெயர் சொல்கிறேன்,
இன்னும் தேனாய் இனிக்கிறது
எவ்வளவு நேரம் நடக்கும் இந்த பெயர் மாற்றம்?

சொற்கள் விழுகின்றன, வாக்கியங்கள் நிரம்பவில்லை
வாக்கியங்கள் விழுகின்றன, சொற்கள் நிரம்பவில்லை
இரண்டும் விழுகின்றன, நாம் நிரம்பவில்லை

முப்பது நிமிடங்களில் முன்னூறு முறை இறந்துவிட்டேன்
ஒப்புக் கொள்கிறேன்,
காதல் எனும் நடுக்கம் பெற்றவர்களில் நானும் ஒருவன்

ஆண் மகனுக்கும் வெட்கம் வருதடி
எப்படியாவது சொல்லிவிட வேண்டும்
'நானும் உன்னைக் காதலிக்கிறேன்' என்று

அறுபதாவது நிமிடத்தில்
நாவிற்கு வந்துவிட்டது தைரியம்
உரக்கச் சொல்கிறேன் 'என் காதலை'

காதலைச் சொல்லிவிட்ட குதூகலம்,
நீயும் சொல்லிவிட்டால் போதுமடி
மோட்சம் பெற்றுவிடுவேன்

மோட்சமடைகிறேன் நான்.
வெட்கம், காதல் எனும்
இரு மொழிகளில் சம்மதம் சொல்கிறாய்

தவங்கள் எல்லாம் இப்போது வரங்கள்
கனவுகள் எல்லாம் இப்போது நிஜங்கள்
நான் எல்லாம் இப்போது நீ
நீ எல்லாம் இப்போது நான்

தொண்ணூறாவது நிமிடம்
காதல் மேகங்கள் பொழிய ஆரம்பித்து விட்டன,
இனியெல்லாம் காதல் மழையே

புதுக் காவியத்தை வரைய ஆரம்பிக்கிறேன்
இந்த தொண்ணூறு நிமிடங்கள் எனும்
வண்ணங்களைக் கொண்டு

June 10, 2012

கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை


கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறேன்,
விதைத்த கவிதை விதைகள்
எல்லாம் மலர்களாய் மலர்ந்து இருக்கின்றன
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

நிலவு உதிப்பதில் நான் விடிகின்றேன்
கதிரவன் உதிப்பதில் நான் இரவாகிறேன் ,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

மலர்கள் பறித்த பின்
செடி அழும் குரல் கேட்கிறது,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

ஆயிரம் ஒத்திகைக்குப் பின்
உன் மேடையில் என் முதல் காதல் கடிதத்தின் அரங்கேற்றம்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

உனக்கான முத்தங்களை சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன்,
எண்ணிக்கை வேண்டுமா?
விண்மீன்களை எண்ணிப் பார்த்துக் கொள்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

உன் புடவையின் வண்ணங்களுக்கு
ஏங்குகிறது என் வானின் வானவில்,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

சந்தித்த முதல் நாளிலேயே உனக்கும் எனக்கும் சண்டை,
என் முத்தமா, உன் வெட்கமா?
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

ஒரு முனையில் நீ, மறுமுனையில் நான்
இணைக்கும் பலமாய் நடுவே கெட்டிமேள நாள்,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

உன்னோடு இருக்கும் நொடிகளை நீளச் சொல்கிறேன்
நீ இல்லாத நாட்களை இறக்கச் சொல்கிறேன்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

நீ இதழ் திறந்து சம்மதம் சொல்.
நான் இதழ் மூடி சம்மதம் சொல்கிறேன்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

June 08, 2012

என்னதான் நான் பழக்கி வைத்தாலும்,
நீ அழைத்தவுடன் உன்னிடம் ஓடிவிடுகிறது
நான் படும் வெட்கம்
- கணவன், நீ ஒரு காதல் கயவன்

June 07, 2012

மூன்று வாசங்கள் வீசும்
ஒரு அதிசய மலர் உன் புடவை,
தனியே இருக்கையில் ஒன்று
நீ அணிகையில் ஒன்று
நமக்கு இடையில் போராடுகையில் இன்னொன்று
ஒற்றை வார்த்தையில்
பல வாக்கியங்கள் பேசுபவள் நீ,
இன்று ஏனோ மௌனமானாய்
இறந்துபோயிற்று என் மொழி
உன் இசை இல்லாமல்
பாடலாகும் வரங்களை இழக்கின்றன
என் கவிதை வரிகள்
- நீ இல்லாமல், நான் ஏது?

June 06, 2012

ஒரே எண்ணிக்கையில்
உன் முத்தங்கள் கிடைத்த பொழுதும்
கன்னங்களை விட,
உதடுகள் ஏனோ விரைவாய் வாடிப் போகின்றன
படுக்கையில் என் கரங்களின் எல்லைக்குள்ளும்
சமையலறையில் என் பார்வையின் எல்லைக்குள்ளும்
உன்னை வைக்கச் சொல்கிறது இந்த பெண் மனது
- உன் வாசம் வீசும், நம் சமையலறை
என் சமையல் பாடங்களை விட
கள்ளன் உன், சமையலறைப் பாடங்கள் மிக அதிகம்
- உன் வாசம் வீசும், நம் சமையலறை
ஒரு உதட்டில் தேநீர் வாசம்
மறு உதட்டில் உன் வாசம்
- உன் வாசம் வீசும், நம் சமையலறை

June 05, 2012

பின்னிரவு மழை மேகங்களுக்கு
நடனம் ஆடுகின்றன
நம் முன்னிரவு முத்த மயில்கள்
பின்னிரவுக் கோலங்களுக்கு
புள்ளிகள் வைக்கின்றன,
நம் முன்னிரவு முத்தங்கள்
பின்னிரவுக் காவியங்களுக்கு
முன்னுரை வரைகின்றன
நம் முன்னிரவு முத்தங்கள்

June 03, 2012

நாளெல்லாம் நிலவுக் கவிதைகள்,
நாள்காட்டியில் இன்று அமாவாசை
- ஆமாம், நானும் ஒரு காதல் கவிஞன்

June 01, 2012

நேற்றைய அத்தியாயத்தின் கடைசி வரியும்
இன்றைய அத்தியாயத்தின் முதல் வரியுமாய்,
 சிதறிக் கிடக்கின்றன மல்லிகை இதழ்கள்
- இன்னும் நீளட்டும் இந்த இரவு
பகலெல்லாம் நீயும் நானும்
வேறு வேறு வண்ணம்,
இரவெல்லாம் நீயும் நானும் வர்ணஜாலம்
- இன்னும் நீளட்டும் இந்த இரவு

May 31, 2012

முற்பாதியில் உன்னை நெருங்கச் சொல்லியும்
பிற்பாதியில் விடியலை தள்ளிப்போகச் சொல்லியும்
போராட்டம் நடத்துகின்றன என் நிமிடங்கள்
- இன்னும் நீளட்டும் இந்த இரவு